இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பமான வன்முறைகள் தொடர்கின்ற அதேவேளை பங்களாதேசின் கடும்போக்கு தீவிரவாத குழுக்கள் இந்து ஆலயங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளன என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸாரையும் பத்திரிகையாளர்களையும் மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ள ரொய்ட்டர் மோடியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் பங்களாதேசின் பல பகுதிகளிற்கு பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பங்களாதேசின் பிரஹ்மன்பரியா என்ற பகுதியில் அமைப்பின் உறுப்பினர்கள் புகையிரத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பத்துபேர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் புகையிரதத்தை தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதி எரிகின்றது பல அரச அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன ஊடககழகம் கூட தாக்கப்பட்டுள்ளது,அதன் தலைவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர் நாங்கள் பெரும் அச்சத்தின் பிடியில் சிக்குண்டுள்ளோம் என அந்த பகுதியை சேர்ந்த ஜாவிட் ரஹீம் என்ற பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
அந்த நகரின் பல இந்து ஆலயங்களும் தாக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
மோடி சில நாட்களிற்கு முன்னர் பங்களாதேசிற்கு விஜயம் மேற்கொண்ட தருணம் முதல் அங்கு வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்கள் இஸ்லாமியர்களை பாரபட்சமாக நடத்துகின்றனர் என பங்களாதேசின் இஸ்லாமிய குழுக்கள் தெரிவித்துள்ளன.