விக்டர் ஐவன்
இலங்கை தேசம் தவிர்க்க முடியாமல் ஒரு பாரிய பேரழிவை சந்திக்கப் போகுது என்றே எனக்குத் தோன்றுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இலங்கை தேசத்தை இத்தகைய படுமோசமான பேரிடரிலிருந்து காப்பாற்றுவதற்கான தொலைநோக்கும், திறமையும், ஆற்றலும் முதிர்ச்சியும் கொண்ட தலைவர்கள் நம்மிடையே இருப்பதாக தென்படவில்லை. எனவே நாட்டில் ஒரு சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், அது ஒரு பாரிய பேரழிவுக்குப் பிறகுதான் ஏற்பட முடியும்.
உயிர்க்கொல்லி நோயான கொரோனா தொற்றுடன் விளையாடல்.
பயங்கரமான கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதில் இலங்கை அரசு முன்னெடுத்த நடிவடிக்கைகள் மற்றும் கடைப்பிடித்த அணுகுமுறைகளை அவதானிக்கும்போதே நாட்டில் நிலவும் கடுமையான தலைமைத்துவ நெருக்கடியை மதிப்பிட்டுக் கொள்ள முடியும். ஆரம்பத்தில் இருந்தே, அரசாங்கம் கொடிய தொற்றுநோயுடன் விளையாட்டுத்தனமான முடிவுகளை எடுப்பதன் மூலம் அலட்சியமாக இருந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
ராணுவத் தளபதியை தனது வலக்கரமாக வைத்துக் கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள், போராளிகளான விடுதலைப் புலிகள் போன்ற கடுமையான சவாலை சமாளித்த எங்களுக்கு கோவிட்-19 ஒரு பெரிய பொருட்டல்ல என்று வீராப்புடன் பேசியுள்ளார். நாட்டில் உயிர்க்கொல்லி நோயான கொரோனா தொற்றை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கைளின் போது விஞ்ஞானத்தை புறந்தள்ளிவிட்டு கட்டுக்கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா கோவிட்-19 தொற்றின் பரவல் அதிகபட்ச உச்சத்தை தொட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதைத் கட்டுப்படுத்துவதற்கான காத்திரமான அணுகுமுறைகளும் உறுதியான கொள்கைகளும் கடைப்பிடிக்கப்படாவிட்டால், அதன் பரவல் தீவிரமடைந்து இறப்பு விகிதமும் வேகமாக அதிகரிக்கும் என்பதே அனைத்து மருத்துவ சங்கங்களின் கருத்தாகும். இந்த அபாய நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு குறைந்தபட்சம் 14ன்கு நாட்களுக்கு தொடராக நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து வைத்தய நிபுணர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையும், அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள தெளிவுரைகளும் அரசாங்கத்தின் எதிர்ப்பை கிளர்ந்துள்ள இந்த வேளையில், இராணுவத் தளபதியும் வைத்தியர்களை விமர்சிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். ‘தி ஐலண்ட்’ பத்திரிகைக்கு, நாட்டில் நிலவும் கோவிட் தொற்றின் நிலைமையை விளக்கிக் கூறிய ஒரு வைத்தியரிடம் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு கேட்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. தொற்றுநோய் பற்றிய விளக்கங்களை பொதுமக்கள் மருத்துவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளாமல் அரசியல்வாதிகளிடமிருந்தா கற்றுக் கொள்வது? 14ன்கு நாட்களுக்கு நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என்ற மருத்துவ சங்கங்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்க மறுத்தது மிகவும் ஆபத்தான ஒரு விஷயமாகும். இது, மனித உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட பொருளாதார இழப்பு குறித்து அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது.
எதிர்க்கட்சியின் இயலாமை
நாட்டை 14ன்கு நாட்களுக்கு முழுமையாக முடக்குவதா இல்லையா என்ற கேள்வியானது நிச்சயமாக மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும். இது குறித்து அரசாங்கம் பின்பற்றும் கொள்கை தவறானது என்றால், நிலைமையை சீர்செய்வதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டிணைந்து உருப்படியான ஒரு கூட்டுமுயற்சியில் பரஸ்பரம் ஈடுபாடு காட்ட வேண்டாமா? நிலைமை இப்படி இருக்கும்போது ஆங்காங்கே தனிப்பட்ட கட்சிகளின் முணுமுணுப்பு குரல்கள் மட்டுமே எமது காதுக்கு எட்டக் கூடியதாக உள்ளது.
