சங்கைக்குரிய பத்தேகம சமித தேரர், துறவிகள் அரசியலில் ஈடுபடுவதற்கான வழிகாட்டுதலாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய பத்தேகம சமித தேரர் இன்று (30) அதிகாலை காலமானார். அது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:
சங்கைக்குரிய சமித தேரரும் நானும் பல்கலைக்கழக அரசியலில் இரண்டு வேறுபட்ட அரசியல் முகாமின் உச்சத்தில் இருந்தோம்.
அவர் ஒரு மார்க்சிச மாணவர் முகாமை பிரதிநிதித்துவப்படுத்தியதோடு, நான் ஒரு ஐக்கிய தேசிய கட்சி மாணவர் முகாமை பிரதிநிதித்துவப்படுத்தினேன்.
ஆனால் அந்த அரசியல் பிரவேசங்கள் எங்களுக்கிடையிலான நட்பை நிறுத்தவில்லை.
துறவிகள் அரசியலில் பங்கேற்க முடியுமா என்ற வாதப்பிரதவாதங்கள் சமூகத்தில் ஆழமாக ஏற்ப்பட்ட சூழலில் தான் சரிகண்ட அரசியல் கருத்தியலை முன்னிலைப்ப்படுத்தியதும் கருத்துக்களை முன்வைத்த விதமும் முன்னுதாரணமிக்கவையாகும்.
துறவிகளின் கௌரவத்தைப் பாதுகாத்த வண்ணம் அவர் அந்த பணியை மேற்கொண்ட விதம் அரசியலில் ஆர்வமுள்ள அனைவருக்கும் வழிகாட்டும்.
பன்முகத்தன்மையில் ஒற்றுமை மற்றும் ஒரு இலங்கை தேசத்தின் இருப்பு என்பன எப்போதும் அவரது தூரநோக்காகவும் மற்றும் அரசியல் நடைமுறையின் முதல் முன்னுரிமையாகும் இருந்தது.
அதற்காக தைரியமாக குரல் எழுப்பிய அவர்,ஒரு வலுவான ஆளுமை கொண்ட துறவியாவார்.
அவர் சர்வதேச அரசியலிலும் தீவிர ஆர்வ விழிப்பாளராக இருந்தார்.சர்வதேச சமத்துவ நீதிக்காக தீவிரமாக ஈடுபாடு காட்டியவர். இலங்கை-பாலஸ்தீன ஒத்துழைப்புக்கான தக்ஷின லங்கா அறக்கட்டளையின் தலைவராக அவர் இறக்கும் வரை பணியாற்றினார்.
மத நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, மனித குலத்தின் சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதிக்கான தனது பணியை முன்னெடுப்பதற்கான அவரது முயற்சிகளை நான் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.