ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேல் புரிந்த யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணைகள் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் ஆரம்பம்

Date:

நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றிவியல் நீதிமன்றம் இஸ்ரேலுக்கு எதிரான யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை தொடங்கவுள்ளதாக கடந்த வார முற்பகுதியில் அறிவித்துள்ளது. 1967ல் இடம்பெற்ற யுத்தம் முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் புரிந்துள்ளதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் பற்றியே விசாரணைகள் இடம்பெவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICC எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதான வழக்குத் தொடுனர் படோ பென்சஓடா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். கிழக்கு ஜெரூஸலம் உற்பட காஸா பள்ளத்தாக்கு மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் பல யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவை பற்றி விசாரிக்கப் போதிய சான்றுகள் உள்ளதாகவும் படோ பென்சஓடா 2019ல் அறிவித்திருந்தார். அதன் தொடராகவே தற்போதைய விசாரணைகள் ஆரம்பமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்தில் ICC  இன் அதிகாரத்தை நிலைநிறுத்துமாறும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுள்ளார்.
பலஸ்தீன மக்களுக்கும் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக நீடிக்கும் அவர்களின் பிரச்சினைகளுக்கும் தார்மிக ரீதியான நியாயம் கிடைக்க வேண்டும்.

மேலும் இந்த விசாரணையானது இஸ்ரேல் அதன் ஆக்கிரமிப்புக்கு உற்பட்ட பகுதியில் புரிந்துள்ள யுத்தக் குற்றங்கள் பற்றிய ஆயிரக்கணக்கான ஆவணங்களைப் பரிசீலிக்கவும், சாட்சிகளை விசாரிக்கவும் பலஸ்தீனர்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று பென்சஓடா இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளை மேற்கொள்ள எடுக்கப்பட்டுள்ள் இந்த முடிவானது ஐக்கிய நாடுகள் தீர்மானங்கள் 242 மற்றும் 338 என்பனவற்றின் பிரகாரம் பலஸ்தீன மக்களின் சுயாட்சி அதிகாரத்துக்கான உரிமையை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அத்தோடு ஐ.நா தீர்மானம் 194இன்படி பலஸ்தீன மக்கள் தமது தாயக பூமிக்குத் திரும்பிச் செல்லவும் இது வழியமைக்கும். இந்த மக்கள் தற்போது பல்வேறு இடங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளமை குறிப்பிட்த்தக்கதாகும்.

இஸ்ரேலின் முன்னாள், இந்நாள் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் பெரும்பாலும் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹ{ உற்பட இந்த விசாரணைகளின் போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வாய்ப்பு உண்டு. ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதியில் யுத்தக் குற்றங்கள் புரிந்தமை மற்றும் சாதாரண சட்டங்கள் கூட மீறப்பட்டமை என்பனவற்றுக்கு இவர்கள் அனைவருமே பொறுப்புக் கூற வேண்டியவர்கள்.
நூற்றுக் கணக்கான இஸ்ரேலியர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரும் பதில் நீதி அமைச்சருமான பெனி கான்ட்ஸ் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பலஸ்தீன மனித உரிமை சட்டத்தரணிகள் கூட்டணி இந்த முடிவை பெரு மகிழ்வோடு வரவேற்றுள்ளறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதை நோக்கிய நகர்வில் இக்கட்டான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகவும் முக்கியமான ஒரு நகர்வாக இதை தாங்கள் கருதுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குற்றங்களைச் செய்து விட்டு சட்டத்தில் இருந்து தப்பிக் கொள்ளும் விடுபாட்டு உரிமையை முடிவுக்கு கொண்டு வரும் விடயத்தில் இந்த விசாரணைகள் ஒரு அடையாளச் சின்னமாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறேனும் எதிர்ப்பார்த்த படியே இஸ்ரேல் ICC  இன் முடிவைக் கண்டித்துள்ளது.

