ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னன்! 

Date:

தொகுப்பு: அஷ்ஷெய்க் பளீல்

 

“ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னன்” என்பது போல் நிலை இருக்கிறது என சிலரது பொறுப்பற்ற நடவடிக்கையை ஒப்பிடுவார்கள்.

 

கிமு 54 முதல் 68 வரை ரோம் பேரரசை ஆண்ட மன்னன் தான் நீரோ. மிக பெரிய கொடுமைகள் செய்த அரசன் என்று வரலாறு பேசுகிறது. மக்களுக்கு சுமை தரும் பல வரிகளை விதித்ததாகவும், அரசின் கஜானாவை தொடர்ந்து சுய சுகபோகங்களுக்கு காலி செய்ததாகவும், எல்லாவற்றிர்க்கும் மேலாக அவன் தனது தாய் மற்றும் மனைவியை கொன்றதாகவும் சொல்லப்படுகிறது.

 

இந்த பழமொழியில் சொல்லப்படும் நெருப்பு கிமு 64 ஜூலையில் தொடங்கி ஆறு நாட்கள் பெரு நெருப்பாக எரிந்தது, முக்கால்வாசி நகரமே தீக்கு இரையானது.

 

அதி முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் நடந்து கொண்டிருக்கும் போது அவற்றை பற்றிய எக்கவலையும் இல்லாமல், நேரத்துக்கும் காலத்துக்கும் பொருத்தமே இல்லாத காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு மேற்படி உதாரணத்தைக் கூறுவார்கள். தற்காலத்தில் எம்மில் சிலரது நிலையும் அப்படித்தான் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகின்றது.

 

கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பீடிக்கப்பட்டு உலகமே ஒரு பீதியில் வாழுகிறது. பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

 

20.5.2021 ஆம் திகதிய சர்வதேச புள்ளிவிபரங்களின்படி இது வரை 16 கோடியே 55 லட்டத்து 76 ஆயிரத்து 656 பேர் இந்நோய்க்கு இலக்காகியிருக்க 34 இலட்சத்து 32 ஆயிரம் பேர் இந்நோயின் காரணமாக இறந்துள்ளார்கள்.

 

இலங்கையைப் பொறுத்தவரை ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை இந்நோயால் பாதிக்கப்பட்டு இருக்க 1051 இதனால் இழந்திருக்கிறார்கள். நாளுக்கு நாள் தொற்றுக்கு உள்ளாவோரதும் இறப்பவர்களதும் தொகை கூடிக் கொண்டே போகிறது.

 

நாட்டின் பொருளாதார நிலையோ மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. மக்களில் பல லட்சம் பேர் தொழில்களை இழந்து தவிக்கிறார்கள்.

 

கலாநிலையங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. பல பிரதேசங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. வீடுகளில் மாணவர்களும் சிறார்களும் தங்கி இருப்பதனால் பெற்றார் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அளவற்றவை.

 

மத ஆலயங்கள் மூடப்பட்டிருப்பதனால் மக்களது ஆன்மீக நலன்கள் வளருவதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ள. உள நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பலர் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

 

நாட்டின் பொது விவகாரங்கள் தொடர்பான பல அம்சங்கள் பாராளுமன்றத்தில் அன்றாடம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 

முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய நல்லெண்ணம் பிற சமூகத்தவர்களது உள்ளங்களில் இருந்து பெரும்பாலும் எடுபட்டுப் போயிருக்கிறது .இப்படியான சூழ்நிலையில் எம்மைப் பற்றிய நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உடனடியாக இருக்கிறது.

 

நாடுகளுக்கிடையிலான போக்குவரத்துக்கள் பெரும்பாலும் மந்த நிலையை அடைந்திருக்கின்றன. பல நாடுகள் தமக்கான கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துகளை துண்டித்திருக்கின்றன.

 

அடுத்த நிமிடம் உலகத்துக்கு என்ன நடக்கும் என்ற நிலை இருந்து வருகிறது?

 

முஸ்லிம் சமூகத்தின் நிலவரமோ கவலைக்கிடமாக இருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் எழுச்சியை கண்டு பொறாமைப்பட்டு இஸ்லாமிய பீதியை தலைக்குள் சுமந்திருக்கும் இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்துக்கு எதிராக பல அநியாயங்களைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். சிந்தனா ரீதியான போராட்டங்களும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற நெருக்குவாரங்களும் அதிகமதிகம்.

 

பாலஸ்தீனப் பிரச்சனை மீண்டும் உருவெடுத்து அங்கு இருக்கின்ற மக்கள் மிகவும் சொல்லொணாத் துயரங்களை சந்தித்து வருகிறார்கள்.

 

நிலை இப்படி இருக்க முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலருடைய நிலை விசித்திரமாக இருக்கிறது. இத்தகைய பெரும் கவலைகளை முற்றாக மறந்து விட்டு, அற்பமான கருத்து வேறுபாடுகளை சமூக ஊடகங்களில் விவாதித்துக் கொண்டும் அலசி கொண்டும் இருக்கிறார்கள்.