குறித்த இவ்விவகாரத்தில் கடுமையான கருத்து வேறுபாடுடைய நான்கு மருத்துவ சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு அறிக்கையை முன்வைக்க முடியுமாக இருந்தால் ஏன் எதிர்க்கட்சியினருக்கு இத்தகைய பொதுவான ஒரு முயற்சியை முன்னெடுக்க முடியாது? இப்படியான நகர்வுகளை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே அரசாங்கத்தின் மீது காத்திரமான ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். அத்தகைய கூட்டு முயற்சி ஒருபோதும் தானாக ஏற்படாது. உண்மையில் இந்த இலக்கை அடைவதற்கு எதிர்க்கட்சியில் உள்ள வலிமைமிக்க ஒரு தலைவரின் தலையீடு கண்டிப்பான தேவையாகும்.
இத்தகைய கூட்டணி செயற்பாடுகள் கோவிட் பிரச்சினைக்கு மட்டுமல்ல ஏனைய பல தோல்வி கண்டுள்ள நாட்டுப் பிரச்சினைகளையும் தீர்க்க உதவும். இதற்கு எத்தகைய சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே அடையாளம் காண்பது அவசியமாகும். அவ்வாறு அடையாளம் காணப்பட்ட சீர்திருத்த திட்டங்கள் குறித்து அனைவரும் உடன்பட்ட கருத்துக்கு வருவதும் அவசியமாகும். இவை யாவும் தானாக உருவாகும் அடைவுகள் அல்ல. இதற்காக கடுமையான உழைப்பும் தியாகமும் தேவைப்படுகிறது.
எமது தலைவர்களின் இயல்பு
இலங்கையின் நெருக்கடி நிலை என்பதை நாட்டுக்கு தேவையான தலைவர்களின் பற்றாக்குறை எனவும் பார்க்க முடியும். இலங்கை தேசமானது சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடியை நோக்கி சரிவடைந்து கொண்டே வந்துள்ளது. இறுதியில் தகுதியான முதிர்ச்சியும் திறமையும் கொண்ட ஜனநாயகத் தலைவர்கள் உருவாகாமையால் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக மாறியது. நவீன காலங்களில் இலங்கை மண் ஈன்றெடுத்த எந்த அரசியல் தலைவர்களையும் முதிர்ச்சியுள்ள சிறந்த ஜனநாயக தலைவர்களாக கருத முடியாதுள்ளது. அவர்கள் ஜனநாயகம் குறித்த போதிய தத்துவார்த்த அறிவுப் பின்புலத்தை கொண்டவர்களாகவும் காணப்படவில்லை. இத்தகைய போதாமைக்கும் குறைபாடுகளுக்கும் மிக முக்கிய ஒரு காரணியாக இருப்பது இலங்கைக்கு இந்தியாவைப் போன்று சுதந்திரப் போராட்டங்கள் நிகழாமலேயே சுதந்திரம் கிடைத்தமையாகும்.
அத்தகைய சுதந்திரப் போராட்டத்திற்கு முகம் கொடுக்காத சூழ்நிலையும் இந்த பின்னடைவில் பாரிய பங்கு செலுத்துகிறது.
எமது நாட்டின் விடுதலையானது ஒரு சுதந்திரப் போராட்ட வழியாக கிடைத்திருந்தால், புடம்போட்டப்பட்ட, முதிர்ச்சியடைந்த தலைவர்கள் கிடைத்திருப்பார்கள். அதே போல் ஜனநாயக விழுமியங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு மேம்பட்ட சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளமும் போடப்பட்டிருக்கும். அவ்வாறு இருந்திருந்தால், சாதி, இனம் மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் காணப்படும் விரிசல்களையும் வேறுபாடுகளையும் இல்லாதொழித்து ஒரு ஐக்கிய தேசத்தைக் கட்டியெழுப்ப வலுவான ஒரு அடித்தளம் கிடைத்திருக்கும்.
இருப்பினும் அத்தகைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. எந்தவொரு சுதந்திரப் போராட்டமும் இல்லாமல் அடிபணிதல், மற்றும் ஏமாற்று வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம் பெறப்பட்ட சுதந்திரமாக இது கருதப்படலாம். ஒரு சிறந்த சிவில் சமூக செயற்பாட்டாளரான நெவில் ஜயவீர அவர்கள் முன்னாள் பிரதம மந்திரி ஸேர் ஜோன் கொதலவாலவுடனான நேர்காணல் வடிவத்தில் எழுதிய நீண்ட ஆக்கத்தில் சுதந்திரமொன்றை பெற்றுக் கொள்வதற்கான சதித்திட்டடங்கள், ஏமாற்று வழிமுறைகள் பற்றிய சுவாரஸ்யமான விடயங்களை விவரித்துள்ளார். மேலும் ஸேர் ஒலிவர் குணதிலகவுடனான நேர்காணல் வடிவத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்திலும இதே போன்ற விவரங்கள் பதியப்பட்டுள்ளன.
