ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஒவ்வொருவருடமும் மார்ச் 22 ஆம் திகதி உலகெங்கும் நீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவதும் நீரே. நீரின்றி உலகமே இல்லை.எல்லா வளங்களுக்கும் மூலவளமும் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது. நீர்வளத்தின் முக்கியத்துவம் எல்லாக் காலங்களிலும் உணரப்பட்டு வந்துள்ளது.
1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993 ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது புகழ்பெற்ற உலக நாகரிகங்கள் எல்லாம் நீர் நிலைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றியுள்ளன. நைல் நதி, சிந்து நதி போன்றன உலக நாகரிகங்களின் பிறப்பிடங்கள் எனப்படுகின்றது. எனவே இத்தகைய நாகரிக எழுச்சியின் மூலமே நீர் என்பது புலனாகின்றது.
நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும்.
இவ்வாறு மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தும் நோக்கமாக ஒவ்வொரு வருடமும் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
நகரமயமாக்கல் பல்வேறு நீர்ப்பிரச்சினைக்குக் காரணமாகின்றது. குடிநீர் போதாமைஇ சுகாதாரம் பேணப்படாமை மற்றும் நீர் மூலம் உண்டாகும் வியாதிகள் என்பவற்றுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.
2003 இல் 58வது ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற தீர்மானம் ஒன்றின் படி 2005 முதல் 2015 வரையான காலப்பகுதி ‘பத்தாண்டுகளுக்கு உயிர் வாழ்வதற்கு நீர்’ எனும் அனைத்துலக செயல் திட்ட காலமாக அறிவிக்கப்பட்டது. 2005ம் ஆண்டு மார்ச் 22ம் நாளன்று இந்த நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டுக்கான உலக நீர் தினம் யுனெஸ்கோவினால் ‘நீரும் கலாசாரமும்’ என்ற தொனிப்பொருளிலும் , 2007ஆம் ஆண்டு , ‘நீர் பற்றாக்குறையுடன் ஒத்துழைப்பது’ என்ற தொனிப்பொருளிலும் நடைபெற்றது. கடந்த வருடம் ஏன் நீரினை வீணாக்கவேண்டும் என்ற தொனிப்பொருளில் இந்த தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது . எனவே ஒவ்வொரு துளி நீரும் விலைமதிப்பற்றது என்று எண்ணி நாம் நடந்து கொள்ள வேண்டும்.