இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருக்கும்போது 65 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த மோடி அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் இந்திய அரசைக் கண்டித்து சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ‘வாஷிங்டன் போஸ்ட்’ தளத்தில் இந்தியாவின் கொரோனா நிலை குறித்து சுபர்ணா செளத்ரியும், சுபா கமலா பிரசாத்தும் இணைந்து ஒரு கட்டுரை எழுதி உள்ளனர்.
சமய நிகழ்ச்சிகளும், தேர்தல் பிரசாரங்களும்!
‘’இந்தியாவின் தற்போதைய கொரோனா நிலைக்கு சமயம் சார்ந்த நிகழ்ச்சி நிரல்களும் ஒரு காரணம். உத்தரகாண்டில் நடந்த கும்பமேளா கொரோனா தொற்றுப் பரவலை இந்தியாவில் தீவிரப்படுத்தியது என்றால், இன்னொரு பக்கம் தேர்தல் பிரசாரங்களும் கொரோனா தொற்று பரவலுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. கொரோனா விஷயத்தை மோடி அரசு சரியாகக் கையாளவில்லை என மக்கள் கோபமாக இருக்கிறார்கள். இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருக்கும்போது 65 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த மோடி அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கொரோனா தடுப்பூசி விலையை ஒழுங்குபடுத்துவதில் தளர்வுகளை இந்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக விலை உயரும். ஏழை மக்கள் அதிகமாக வாழும் இந்தியாவில், மக்களால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது’’ என அவர்கள் தங்களது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்களைக் கைவிட்ட இந்திய அரசு?!
‘தி கார்டியன்’ தளம் இந்தியாவின் நிலை குறித்துத் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. எஸ்.ருக்மணி எழுதி உள்ள ஒரு கட்டுரையில் இந்திய அரசு மக்களைக் கைவிட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். முதல் அலையிலிருந்து பாடங்களைக் கற்கத் தவறியதாக தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் போதுமான சுகாதார வசதி இல்லாமல் தவிப்பதாக கூறி உள்ளார். அரசு கைவிட்டபிறகு மக்கள் ஏதுமற்ற வெளியில் நிற்பதாக அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதே நேரம், பிரேசில் நாட்டின் அதிபர் போல்சொனாரோ போல் அல்லாமல் மோடி இந்த வைரஸை தொடக்கத்திலிருந்தே தீவிரமாக எடுத்துக் கொண்டார். முகக்கவசம் அணிந்தார். ஆனால், கடந்த செப்டம்பருக்குப் பின் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் போய்விட்டது என்று அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ருக்மணியும் தனது கட்டுரையில் தேர்தல் பிரசாரங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். கொரோனா காரணமாக எதிர்க்கட்சிகள் கடைசி நேரத்தில் பிரசாரங்களைத் தவிர்க்க, மோடி பெரும் பொதுக் கூட்டங்களைத் தொடர்ந்தார் என அந்தக் கட்டுரையில் கூறி உள்ளார்.
சுகாதார அவசரநிலை!
பிபிசி தளமும் இந்தியாவின் கொரோனா நிலை குறித்துத் தொடர்ந்து எழுதி வருகிறது. பிபிசியின் இந்திய செய்தியாளர் செளதிக் பிஸ்வாஸ், ‘இந்தியா கொரோனா வைரஸின் இரண்டாவது அலையைத் தடுக்க தவறியது எப்படி?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் தரவுகளுடன் பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறார் செளதிக் பிஸ்வாஸ்.
‘’கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களுக்கு முன் குறையத் தொடங்கிய சமயத்தில் ஏதோ பெரும் வெற்றியைக் கண்டுவிட்ட மனநிலை எல்லாரிடமும் நிலவியது. இப்போதைய நிலைக்கு அதுவும் ஒரு காரணம்’’ என இந்திய பொது சுகாதார மையத்தின் தலைவர் ஶ்ரீநாத் ரெட்டி கூறியதை மேற்கோள் காட்டி உள்ளார் பிஸ்வாஸ்.
இந்தியா இப்போது பொதுச் சுகாதார அவசரநிலை காலகட்டத்தில் இருப்பதாக அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேற்கு ஒரு பக்கம் கடுமையாக விமர்சிக்கிறது என்றால், இன்னொரு பக்கம் கொரோனாவின் தோற்றுவாயாகக் கருதப்படும் கிழக்கு தேசமான சீனாவின் ஊடகங்களும் இந்திய அரசைக் கடுமையாக விமர்சிக்கின்றன.
பொறுப்பற்ற வலிமையற்ற முடிவுகள்!
‘’பொறுப்பற்ற வலிமையற்ற முடிவுகள் தான் இந்தியாவின் இந்த நிலைக்குக் காரணம்’’ என தி சவத் சைனா மார்னிங் போஸ்ட் தளத்தில் சி. உதய் பாஸ்கர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா உச்சத்தில் இருக்கும் போது கும்பமேளா கூட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியது, தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தியது இந்தியாவின் இந்த நிலைக்குக் காரணம் என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது சொந்த நாட்டு மக்களே கொரோனா தடுப்பூசி இல்லாமல் தவிக்கும் போது, வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்ததும் இந்தக் கட்டுரையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
நன்றி விகடன்