ஸேர் ஜோன் கொதலாவல ஒரு விளையாட்டுப்பிள்ளை போன்ற ஆட்சியாளராகவே காணப்பட்டார். தனது பெறுமதிமிக்க சொத்துக்களை பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கிய ஒரேயொரு ஆட்சியாளராக அவர் காணப்படுகின்றார். டி.எஸ். சேனநாயக்க அவர்கள் எந்த அனுபவமும் இல்லாத இளம் வயதுடைய தனது சொந்த மகனான டட்லியை பிரதமராக நியமிக்காமல் சீனியர் என்ற அடிப்படையிலும் தகுதியடிப்படையிலும் ஸேர் ஜோன் கொதலாவலவை அடுத்த பிரதமராக நியமித்திருந்திருந்தால் நிச்சியமாக ஐ.தே கட்சியின் வரலாறு மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும்.
உண்மையில் 56 புரட்சியின் மூன்று சூத்திரதாரிகளான ஹேன்பிடகெதர ஞானசிஹா ஹிமி, டயஸ் மற்றும் குணபால மல்லலசேகரா ஆகியோரின் முதல் தேர்வாக டட்லி சேனநாயக்கவே இருந்தார். மாறாக பண்டாரநாயக்க அல்ல. டட்லி அந்த அழைப்பை நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டிருந்தால் ’56 புரட்சியின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்? அப்போது பண்டாரநாயக்கக்கு என்ன நேர்ந்திருக்கும்?
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தனது குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவவில்லை. ஆனால் அவரது படுகொலைக்குப் பின்னர், அவரது விதவை மனைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் தான் அக்கட்சியை குடும்பம் சார்ந்த கட்சியாக வளர்த்தார். கண்டி மேட்டுக்குடி சிங்களவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக ஸ்ரீமா அம்மையார் தேர்தல் முறைமையையே மாற்றி அமைத்தார். ஒருவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ஜனநாயக ஒழுங்கை பேணும் கட்சியாக மாறி, பண்டாரநாயக்காவின் படுகொலைக்குப் பின்னர் அறிவும் அணுபவும் நிறைந்த சி.பி. டி. சில்வாவுக்கு கட்சியின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால் இலங்கையின் போக்கே வேறுபட்டிருக்கும். ஆனால் சி.பி. டி. சில்வா அவரது சாதி காரணமாக தலைமைக்கு தகுதி அற்றவராக கருதப்பட்டார்.
1978 அரசியலமைப்பு மாற்றம்
இலங்கையில் 1978ஆம் ஆண்டு வரை ஆட்சிக்கு வந்த தலைவர்கள் தகுதியும் திறமையும் முதிர்ச்சியுமுள்ள ஆட்சியாளர்களாக கருத முடியாவிட்டாலும் கூட அவர்கள் பிர்தானியர்களிடமிருந்து பெறப்பட்ட ஜனநாயக அரசியல் கட்டமைப்பை உடைக்க முயற்சிக்கவில்லை. 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நீதித்துறையின் ‘மீளாய்வு அதிகாரத்தை’ நீக்கியிருந்த போதும் கூட பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஏனைய நல்ல பகுதிகள் அதில் பாதுகாக்கப்பட்டடிருந்தன.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வர்த்தகம் செய்வதற்கான தடை மற்றும் தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் 1977 வரை தொடர்ந்தன.
அந்த காலப்பகுதியில் அரச நிர்வாகத்தில் இரண்டு பெரிய குறைபாடுகள் இருந்ததை முக்கியமாக சுட்டிக்காட்ட முடியும். ஒன்று, இனம், சாதி மற்றும் மதம் அடிப்படையில் பிளவுகளையும் வீண் பிரச்சினைகளையும் அதிகரிப்பது. மற்றொன்று அரசாங்கத்தின் வருமானத்தால் சமாளிக்க முடியாத கடும் சுமையான மானியக் கொள்கையை கடைப்பிடித்ததாகும். அன்று அரிசி மானியத்திற்கான செலவு மட்டும் கல்விக்கான மொத்த செலவினத்தை விட அதிகமாக காணப்பட்டது.
