கொவிட் -19ஆல் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் மூவரில் ஒருவருக்கு நீண்ட கால உளவியல் ஆரோக்கிய பிரச்சினைகள் அல்லது மூளையோடு தொடர்புடைய நரம்பியல் பிரச்சினைகள் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஆய்வின் மூலம் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் 34 வீதமானவர்கள் உளவியல் அல்லது நரம்பியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைகளுக்கு ஆளாகி உள்ளமை தெரிய வந்துள்ளது. உளவியல் தொடர்பான அமெரிக்காவின் பிரபல சஞ்சிகை ஒன்று இந்த ஆய்வை நடத்தி உள்ளது. இந்த விடயம் தொடர்பாக விரிவான முறையில் நடத்தப்பட்டுள்ள முதலாவது ஆய்வு இதுவாகும்.
கொவிட்டால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் 17 வீதமானவர்கள் பதற்ற நிலைக்கு ஆளாகி உள்ளனர். மேலும் 14 வீதமானவர்கள் மனநிலைக் கோளாறுக்கு ஆளாகி உள்ளனர். இன்னும் கணிசமான சத விகிதத்தினர் மோசமான நரம்பியல் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர். கொவிட்டில் இருந்து மீண்டவர்களில் 39 வீதமானவர்கள் மீண்டும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோய் தாக்கம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த நிலை மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாகவும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.