 

மக்களை அலச்சியம் செய்து சுகபோகங்களில் வாழ நினைப்பவர்களை வரலாறு வசைப்பாடும் என்பதற்கு நீரோ மன்னனது பொறுப்பற்ற நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டு.

 

எனவே தம்மைச் சூழ இடம்பெறும் சமூகத்தின் அவலங்களைப் பற்றிய கவலையே இல்லாமல் பொடுபோக்காக, அலட்சியமாக, இரண்டாம் பட்சமான காரியங்களில் ஈடுபடுவோருக்கு உதாரணமாக நீரோ மன்னனின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையை எழுத்தாளர்கள் ஒப்பிடுவார்கள்.

 

ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரையில் அவன் எப்போதும் சமூக கவலை மிக்கவனாக, பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வான். அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகப் பெறுமதியானவை.

 

“யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருக்கிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்” என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 

அல்லாஹ்வின் அடியார்களான ‘இபாதுர் ரஹ்மான்’ இன் பண்புகளில் ஒன்று அவர்கள் அனாவசியமானவற்றிலிருந்து தூரமாக இருப்பார்கள் என்பதாகும்.

 

وعن اللغو معرضون

 

واذا مروا باللغو مروا كراما

 

இங்கு வரும் சொல்லான ‘லக்வ்’ என்றால் பயனற்ற பேச்சுக்கள், தேவைக்கு அதிகமாக பேசுவது, பிறரது விவகாரங்களில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாமல் பேசுவது போன்ற கருத்துகளை கொடுக்கும் என்று இமாம்கள் கூறியிருக்கிறார்கள்.

 

அதி முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தான் நாம் எமது கவனத்தை செலுத்த வேண்டும். அதற்காக இடைக்கிடை ஓய்வு எடுத்துக்கொள்ள கூடாது அல்லது விகடமாக பேசிக் கொள்ளக் கூடாது என்பது அர்த்தமல்ல. ஆனால் வாழ்க்கையே ஜோக்காகவும் விளையாட்டாகவும் கேலிக்கையாகவும் அமைவது தான் ஆபத்தானதாகும்.

 

தற்போதைய சூழலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அதிகம் பேசுபொருளாக அமைய வேண்டிய விடயங்கள் உள்ளன.

 

முஸ்லிம் சமூகத்தின் மானுஷீக நிலை பலவீனப்பட்டிருக்கிறது. தோல்வி மனப்பாங்குடனும் ஒருவகையான அச்சத்தோடும் பலர் வாழுகின்றனர். எனவே, ஈமானிய பலத்தை ஊட்டி எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

 

முஸ்லிம் மாணவர்களது மார்க்க மற்றும் உலக கல்வி பாதிக்கப்பட்டு பெரும்பாலான நேரங்களை அவர்கள் வீடுகளில் தான் கடத்துகிறார்கள். அவர்களது ஓய்வு நேரங்களில் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் வழி கெட்டு போவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றன. எனவே சமூக ஊடகங்கள் வாயிலாக அவர்களை நெறிப்படுத்துவதற்கும் பெற்றோருக்கு வழி காட்டுவதற்குமான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

 

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றிய தெளிவு பல மட்டங்களில் குறைவாக இருக்கிறது. பரஸ்பரம் இடம்பெறும் கதையாடல்களும் உரையாடல்களும் மார்க்க பின்னணியிலோ சமூக சூழலைக் கவனத்திற் கொண்டவையாகவோ இருப்பதில்லை. எனவே உலமாக்களும் புத்திஜீவிகளும் மிகப் பெரும் பொறுப்பை சுமந்து இருக்கிறார்கள்.

 

பிற சமூகங்கள் முஸ்லிம்களைப் பற்றிக் கொண்டிருக்கின்ற அபிப்பிராயங்கள் ஆரோக்கியமாக இல்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அக்காரணங்களை மிகச் சரியாக இனங்கண்டு பரிகாரம் தேடாத போது -அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்- எதிர்காலம் மிகவும் இக்கட்டான கட்டத்தை அடையலாம்.

 

எனிவே சமூகத்தின் முக்கியஸ்தர்கள் பொறுப்புணர்ச்சியுடனும் தூர நோக்கோடும் நடந்து கொள்வதோடு ஒவ்வொரு நிமிடத்தையும் மிகப் பயனுள்ள காரியங்களில் மாத்திரமே கடத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

 

அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் ஒவ்வொருவரும் எமக்கு தரப்பட்டிருக்கும் ஆற்றல்கள் திறமைகளைப் பற்றி நிச்சயமாக மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்ற அச்சம் எம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது.

 

அல்லாஹ் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக!

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் சிறிதளவு மழைக்கான சாத்தியம்!

நாட்டில் இன்று (11) மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா,...

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...