அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லொஸ் ஏஞ்சல்ஸ், நியூ யோர்க், பொஸ்டன், பிலடெல்பியா, பிடஸ்பேர்க் உட்பட பல நகரங்களில் அமெரிக்க மக்கள் வீதிகளில் இறங்கி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக் கணக்கான அமெரிக்க இளைஞர்களும் யுவதிகளும் மற்றும் பல்வேறு தரப்பினரும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளனர். பலஸ்தீனத்தை விடுதலை செய்யுங்கள் .பலஸ்தீனத்திற்கு சுதந்திரம் அளியுங்கள். நதியில் இருந்து சமுத்திரம் வரை பலஸ்தீனம் விடுவிக்கப்பட வேண்டும் போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
பலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேலியர்களுக்கு சமமான வாழ்வுரிமை வழங்கப்பட வேண்டும் .ஒரு அணு ஆயுத சக்தி மிக்க நாடு சாதாரண ஒரு பலமற்ற கிராமத்தை சுற்றி வளைத்து தன்னுடைய வான்தாக்குதல் வல்லமையை காட்டிக் கொண்டிருப்பதை இந்த உலகம் எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியும்? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். பலஸ்தீன சிறுவர்களுக்கு இந்த உலகில் வாழும் உரிமை இல்லையா அவர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதை இந்த உலகம் எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டு மௌனம் காக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர் அத்தோடு அமெரிக்க ஜனாதிபதி ஜோய் பிடன் இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு என்று மீண்டும் தெரிவித்திருக்கும் கூற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்மையாகக் கண்டித்தனர். இந்தப் படு கொலை படையினருக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி இருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் மிகவும் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன .