தொகுப்பு: அஷ்ஷெய்க் பளீல் நளீமி
Lock Down ல் வீட்டில் இருக்கும் பொழுது எப்படி நேரத்தை கழிப்பது என்பது தொடர்பான சில வழிகாட்டல்கள்
نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ (رواه البخاري)
“இரண்டு வகையான அருள்கள் விடயத்தில் மக்கள் முறைகேடாக நடந்து கொள்கிறார்கள்.(துஷ்பிரயோகம் செய்கிறார்கள்) ஒன்று தேகாரோக்கியம் மற்றையது ஓய்வு நேரம்”(அல்ஹதீஸ்)
இந்த நபிமொழியின் அடிப்படையில் வீட்டில் இருக்கக் கிடைக்கும் இந்த காலப்பிரிவை மிகப் பயனுள்ளதாக (Maximum) அமைத்துக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.
ஆத்மீக பகுதி
1.பாங்கு சொன்னவுடன் (அவ்வல் வக்தில்) வீட்டில் ஜமாஅத்தாக தொழுவது.
قال النبي صلى الله عليه وسلم: أفضل الأعمال الصلاة في أول وقتها. رواه الترمذي والحاكم. وصححاه.
நபிகளார் (ஸல்) அவர்கள் “செயல்களில் மிகச் சிறந்தது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதாகும்” என்றார்கள்.
ஒருவர் இமாமத் செய்ய மற்றவர்கள் அவரோடு தொழுவது.
قال رسول الله صلى الله عليه وسلم: «صلاة الجماعة أفضل من صلاة الفرد بسبع وعشرين درجة».. أخرجه البخاري ومسلم،
“தனியாகத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும்.”
2. அதிகாலையில் குறைந்தது 4 மணிக்கு கண்விழித்து வீட்டில் உள்ள மூத்தவர்கள், பெற்றோர் அனைவரும் தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றுவது.
(تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا*فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ)
32:16 அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். 32:17. அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.
(أيُّها النَّاسُ أفشوا السَّلامَ وأطعِموا الطَّعامَ وصلُّوا والنَّاسُ نيامٌ تدخلوا الجنَّةَ بسلامٍ)
நபிகள் (ஸல்) கூறினார்கள்:- “மனிதர்களே! ஸலாத்தை பரவலாக சொல்லுங்கள்; உணவை கொடுங்கள்; மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள்; சுவர்க்கத்தில் சாந்தியுடன் நுழைவீர்கள்.”
3. பின்னர் பஜ்ர் தொழுகையை ஜமாஅத்தோடு நிறைவேற்றுவது.
قال رسول الله صلّى الله عليه وسلّم:
”مَن صلّى العشاء في جماعة فكأنّما قام نصف اللّيل، ومَن صلّى الصّبح في جماعة فكأنّما صلَّى اللّيلَ كلَّه” (رواه مسلم)
“இஷா தொழுகையை ஜமாஅத்தோடு நிறைவேற்றியவர் அரை வாசி இரவு நின்று வணங்கியவர் போன்றவராவார்.சுபஹுத் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றியவர் முழு இரவும் நின்று வணங்கியவர் போன்றவராவார்”
4. காலை,மாலை ஓதப்பட வேண்டிய அவ்ராதுகளை ஓதிக்கொள்வது.
فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى
20:130. ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக; இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக; மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக; இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம்.
5. சந்தர்ப்ப துஆக்களை முறையாக ஓதிவருவது.
உதாரணமாக, சாப்பிட முன் சாப்பிட்ட பின், கழிவறையில் நுழைய முன், வெளிவந்த பிறகு, தூங்கச் செல்லும் போது போன்ற துஆக்களை கிரமமாக ஓதிக்கொள்வது.
6.ஒரு நாளைக்கு குர்ஆனில் இருந்து குறைந்தது சில பக்கங்களையாவது ஓதுவது, சிறிய சூராக்களை அல்லது குர்ஆனின் சில பகுதிகளை முடிந்த வரை மனனம் செய்வது.
7. மஃரிப் தொழுகையின் பின்னர் எல்லோருமாக அமர்ந்து ஹிஸ்பு மஜ்லிஸ் நடத்துவது. சந்தர்ப்பம் கிடைத்தால் ஏதோ ஓர் ஆன்மீக தலைப்பில் ஒருவர் ஐந்து நிமிடம் பேசுவது.
*அறிவுப் பகுதி*
1. வீட்டில் உள்ள இஸ்லாமிய மற்றும் பொது அறிவுடன் தொடர்பான நூல்களில் இருந்து குறைந்தது சில பக்கங்களை நாளாந்தம் வாசிப்பது. அல்லது சமூக வலைத்தளங்களிலோ இணையத்திலோ நல்ல பயனுள்ள கட்டுரைகளை வாசிக்க நேரம் ஒதுக்குவது.
