அரசாங்கம் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு  முஸ்லிம்களை எதிரியாக வரித்துக்கொண்டுள்ளது -பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம்!

Date:

அரசாங்கம் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக முற்றாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதத்துக்கு பதிலாக, பிரதான துரோகியாக முஸ்லிம் மக்களை வரித்துக்கொண்டு செயற்படுவதை நாங்கள் காண்கின்றோம். அதனடிப்படையிலேயே கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முழு உலக நாடுகளும் அனுமதித்திருந்த நிலையில், முஸ்லிம்களை பழிவாங்கும் வகையில் இலங்கையில் மாத்திரம் எரியூட்டி வந்தனர் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் (05) இடம்பெற்ற கொவிட் 19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இராஜாங்க அமைச்சர் ரணவீர எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பலவற்றை முன்வைத்தார். நாங்கள் அவசியமின்றி பூதங்களை உருவாக்குவதாகக் கூறினார். சமயங்களுக்கிடையே பிளவை உண்டுபண்ணி, இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவற்றினால் பயனடைய எத்தனிப்பதாகவும் கூறினார். அவற்றிற்குப் பதிலளித்தே ஆக வேண்டும்.

 

ஆயினும், எனது உரையின் ஆரம்பத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் காலை வேளையில் கூறிய தேசிய அனர்த்த சபை பற்றிய விடயத்தை வலியுறுத்திப் பேச விரும்புகின்றேன். இராஜாங்க அமைச்சர் ஜயசுமண திசாநாயக்க இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று இந்த விடயத்தைக் கையாள வேண்டும்.

 

இன்னொரு விடயத்தையும் இராஜாங்க அமைச்சர் முன்னிலையில் குறிப்பிட வேண்டியுள்ளது. நிபுணர்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்துத்தான் தீர்மானங்களை மேற்கொள்வதாக அரசாங்கம் அடிக்கடி கூறி வருகின்றது.

 

ஆனால், என்ன நடக்கின்றது? இலங்கை மருத்து சங்கத்தினர் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். கொவிட் – 19 மூன்றாம் அலையின் அச்சுறுத்தல் பற்றிக் குறிப்பிட்டு பல்வேறு காரணங்களை அதில் தெளிவுபடுத்தியுள்ளனர். அக்கடிதத்தின் இறுதியில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து இதுபற்றி கலந்துரையாட நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளனர்.இதுவரையில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து அதற்கு பதிலளிக்கப்படவில்லை. பிரஸ்தாபக் கடிதத்தில் நீண்ட காலமாக இயங்கிவரும் பழைமை வாய்ந்த இச்சங்கத்தினரின் வேண்டுகோள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. அதையிட்டு எனது கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற அவர்களது குழுக் கூட்டத்தில் மருத்துவர்கள், வேகமாக அதிகரித்துவரும் கொவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை பற்றி சுட்டிக்காட்டி ஒட்சிஜன் தேவைப்பாடு, அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கான வசதிகளை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் ஒதுக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் யாவும் ஏற்கனவே நோயாளர்களால் நிரம்பியுள்ள அவல நிலை என்பவற்றினால் பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

 

இங்கு முன்னர் உரையாற்றிய சுகாதார அமைச்சரின் பேச்சில் உப்புச் சப்பில்லை. எதிர்க் கட்சித் தலைவரை தாக்கிப் பேசுவதாகவே அவரது முழு உரையும் அமைந்திருந்தது. சம்பந்தப்பட்ட இந்த முக்கிய விடயம் தொடர்பில் அவர் எந்த விதத்திலும் முனைப்புக் காட்ட வில்லை.

 

விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கமும் ஊடக அறிவிப்பொன்றை விடுத்து அபாயங்களைச் சுட்டிக்காட்டிக் காட்டியுள்ளனர். நிலைமையை உரிய முறையில் கையாள்வதற்கு எந்த விதமான பயனுள்ள செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக இல்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

எங்களது அயல் நாடான இந்தியாவிடமிருந்து இதனால் பாடம் படிக்க நாம் தவறிவிட்டோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

நாட்டில் சுகாதார பாதிப்பு ஏற்படும் போது அதனை கட்டுப்படுத்த சட்டமூலம் ஒன்று இல்லை என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் இருக்கும் சட்டத்தையேனும் பின்பற்றி நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு முடியாமல் போயிருக்கின்றது. அனர்த்த முகாமைத்துவ சட்டம் தற்போதும் அமுலில் இருக்கின்றது. அந்த சட்டத்தினை தற்போது அமுல்படுத்தலாம்.

 

நாட்டில் தேசிய பேரழிவொன்று இருக்கும் போது, அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தேசிய சபை ஒன்றை ஜனாதிபதி அமைக்க முடியும். ஆனால், அந்த நடவடிக்கையை ஜனாதிபதி தட்டிக்கழித்திருக்கின்றார்.

