உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என இதுவரை பெருமையாகக் கூறி வந்த இந்தியாவின் இன்றைய ஜனநாயகம் தரம் குறைந்து வரும் ஒரு ஜனநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜனநாயகம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியிடப்பட்ட மூன்று சர்வதேச மதிப்பீடுகளில் இந்தியாவின் இன்றைய ஜனநாயகம் தரம் குறைந்த ஜனநாயகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்பான பிரீடம் ஹவுஸ் இம்மாத முற்பகுதியில் வெளியிட்டுள்ள அதன் வருடாந்த மதிப்பீட்டு அறிக்கையில் இந்தியாவின் ஜனநாயகம் ஒரு பகுதி அளவான சுதந்திர ஜனநாயகமாகவே காணப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளது.
சுவீடனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் விடெம் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் இந்தியாவின் இன்றைய ஜனநாயத்தைக் கடுமையாகச் சாடி உள்ளது. இந்தியா தேர்தல் தொகுதி ரீதியான சர்வாதிகார கலாசாரத்தை பின்பற்றத் தொடங்கி உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட த இக்கொனமிஸ்ட் சஞ்சிகையின் புலனாய்வு அறிக்கையில் இந்திய ஜனநாயகம் பூரணமற்ற குறைபாடுகள் மிக்க ஜனநாயகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் ஜனநாயகப் புள்ளி விவரப்படி இந்தி;யா முன்னர் இருந்த நிலையில் இருந்து இரண்டு இடங்கள் பின்தள்ளிச் சென்று 53வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் இன்றைய ஜனநாயகப் பின்னடைவுக்கு இந்தியப் பிரதமர் நரோந்திர மோடியும் அவரது இந்துத்வா தேசிய வாத அரசின் கொள்கைகளுமே காரணம் என்று இந்த மூன்று சர்வதேச அறிக்கைகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோடியின் தலைமை மற்றும் கண்கானிப்பின் கீழ் மனித உரிமைக் குழுக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது நெருக்குதல்கள் பிரயோகிக்கப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது அச்சுறுத்தல்கள் பிரயோகிக்கப்படுகின்றன. சிறுபான்மை இனத்தவர்கள் மீது குறிப்பாக முஸ்லிம்கள் மீது இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தக் காரணங்களால் தான் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசியல் சுதந்திரம் என்பன இன்று நலிவடைந்து வருவதாக இந்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.