இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பணிப்புரை விடுத்துள்ளார்.
கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் விக்ரமசிங்க, பணிப்பாளர் சபை உறுப்பினர்களான நிபுன வஹாலதந்திரி, காமினி விஜேசேகர உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களையும் உடனடியாக பதவி விலகுமாறு அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
நுவரெலியா – ரதெல்ல பகுதியிலுள்ள இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்திற்கு சொந்தமான காணியொன்றை, தனியார் துறைக்கு குத்தகை அடிப்படையில் அனுமதியின்றி வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரியவருகின்றது.