இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பார்வையில் நிறைவேறியதை அடுத்து, அந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அமுல் செய்யும் நடவடிக்கைகளை மனித உரிமைப் பேரவை உடனடியாகத் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற் கட்டமாக மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் இலங்கை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் தீவிர கண்கானிப்பின் கீழ் உடனடியாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது சேவையில் உள்ள மனித உரிமை ஆணையாளர் அலுவலக ஊழியர்களின் துணையோடு இந்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. காலப் போக்கில் இந்த ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறு மட்டங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடவடிக்கைகளை அமுல் செய்வதற்காக மேலதிகமாக 285கோடி 60 லட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவி மனித உரிமை ஆணையாளர் அவுலகத்துக்கு தேவைப்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இவ்வாண்டு இறுதியில் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கான அனுமதி கிடைத்ததும் மேலதிக ஊழியர்களை நியமித்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப் படுத்தும் விடயங்களில் பணியாற்ற மேலதிகமாக 12 ஊழியர்கள் தேவைப்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கைக்கு உடனடி தாக்கங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும் நீண்ட கால அடிப்படையில் இந்தத் தீர்மானம் பல தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். சில நாடுகளுடனான வர்த்தகம், இலங்கைக்கும் சில நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள் என்பனவற்றில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.