அஷ்ஷெய்க் ஏ.ஸி அகார் முஹம்மத்.
கிழக்கிலங்கையில் அமைந்துள்ள ஓட்டமாவடி எனும் ஊர் இன்று தேசத்திலும் சர்வதேசத்திலும் பேசப்படும், நன்றியுடன் நினைவு கூரப்படும் ஓர் ஊராக மாறியுள்ளது எனக் குறிப்பிட்டால் அது மிகையாகாது.
இலங்கையில் கோவிட் 19 கொரோனா வைரஸ் தொட்டினால் வபாத்தாகும் எல்லா ஜனாஸாக்களும் இந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இங்குதான் இன்று வரை அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஜனாசாக்கள் இந்த ஊரில் அமையப்பெற்றுள்ள பிரத்தியேக மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊருக்குச் சென்று ஜனாஸா நல்லடக்கமொன்றில் நேரடியாக கலந்து கொண்டவன் என்ற வகையிலேயே இங்கே இப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
கொரோனா தொற்றினால் மரணமடைந்த ஒரு ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்குப் பின்னால் கடும் உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் இருக்கின்றது.
ஆரம்பமாக ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காலத்தில் மருத்துவர்களினதும் தாதிமார்களினதும் ஏனைய மருத்துவமனை உத்தியோகஸ்தர்கள், ஊழியர்களினதும் உழைப்பும் தியாகமும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவொன்று.
சிகிச்சை பயனின்றி அவர் வபாத்தாகிவிட்டால் அடுத்த கட்டமாக ஜனாஸாவை நல்லடக்கத்திற்காக துரிதமாக தயார் படுத்தும் நோக்கத்தோடு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்காக மருத்துவமனை வட்டாரத்துடன் இணைந்து நம் சமூகத்து மௌன போராளிகளான தொண்டர் அணியினருடைய உழைப்பை பலர் கண்டுகொள்வதில்லை.
இந்தப் பணிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட பல சகோதர்கள் தலை நகரிலும் கண்டியிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் ஜனாஸாவை கொண்டு போய் சேர்ப்பதிலும் நல்லடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளைச் செய்வதிலும் இராணுவத்தின் பங்களிப்பு அளப்பரியது.
ஜனாஸா ஒட்டமாவடியை போய் அடைந்ததும் அங்கே ஒரு குழாம் நல்லடக்கப் பணிகளை சுகாதார விதிமுறைகளையும் சன்மார்க்க விதிமுறைகளையும் பேணி இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கனகச்சிதமாக முன்னெடுக்கின்றது.
அந்தப் பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார உத்தியோகத்தர்கள், பிரதேச சபை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொலிஸார் இந்த அணியில் அங்கம் வகிக்கின்றார்கள். இவர்களுடன் ஊர் உலமாக்களும் ஊர் தலைமைகளும்,நலன் விரும்பிகளும் கைகோர்த்து நிற்கின்றார்கள்.
மேற்குறிப்பிட்ட அனைவரும் தமது உயிரைப்பணயம் வைத்து, பெரும் தியாகத்தோடு தமது பணியை செய்துவருவதுதான் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது. எவ்வித கைமாறையும் எதிர்பார்க்காத கர்ம வீரர்கள் இவர்கள்.
இந்தப் பணியில் தேசிய மட்டத்தில் சில அரசியல் தலைமைகளின் பங்களிப்பும் மெச்சத்தக்க விதத்தில் அமைந்திருக்கின்றது என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.
எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்கள் அனைவரது இத்தூய்மையான பணியை ஏற்று அங்கீகரித்து இவர்களுக்கு நிறைவான நற்கூலியை வழங்கியருள்வானாக!
இந்த கொரோனா தொற்றின் ஆபத்திலிருந்து நமது நாடும் உலகமும் விரைவில் விடுபட துணை செய்வானாக!
ஆமீன் யா றப்பல் ஆலமீன்!