கங்கை நதிக்கரைகளில் கொத்துக் கொத்தாக சடலங்கள் மிதப்பதும், புதைப்பதும், எரிப்பதும் அதிகரித்து வருகிறது. இது குறித்த காட்சிகள், புகைப்படங்கள் தற்போது தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவால் இந்தியா தினம்தினம் சந்தித்து வரும் அவல நிலையானது எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது. அரசாங்கமும் இதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகள் வருகிறது. ஆனாலும் எண்ணிக்கை கட்டுக்குள் வரவில்லை. முதல் அலையின்போது, பசி, பட்டினியால் திண்டாடிய மக்கள், இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். தினம்தினம் வெளியாகும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நிதர்சனத்தை தோலுரித்துக் காட்டி வருகிறது.

ஒருபுறம் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றால், மறுபுறம் இறப்போரை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் போதுமான இடமின்றி நதிக்கரைகளில் வீசுவது என்பது துயரத்தின் உச்சம்.
சமீப நாட்காளாக கங்கை நதிக்கரைகளில் கொத்துக் கொத்தாக சடலங்கள் மிதப்பதும், புதைப்பதும், எரிப்பதும் அதிகரித்து வருகிறது. இது குறித்த காட்சிகள், புகைப்படங்கள் தற்போது தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பிரபல இந்தி ஊடகமான டைனிக் பாஸ்கர்(Dainik Bhaskar) உத்தரபிரதேசத்தில் தங்களின் செய்தியாளர்களை நேரடியாக கங்கை நதி கடக்கும் சுமார் 27 மாவட்டங்களுக்கு அனுப்பி, தகவல்களை சேகரித்துள்ளது. அந்நாளிதழில் வெளியான தகவல்கள் அதிர்ச்சி ரகம்.
உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களைப் பொறுத்த வரையில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது சற்று அதிகமாகவே உள்ளது. இதையடுத்து கங்கை நதியையொட்டியுள்ள நகரங்களின் நதிக்கரைகளில் கொத்துக்கொத்தாக சடலங்கள் புதைக்கப்படுகின்றன.
கங்கை நதியின் ஓரங்களில் அமைந்துள்ள நகரங்களான வாரணாசி, ஃபதேபூர், கன்னோஜ், உன்னாவ், மிர்ஸாபூர் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் இறப்போரின் சடலங்களை இரவு நேரங்களில் ஆம்புலன்ஸில் வரும் சிலர் இங்கே நதிகளில் வீசுவது, அல்லது நதிக்கரைகளில் மணலைக் கொண்டு மூடிவிட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்றும் நாய்கள், கழுகுகள், பருந்துகள் அவற்றினை சூழ்ந்து கொள்வதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கங்கையை ஒட்டியுள்ள உன்னாவ் நகரில் சுமார் 900 சடலங்கள் நதிக்கரைகளில் புதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டிலேயே மிகப்பெரிய தகன மேடை அங்கே அம்மாநில அரசால் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கன்னோஜ்ஜில் 350 சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளது. கான்பூரில் சுமார் 400 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. மிர்ஸாபூர் 250க்கும் மேற்பட்ட சடலங்கள் தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவை போக நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு இடங்களிலும் 15 முதல் 20 சடலங்களை வரை கரை ஒதுங்குவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், மீரட், ஷாஜகான்பூர், ப்ரெயக்ராஜ், ஃபரூக்தாபாத் உள்ளிட்ட நகரங்களில் அதிகப்படியான சடலங்கள் ஒதுங்குவதாக புகார் எழுந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சுமார் 1,140 கி.மீ. வரை செல்லும் கங்கை நதியில் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது நாளுக்கு நாள் மேலும் அதிகரித்து வருகிறது.
இது போன்ற செயல்கள் பெருகி வருவதால் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் கரையொதுங்கும் சடலங்களை மீட்டு முறையாக தகனம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். “எங்கள் மாநிலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடில்லை, கொரோனா தடுப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்” என்று கூறி வரும் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் இந்த விவகாரத்தில் மெளனம் சாதிக்கிறது.
சிகிச்சையளிக்க போதிய இடமின்றி, தகனம் செய்ய போதிய இடமின்றி தவிக்கிறது தேசம். இந்த நிலையிலிருந்து மீண்டு வெளிவர நம்மை நாமே தற்காத்துக்கொள்வது தான் சிறந்த வழி. விரைவில் மீள்வோம்.
நன்றி விகடன்