2. மாணவ மாணவியர் தமது பாடசாலை பாடங்களை மீட்டுவதற்கும் பயிற்சிகளை எழுதுவதற்கும் ஆரோக்கியமான அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது.
*உடலியல் பகுதி*
1. தற்போதைய சூழலில் நோய்கள் பரவுவதற்கு பிரதான காரணம் சுத்தமின்மையும் சமூக இடைவெளிகளைப் பேணாமையுமாகும். எனவே, உடலையும் சுற்றுச்சூழலையும் வீட்டையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க உச்சகட்டமாக முயற்சிக்க வேண்டும்.
2. காலை 8 மணிக்கு முன்பே காலை ஆகாரத்தை எடுப்பதோடு ஒரு நாளைக்குத் தேவையான அளவு தண்ணீரையும் குடித்துக் கொள்ள வேண்டும்.
3. ஒரு நாளைக்கு ஆறு அல்லது எட்டு மணித்தியாலத்துக்கு இடைப்பட்ட அளவு தூக்கத்துக்காக ஒதுக்கினால் போதுமானது. அதனை விட குறைத்துக் கொள்வதோ அதிகரித்து கொள்வதோ உடலை பாதிக்கும். தேவையான அளவு ஓய்வும் அவசியம்.
4. இரவு பத்து மணிக்குப் பின்னர் விழித்துக் கொண்டிருப்பதும் பகலில் அளவு மீறிய தூக்கமும் உடலை நிச்சயமாக பாதிப்பதோடு அன்றாட கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு முடியாத சூழ்நிலை ஏற்படும் .எனவே இது விடயமாக கரிசனை எடுக்க வேண்டும்.
5. முடிந்த அளவு வீட்டுக்குள் அல்லது முற்றத்தில் இருந்த வண்ணமே உடற்பயிற்சிகளை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது வீட்டு வேலைகளிலோ தோட்ட வேலைகளிலோ ஈடுபடுவதும் உடலுக்கு தெம்பையும் உற்சாகத்தையும் பலத்தையும் தரும்.
6. வீட்டில் உள்ளவர்களோடு ஓய்வாக இருப்பதற்கும் சுவாரசியமாக கலந்துரையாடுவதற்கும் கட்டாயமாக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அன்றாடம் தொலைக் காட்சியிலோ அல்லது வானொலியிலும் தேவையான அளவு செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்வதற்கு நேரத்தை ஒதுக்கி கொள்வது நல்லது.
قال سلمان لأبي الدرداء: إنَّ لنفسِكَ عليكَ حقًّا، ولربِّكَ عليكَ حقًّا، ولضَيفِكَ عليك حقًّا، وإنَّ لأهلِكَ عليكَ حقًّا، فأَعطِ كلَّ ذي حقٍّ حقَّه، فأَتَيا النبيَّ صلَّى اللهُ عليه وسلَّمَ، فذَكَرا ذلكَ؟ فقال له: صدَقَ سَلْمانُ. اخرجه البخاري (1968)
அபூதர்தா (ரலி) அவர்கள் தனது உடலுக்கும் தனது மனைவிக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றாமல் இருந்ததை அவதானித்த சல்மான்(ரழி)அவர்கள் அபூதர்தாவைப் பார்த்து பின்வருமாறு சொன்னார்கள்:- “நீர் உமது உடலுக்கு கொடுக்க வேண்டிய உரிமை ஒன்று இருக்கிறது. உமது இறைவனுக்கு கொடுக்க வேண்டிய உரிமையையும் இருக்கிறது. உமது விருந்தாளிக்கு கொடுக்க வேண்டிய உரிமையும் இருக்கிறது. உமது குடும்பத்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமையும் உன் மீது இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கே உரிய உரிமைகளை கொடுத்துவிடுங்கள்” என்று சல்மான் (ரலி) கூறினார்கள்.
பின்னர் அவர்கள் இருவரும் நபியவர்களிடம் வந்தபோது நடந்த சம்பவத்தைக் சல்மான் குறிப்பிட்டார். அதற்கு நபியவர்கள் ‘சல்மான் உண்மை பேசினார்’ என்று கூறினார்கள்.
தற்கால சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் அளவுக்கு அதிகமான நேரத்தை பலரும் கடத்துவதனால் வீட்டுப் பணிகள், உடல் நலம், சுகாதாரம், ஆத்மீகப் பகுதி என்பவை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. இது ஆபத்தானது.
*சமூகவலைத்தள பாவனை*
குறிப்பாக இது விடயமாக நியாயமான திட்டமிடல் அவசியப்படுகிறது. மாணவ மாணவியரும் இளைஞர்களும் மற்றோரும் அளவு மீறி சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
1.உளரீதியான பாதிப்புக்கள்
2. நேரம் வீணடிக்கப்படுவது
3. அவசியம் நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தோடு சம்பந்தப்பட்ட பொறுப்புக்களை உரிய நேரங்களில் நிறைவேற்ற முடியாமல் போவது.
4.கணவன்-மனைவிக்கிடையிலான உறவுகளில் விரிசல்
5. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான தொடர்பாடல் ஸ்தம்பிதம்
6.மொபைல் டேடாவுக்கு பணம் இறைக்கப்படுவது.
7. கண்கள், முள்ளந்தண்டு,கழுத்து போன்றன பாதிக்கப்படுவது.
தற்காலத்தைப் பொறுத்தவரை சமூக வலைதளங்கள் இன்றியமையாதவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் ‘அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற வகையில் எல்லாவற்றிலும் நடுநிலைமை பேணிக் கொள்வது அவசியமாகும்.
*ஆக்க முயற்சிகள்*
வீட்டில் இருக்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஓய்வு நேரங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
உதாரணமாக,
+ திக்ர் திலாவதுல் குர்ஆன்
+ வாசிப்பது
+ ஆக்கங்களை எழுதுவது
+ Zoom மூலமாக கற்பது
+ You Tube ல் பயனுள்ள Video களைப் பார்ப்பது
+ கைப்பணிகள்
+ வீட்டுத்தோட்டம்
+ சுத்திகரிப்பதும் வீட்டை ஒழுங்குபடுத்துவதும்
+ பிள்ளைகளுக்கு ஒதவும் படிக்கவும் உதவுவது
+ வீட்டிலுள்ள வயோதிபர், நோயாளிகளுக்கு உதவுவது
+ Online வழியான சமூக மற்றும் தவாஃப் பணிகள்.
+ தாம் சார்ந்திருக்கின்ற கலா நிலையங்கள் அல்லது காரியாலயங்களோடு தொடர்பான காரியங்களை வீட்டிலிருந்தே மேற்கொள்வது
+ ஒன்லைன் மூலமான தொழில்களை செய்வது
எனவே பெறுமதி மதிக்க முடியாத எமது நேரங்களை மிகப் பயனுள்ள விடயங்களில் கழித்து அல்லாஹ்வின் அன்பையும் திருப்தியையும் உலகத்திலும் மறுமையிலும் நிம்மதியான வாழ்க்கையையும் அடைந்து கொள்ளும் கொள்வோமாக!
எம்மீது அல்லாஹ் சுமத்திய பொறுப்புக்களை இதுவரை நிறைவேற்றியது போதாது என்ற பணிவு மனப்பான்மையும், செய்த இபாதத்கள் போதாது என்ற குறைவு மனப்பான்மையும் எமக்கு வேண்டும். மேலும் அதிகமதிகம் இஸ்திக்பாரில் ஈடுபடுபடவும் வேண்டும்.
அல்லாஹ் கொரோனானாவை உலகத்துக்கு அனுப்பியதில் பல பாடங்கள் உள்ளன.இதன் மூலம் எமது வாழ்வை சரியான திசையில் அமைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் தரப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பங்களில் இருந்து படிப்பினை பெறாதவர்கள் நிச்சயமாக பெரும் துரதிர்ஷ்டசாலிகளாவர்.
الطهور شطر الإيمان، والحمد لله تملأ الميزان، وسبحان الله والحمد لله تملأان – أو تملأ – ما بين السماء والأرض، والصلاة نورٌ، والصدقة برهانٌ، والصبر ضياءٌ، والقرآن حجةٌ لك أو عليك، كل الناس يغدو، فبائعٌ نفسه فمعتقها أو موبقها))؛ رواه مسلم.
“சுத்தம் ஈமானின் பாதியாகும். ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்ற வாசகம் நன்மைத் தராசை நிரப்பும். ‘சுப்ஹானல்லாஹ்’, ‘அல்ஹம்துலில்லாஹ்’ ஆகிய இரண்டு வாசகங்களும் வானங்களுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட இடத்தை அடைத்துக்கொள்ளும். தொழுகை என்பது ஓர் ஒளியாகும். தர்மம் (ஈமான் இருப்பதற்கான) ஆதாரமாகும். பொறுமை ஒரு ஜோதியாகும். அல்குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாக அமையப்போகிறது. ஒவ்வொருவரும் காலையில் தமது பணிகளை ஆரம்பிக்கிறார்கள். சிலர் தமது உள்ளத்தை அல்லாஹ்வுக்கு விற்று விட்டு அதனை விடுதலை செய்கிறார்கள். இன்னும் சிலரோ ஷைத்தானுக்கு விற்று விட்டு அதனை அழித்துக் கொள்கிறார்கள்.(ஹதீஸ்).