மகாராஷ்டிராவில் டவ்தே புயல் காரணமாக கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொச்சி அருகே 240 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருந்த புயல் சனிக்கிழமை வேகமெடுத்து கோவா மகாராஷ்டிரா வழியாக குஜராத் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் குஜராத்தில் வரும் 18-ம் தேதி கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவில் புயல் மூலம் ஏற்படும் கன மழையை சமாளிக்க மகாராஷ்டிரா அரசு தயாராகி வருகிறது. குறிப்பாக மும்பை, ராய்கட், பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் போன்ற கடற்கரையோர மாவட்டங்கள் தான் அதிகமாக பாதிக்கப்படும் என்பதால் சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தினரை முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார்.

பலத்த காற்றுடன் மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது. மீட்பு கருவிகள், போதிய ஆட்களுடன் தயார் நிலையில் இருக்கும்படி இம்மாவட்ட ஆட்சித் தலைவர்களை முதல்வர் கேட்டுக்கொண்டார். மும்பையில் ஒடிந்து விழும் நிலையில் இருக்கும் மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதியில் மழைநீரை அகற்ற மோட்டார் பம்ப்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மும்பையில் உள்ள 6 முக்கிய கடற்கரைகளில் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதோடு தேவைப்பட்டால் பாதிக்கப்படும் மக்களுக்கு தற்காலிகமாக தங்கும் முகாம்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மும்பையில் இரண்டு நாட்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
புயல் காரணமாக அதிக காற்று வீசினால் தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும் மாநகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர். மும்பையில் உள்ள பாந்த்ரா-ஒர்லி கடல் பாலமும் தற்காலிகமாக இரண்டு நாட்கள் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மும்பை, தானேயில் மஞ்சள் எச்சரிக்கையும், பால்கரில் பச்சை எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தீயணைப்பு துறையினரும் முழு உஷார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மும்பையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கேரளா-கர்நாடகா, கோவா-மகாராஷ்டிரா கடற்கரையோர பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியை சேர்ந்தவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புயல் காரணமாக விமான போக்குவரத்தும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சென்னை, திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, மும்பை, புனே, கோவா, அகமதாபாத் நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புயலால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் மீட்புப்பணிகளுக்காக பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி விகடன்