19878ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த அரசியல் யாப்பு, அரசியல் அமைப்பின் ஜனநாயகத் தன்மையை முற்றிலுமாக மாற்றியமைத்ததுடன் அரச பரிபாலனம் என்பது பாரியளவிலான பொதுச் சொத்துகளை கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கும் வகையிலேயே இயற்றப்பட்டிருந்தது. அத்துடன் அதுவரை நிலவி வந்த மூடிய பொருளாதாரம் திறந்த பொருளாதார கொள்கையாக மாறியதுடன் துரித பொருளாதார வளர்ச்சிக்கும் அது வித்தட்டது.
ஜனநாயகத்தின் மீது விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக தொடர் வன்முறை போராட்டங்கள் வெடித்தன. அதனால் நாடு நீண்ட காலம் ரத்தம் சிந்தும் போர்க்களமாக காணப்பட்டது. இத்தகைய துன்பியல் நிகழ்வுகளுடன் பொதுச் சொத்துக்கள் பாரியளவில் கொள்ளையடிக்கப்படுவது இந்த அரசியல் யாப்பின் முக்கிய ஒரு பண்பாகும்.
ஜே.ஆர். ஜயவர்த்தனாவிற்குப் பின்னர் ஆட்சி பீடத்துக்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களும் அவர் அறிமுகப்படுத்திய ஊழல் அரசியல் கொள்ளையை முன்னோக்கி கொண்டு சென்றதுடன் அதில் புதிய கூறுகளைச் சேர்த்துள்ளதையும் அவதானிக்க முடியும்.
புரட்சியும் எதிர் புரட்சியும்
இந்த ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பில் அதற்கே உரிய இரண்டு முக்கிய பண்புகள் உள்ளன. ஒன்று, ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு தலைவரும் தனது தற்காலிக பொறுப்பில் உள்ள பொது சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது கடுமையான குற்றமாகத் நோக்கப்படுவதில்லை. இரண்டாவது, தொடர்ந்து வந்த எந்தத் தலைவரும் இந்த அரசியல் அமைப்பைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர அந்த ஊழல் அமைப்பை இல்லாமல் செய்வதற்குரிய ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு ஜனாதிபதி ஆட்சியின் கீழும், ஆட்சியாளர்களின் முழு ஆதரவோடு பெரிய அளவில் அரசு சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 43 ஆண்டுகளில் அதற்கெதிராக ஒரு மனு கூட பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக வரலாறு இல்லை.
ஊழல் மற்றும் கொடுமைகள் நிறைந்த இந்த அரசியல் அமைப்பை மாற்றுவதற்கும், தோல்வியை தழுவிக் கொண்டு பாதாளத்தில் விழும் நாட்டை காப்பாற்றுவதற்கும் இலங்கைக்கு கிடைத்த கடைசி வாய்ப்பாக 2015 இல் கிடைத்த ஆட்சி மாற்றத்தை குறிப்பிடலாம். ஆனால் அந்த அரிய வாய்ப்பு நேர்மையற்ற மற்றும் வஞ்சகமான முறையில் பயன்படுத்தப்பட்டது. இதற்கான முழுக் குற்றச்சாட்டையும் ரணில் மீது சுமத்துகிறார்கள். உண்மையில் இதற்கு ரணில் விக்கிரமசிங்க மாத்திரம் காரணம் அல்ல. நல்லாட்சி அரசாங்கத்தில் பொறுப்புகளை வகித்த அனைவருமே இதற்கு வகை கூறும் கடப்பாடுள்ளவர்களே.
நல்லாட்சி அரசு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வழங்கிய வாக்குறுதியைக் நிறைவேற்றத் தவறியது மட்டுமல்லாமல், ஜனாதிபதியை சட்டத்தின் கீழ் வகை கூறம் நிலைக்கு கொண்டுவருவதிலும் தோல்வி கண்டது.
மேலும் ஆளும் கட்சியின் ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பொது சொத்துக்களை கொள்ளையடிக்கும் வாய்ப்பைப் பாதுகாப்பதே நல்லாட்சி அரச நிர்வாகத்தின் முக்கியமான அபிலாஷையாகவும் அமைந்திருந்தது.
நல்லாட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியானது அதன் குறுகிய மனப்பான்மை, மதவெறிப் போக்கு மற்றும் சுயநலம் ஆகியவற்றிற்காக அதன் மீது சுமத்தப்பட்ட வரலாற்றுத் தண்டனையாகக் கூட இருக்கலாம். இப்போது எங்களுக்கு தலைவர்கள் இல்லை. மாலுமி இல்லாத கப்பல் போல நாடு உள்ளது. பெரும்பாலும் நாட்டை சீனக் கொலனியாக மாற்றுவதன் மூலம் அந்த வெற்றிடம் நிரப்பப்பட வாய்ப்புள்ளது.