அவர்கள் இவ்வாறு கண்டிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முதலாவது இந்த முடிவானது யுத்தக் குற்றங்களைத் தெளிவாகக் கண்டிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது. இஸ்ரேல் இராணுவம், அரசியல் தலைவர்கள், புதிய குடியேற்றவாசிகள் என பலர் இத்தகைய குற்றங்களைப் புரிந்துள்ளனர். எனவே இவர்களுள் பலரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்படலாம் என இஸ்ரேல் அஞ்சத் தொடங்கி உள்ளது. மேலும் பலவந்தமாக அபகரிக்கப்பட்ட பலஸ்தீன நிலங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கு அவற்றில் வாழ்ந்த குடும்பங்களுக்கும் இஸ்ரேல் பாரிய அளவில் நிதி ரீதியான நட்டஈட்டை வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

அடுத்தது ICC  எடுத்துள்ள இந்த முடிவானது மேற்குக்கரை, ஜெரூஸலம் மற்றும் காஸா என்பனவற்றின் சட்ட ரீதியான அந்தஸ்த்தை அங்கீகரிப்பதாகவும் உள்ளது. பலஸ்தீனர்களின் பூமியான இந்தப் பிரதேசம் இன்னமும் ஆக்கிரிக்கப்பட்ட பிரதேசமாகவே உள்ளது. இந்த பூமியை ஆக்கிரமித்துள்ள சக்தியான இஸ்ரேலின் இந்தப் பிரதேசங்கள் மீதான நடைமுறையில் உள்ள இறையாண்மை இன்னமும் தற்காலிகமானதே.
அதற்கு அடுத்ததாக ICC  இல் உறுப்புரிமை பெறும் பலஸ்தீனத்தின் அந்தஸ்த்தை இதுவரை இஸ்ரேலும் அமெரிக்காவும் சவாலுக்கு உற்படுத்தி வந்துள்ளன. ஐஊஊ இன் இந்த முடிவின் மூலம் இந்த முயற்சிகள் யாவும் இப்போது முறியடிக்கப்பட்டுள்ளன. பலஸ்தீனம், தான் சம்பந்தப்பட்ட விடயங்களை சர்வதேச நீதிமன்றத்தில் கையாளுவது சட்ட விரோதமானது என்ற அமெரிக்க இஸ்ரேல் நம்பிக்கையும் இதன் மூலம் சிதைக்கப்பட்டுள்ளது.

அடுத்து தன்னால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை தன்னோடு இணைத்தக் கொள்ளும் இஸ்ரேலின் முயற்சிக்கும் இந்தத் தீர்மானத்தின் மூலம் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஜெரூஸலத்தை தன்னோடு இணைத்துக் கொள்ளும் இஸ்ரேலின் முயற்சிக்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜெரூஸலம் நகரின் மீது தனக்கு இறையாண்மை உள்ளதாகப் பிரகடனம் செய்து அதனை தனது தலைநகராகவும் இஸ்ரேல் அண்மைக் காலத்தில் அறிவித்திருந்தது. இப்போது ICC  எடுத்துள்ள தீர்மானத்தின் படி ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக் கொண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த பிரகடனமும் செல்லுபடியற்றதாகி உள்ளது. டிரம்ப் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் ஜெரூஸலத்துக்கு மாற்றி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அடுத்து இந்த முடிவானது இஸ்ரேல் பற்றிய போலியான மனோநிலை மாயையையும் சிதைத்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள ஒரேயொரு ஜனநாயக நாடு இஸ்ரேல்; தான் என்று மேற்கு உலகிலும் ஏனைய உலக அரங்குகளிலும் இஸ்ரேல் மேற்கொண்டு வந்த பிரசாரத்துக்கும் இந்தத் தீர்மானம் முடிவு கட்டி உள்ளது. மாறாக இஸ்ரேல் ஒரு காலணித்துவ குற்றவியல் சக்தி அது யுத்தக் குற்றங்கள் புரிந்த ஒரு ஆக்கிரமிப்புச் சக்தி, மனித குலத்துக்கு எதிரான பல குற்றங்களைப் புரிந்த ஒரு சக்தி பலஸ்தீன மக்களை இன ஒழிப்பு, இனச் சுத்திகரிப்பு மற்றும் இனரீதியாக சம்ஹாரம் புரிந்த ஒரு சக்தி என்பதே இந்தத் தீர்மானத்தின் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ள விடயமாகும்.
பிரபல பத்தி எழுத்தாளர் ஜொனதன் குக் எழுதி உள்ள ஒரு ஆக்கத்தில் “ICC  தீர்மானம் இஸ்ரேலிய அதிகாரிகள் பலரை அச்சம் கொள்ளச் செய்துள்ளது. அவர்களுள் பலரை தற்போது விசாரணைக்கு உற்படுத்தலாம். ஆனால் அவர்கள் மிகத் தீவிரான அச்சுறுத்தல்களோடு அதற்கு பதில் அளிப்பர் என்பதையும் மறந்து விடக் கூடாது.

எவ்வாறாயினும் யுத்தக் குற்றங்களுக்காக இஸ்ரேலியர்களை விசாரிப்பதற்கான கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகத் தான் இஸ்ரேலின் அரசியல் தலைமை இந்த முடிவுக்கு எதிராக தனது கடுமையான எதிர்ப்பைக் காட்டத் தொடங்கி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்
ICC இன் பிரதான வழக்குத் தொடுனர் படோ பென்சஓடா
நீதிமன்ற அதிகாரிகள் ஏற்கனவே மூன்று வெவ்வேறு விதமான விசாரணைகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி உள்ளனர்.

1)காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள். இந்தத் தாக்குதல்கள் காரணமாக பெருமளவான பலஸ்தீன பொது மக்கள் மரணத்தை தழுவி உள்ளனர்.

2) காஸா சுற்றுப்புற தடுப்பு வேலி பகுதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது இஸ்ரேல் வேண்டுமேன்றே மேற்கொண்ட அடுத்தடுத்த துப்பாக்கிப் பிரயோகங்கள்

3) பலஸ்தீனப் புகுதிகளில் பல தசாப்தங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் சட்ட விரோத குடியிருப்புக்கள். இவை வேண்டுமென்றே பலஸ்தீன மக்களை இனச் சுத்திகரிப்பு செய்யும் நோக்கில் புதிது புதிதாய் உருவாக்கப்பட்டவை.

இஸ்ரேல் புரிந்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கான ஒரு சிறிய உதாரணம்
நெத்தன்யாஹ{வின் தற்போதைய எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவாக இருப்பினும் இஸ்ரேலின் இராணுவத் தளபதிகள், அரசாங்க அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் என்றாவது ஒரு நாள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் சாத்தியம் உள்ளது என அவர்களது சட்ட ஆலோசகர்களே அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளனர் என்பதே யதார்த்தமாகும். எனவே தான் இத்தகைய நிலையில் உள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் போது அவர்கள் கொண்டு செல்லும் கையடக்க தொலைபேசிகளில் விஷேட பொத்தான் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும்.

எங்காவது ஒரு வெளிநாட்டு விமான நிலையத்திலோ அல்லது வேறு இடங்களிலோ அவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளுர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டால் உடனடியாக அவர்கள் இந்த பொத்தானை அழுத்துவார்கள். அது உடனே சம்பந்தப்பட்ட ராஜதந்திர நிலையங்களுக்கு தகவலை அனுப்பி வைக்கும்.

எவ்வாறேனும் இஸ்ரேலுக்கு எதிரான விசாரணைகள் பெரும்பாலும் சட்டத்தை சார்ந்ததாக அன்றி அரசியலை சார்ந்ததாகவே இருக்கப் போகின்றது என்ற உண்மையையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இது விசாரணைகளுக்கு பெரும் குந்தகமாக அமையும். ஆனால் பலஸ்தீனத்துக்கு ஒப்புதல் அளித்த 2015ம் ஆண்டின் ரோமச் சட்டத்துக்கு மிக நீண்ட நாற்கள் முன்னிருந்தே அந்த மக்களுக்கு எதிராக இஸ்ரேல் புரிந்து வந்த யுத்தக் குற்றங்கள் மிகவும் வெளிப்படையானவை.
உண்மையில் சொல்வதாக இருந்தால் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டதே ஒரு மிகப் பெரிய யுத்தக் குற்றமாகும். 1947ல் பலஸ்தீன பூமியில் பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வந்த மக்களை கதறக் கதறத் ஆயத முனையில் துரத்தி அடித்து விட்டு மேலும் பலரை கொன்று குவித்துவிட்டு அந்த பூமியை அபகரித்து உருவாக்கப்பட்டது தான் இஸ்ரேல் என்ற நாடு. விரட்டியடிக்கப்பட்ட மக்கள் இன்னமும் அண்டை நாடுகளில் அகதி முகாம்களில அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். மத்திய கிழக்கு முழுவதையும் ஆட்டம் காணச் செய்து அந்தப் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் கடந்த 75 வருடங்களாக அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது.

லத்தீப் பாரூக்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...