`லேசான அறிகுறிகளோடு கொரோனா’ – வீட்டுச் சிகிச்சையில் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்னென்ன?

Date:

உங்களுக்கோ உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ லேசான அறிகுறிகளோடு (mild symptoms) கொரோனா தொற்று இருப்பின் அவர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும்போது நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இந்நிலையில் மிக லேசான தொற்று பாதிப்பு இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுக்கோ உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ லேசான அறிகுறிகளோடு (mild symptoms) கொரோனா தொற்று இருப்பின் அவர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் போது நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வீட்டிலிருந்தபடியே கொரோனாவிலிருந்து மீளச் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை:

* உடனடியாக உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். தனியாக எல்லா பொருள்களையும் பயன்படுத்துவது. தனி கழிப்பறை பயன்படுத்துவது எனப் பாதுகாப்பாக இருங்கள்.

* ஜூஸ் போன்ற திரவ உணவு அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். அதிக புரதச் சத்துள்ள (protein) உணவினை உட்கொள்ளுங்கள்.

* நிறையத் தண்ணீர் குடியுங்கள். ஒரு நாளில் 8 லிருந்து 10 கிளாஸ்வரை தண்ணீர் அருந்த வேண்டும்.

* உங்கள் சிறுநீர் எப்போதும் தெளிவாக வெள்ளை நிறத்தில் இருக்கிறதா எனக் கவனியுங்கள்.

* நிறைய ஓய்வெடுங்கள்.

* லேசான தலைவலி, காய்ச்சல் இருப்பின் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு ‘பாரசிட்டமால்’ மருந்தினை உட்கொள்ளுங்கள்.

* தொண்டை கரகரப்பிற்கு எலுமிச்சம் சாறு மற்றும் தேன், இருமல் மருந்து, சளிக்கு ஆவி பிடித்தல் போன்ற வழக்கமான வீட்டுச் சிகிச்சை முறைகளைப் பின்பற்றுங்கள்.

* சானிடைசர் பயன்படுத்தும்போது அதில் ஆன்டிவைரல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா என செக் செய்து கொள்ளுங்கள். அல்லது அதில் 60 சதவிகிதத்திற்கு மேல் ஆல்கஹால் உள்ளதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.

* ஏழு நாள்களுக்கு மேல் ஆகியும், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

* ஒரு நாளில் குறைந்தது பத்து முறையேனும் உங்கள் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவினைத் தொடர்ந்து கண்காணியுங்கள். ஆக்சிஜன் அளவு 94க்கு கீழ் குறைந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

* கோவிட் 19 ஒரு வைரஸ். அதற்கு எதிராக வீட்டிலிருக்கும் ஆண்டிபயாடிக் (antibiotic) மருந்துகள் பயன்படுத்தாதீர்கள். ஆன்டிபாக்டீரியல் கிருமி நாசினிகளும் பயனளிக்காது.

* மருத்துவரின் பரிந்துரையின்றி ரெமிடிஸ்விர், ஸ்டெராய்டு மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்.

* உங்களுக்கு கோவிட்-19 இருக்கிறது என்றோ, இல்லையென்றோ நீங்கலாக ஒரு முன்முடிவிற்கு வராதீர்கள். முறையாகப் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

* உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை மருத்துவரிடம் சொல்லிக் கலந்தாலோசித்துக் கொண்டு வீட்டில் இருப்பதா, அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதா என முடிவெடுங்கள்.

* குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, அனைவரும் வீட்டுச் சிகிச்சையிலிருந்தாலும், உங்களுக்குள் தனிமைப்படுத்துதலைக் கடைப்பிடியுங்கள்.

* மது அருந்துவதைத் தவிருங்கள். அது உங்களை நீரிழப்புக்கு (dehydrate) உள்ளாக்கும். மேலும், கொரோனா நோய் தொற்று இருப்பவர்கள் மது அருந்தினால் கல்லீரல் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

* வீட்டினுள் நடமாடினால் கட்டாயம் மாஸ்க் அணியுங்கள். அடிக்கடி கை கழுவுங்கள்.

* வேறொருவருக்கு கொரோனா பாதித்து, அவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த அதே மருந்துகளை நீங்களும் வாங்கி உட்கொள்வது ஆபத்தானது. ஒருவருக்கு ஒரு மருந்து கொடுக்கலாமா கூடாதா என்பதை மருத்துவர் மட்டுமே முடிவு செய்ய முடியும்.

* கொரோனா பாதித்த ஒருவர், குறைந்தது 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது அவசியம்.

* வாயை மூடிக்கொண்டு, மெதுவாக மூக்கின் வழியே காற்றைச் சுவாசித்து, வாயின் வழியே காற்றை வெளியேற்றி மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.

* மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு பகுதியில் வலி, அழுத்தம், முகம் மற்றும் உதடுகள் நீல நிறமாக மாறுதல், விழித்திருக்க முடியாமல் இருப்பது போன்ற எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் உடனே மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

கொரோனா ஒரு கொடிய நோய்த்தொற்று என்பதில் சந்தேகமில்லை. அதற்காக யாரும் அஞ்சுவதில்லை பலனில்லை. மாறாக முறையான முன்னெச்சரிக்கை நடைமுறைகள், பாதுகாப்பு வழிமுறைகள், மருத்துவர்களின் வழிகாட்டுதல்கள் இவற்றைப் பின்பற்றுவது அவசியம். அதுவே நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்குமான பாதுகாப்பிற்கு உத்தரவாதம்.

நன்றி விகடன்

Popular

More like this
Related

இஸ்ரேல் சட்டங்களை மீறியமைக்காக 9 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள்,...

இந்தியாவின் RAW மற்றும் RSS மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரை: அமெரிக்க ஆணையத்தின் அதிரடி அறிக்கை!

இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான...

7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம...

நல்லிணக்கம், சகவாழ்வு கலாசாரத்தை நோக்கிய தேசிய இளைஞர் இப்தார் நிகழ்வு

சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும்...