 

மேலும் நாடு எதிர்கொள்ளும் பேரழிவின் போது இந்த சட்டத்தின் அடிப்படையில் தேசிய சபை ஒன்றை ஏற்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. அந்த சபையில் எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் உள்ளடங்குகின்றனர். அது ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்கள் என இரண்டு தரப்பினரும் இணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை தேடிக்கொள்வதற்கான சபையாகும். இந்த சபையை இன்னும் அமைக்காமல் இருப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

 

தேசிய பேரழிவு தொடர்பான சபை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடுவது கட்டாயமாகும். அப்படி இருந்தும் இந்த தேசிய சபை இதுவரை அமைக்கப்படாமல் இருப்பது கவலையளிக்கின்றது. அதனால் விரைவாக இந்த சபையை அமைத்து, எதிர்கட்சியினரையும் இணைத்துக் கொண்டு இந்த கொவிட்-19 பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டும்.

அவ்வாறான நடவடிக்கை யாவும் அரசியல் கலப்பற்றவையாக இருக்க வேண்டும். இல்லையாயின், நாங்கள் இதில் தோற்றுப் போவோம். ஔடதங்கள் ஒன்றுபடுத்தல் சீராக்கல் அதிகார சபையின் தலைவர் லக்குமார் பெர்ணான்டோ உங்களது உத்தரவின் பேரில் அகற்றப்பட்டுள்ளார்.

இந்தக் கட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ஜயசுமண குறுக்கிட்டு, விசேட மருத்துவ நிபுணர் லக்குமார் பெர்ணான்டோ அவரது காலக்கெடு முடிவடைந்துள்ள காரணத்தினால் தான் அந்த சபையிலிருந்து நீங்க வேண்டி நேரிட்டது. யாரும் அவரை அகற்ற முயற்சிக்க வில்லையென்று கூறினார்.

அதற்கு பதிலளித்த ரவூப் ஹக்கீம் எம்.பி. சமுதித்த சமரசிங்க என்ற ஊடகவியலாளருடனான தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சம்பந்தப்பட்ட அந்த மருத்து நிபுணர் யார் மீதும் குறை கூறாவிட்டாலும், மிகவும் மனம் உடைந்த நிலையில் அதுபற்றி கருத்துத் தெரிவித்தார் என்றார்.

சைனோபார்ம் தடுப்பு மருந்தை பயன்படுத்த அனுமதிப்பதில் சட்ட திட்டங்கள் உரிய நடைமுறைகளை அடியொட்டி கையாளப்பட்டிருக்க வேண்டும் என்பதை அவர் தெரிவித்திருந்தார். அவ்வாறு அரசாங்கம் நடந்துகொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இராஜாங்க அமைச்சர் ரணவிர முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கூறுவதனால், கொவிட் நிலைமையை பயன்படுத்திக்கொண்டு மத வேறுபாட்டை ஏற்படுத்த முற்படுவதாக அரச தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அரச பலத்தை பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் மக்கள் வாய்திறக்க முடியாதவகையில், குறிப்பாக, அக்குறணை, அட்டுலுகம போன்ற முஸ்லிம்கள் பரவி வாழும் பிரதேசங்கள் மாதக் கணக்கில் முடக்கிவைக்கப்பட்டிருந்தன. சில கூஜாத்தூக்கி ஊடகங்களும் இதனை தொடர்ந்து காண்பித்து முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில்தான் கொவிட் தொற்று பரவுவதாகப் பிரசாரத்தை மேற்கொண்டுவந்ததையும் நாங்கள் கண்டோம்.

அரசாங்கம் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக முற்றாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதத்துக்கு பதிலாக, பிரதான துரோகியாக முஸ்லிம் மக்களை வரித்துக்கொண்டு செயற்படுவதை நாங்கள் காண்கின்றோம். அதனடிப்படையிலேயே கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முழு உலக நாடுகளும் அனுமதித்திருந்த நிலையில், முஸ்லிம்களை பழிவாங்கும் வகையில் இலங்கையில் மாத்திரம் எரியூட்டி வந்தனர் .

இறுதியில் ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே, அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டி ஏற்பட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இன்று காலை இந்தச் சபையில் மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இன்னொரு “குண்டை”த் தூக்கிப் போட்டார்.

பாராளுமன்ற உறுப்பினரான ரிசாட் பதியுதீனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருக்கும் நிலையில், அவரை சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள எதிர்க் கட்சியால் சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றினார். அந்த விடயத்தில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் மிகவும் கவலைக்குரியது .பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமையையும் வரப்பிரசாதங்களையும் மறுப்பதன் மூலம் எதிர்கட்சியை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...