தொகுப்பு: ஆஷிக் இர்பான்
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் என்பது இன்று நேற்று நடைபெறும் ஒன்றல்ல. நீண்ட வரலாற்றைக் கொண்ட மோதல் இது. கடந்த வெள்ளிக்கிழமை(7) அன்று மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் பாலஸ்தீன முஸ்லிம் மக்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதுடன் கணிசமான எண்ணிக்கையான உயிரிழப்புகளும் பதிவாகியுள்ள. இது காலா காலமாக நடைபெற்று வரும் வரலாற்று மோதலாக இருந்தாலும் இந்தத் தடவை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பாலஸ்தீன இஸ்ரேலிய எல்லைக்குள் இடம்பெறும் முதல் மோதல் என்ற முக்கியத்துவத்தை பெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களின் போது அதிகமாக பேசிய விடயம் தான் ‘மனித உரிமை’. இருப்பினும் தற்போது உலகத்தில் வெட்ட வெளிச்சமான மனித உரிமை மீறல் ஒன்று அரங்கேறிக் கொண்டிருப்பது ஜோ பைடனுக்கான சோதனையாக மாறியிருக்கிறது. இந்த விடயம் பற்றி கடந்த திங்கட்கிழமை(10) வெள்ளை மாளிகையில் சர்வதேச ஊடகங்கள் வினவிய போது, “இது தொடர்பாக அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், மிகவும் உன்னிப்பாக அவதானிப்பதாகவும் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாக்கி தெரிவித்திருந்த நிலையில், செவ்வாய்கிழமை (11) இருதரப்பும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, அமைதிகாக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிப்பதாகவும், அதே வேளையில் கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல், குடியிருப்புகளை இடித்து, வெளியேற்றும் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும் அமெரிக்காவின் தற்போதைய தடுமாற்றத்தோடு சேர்த்து தற்போது கிழக்கு ஜெரூசலத்தில் தோன்றியுள்ள பதற்ற நிலைக்கும் ஜோ பைடனின் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கும் முடிச்சு போடப்பட்டு சர்வதேச மட்டத்திலான கருத்தாடல்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடனின் தேர்தல் விஞ்ஞாபனம்.
அவர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களின் போது கூறிய விடயம் தான் ஒவ்வொரு பாலஸ்தீனியரின் மற்றும் ஒவ்வொரு இஸ்ரேலியரின் மதிப்பு பாதுகாக்கப்படும் என்பது. அதாவது பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் சுதந்திரம், பாதுகாப்பு, செழிப்பு மற்றும் ஜனநாயகம் போன்ற சம உரிமைகளை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக அவர் செயல்படுவார் என்பதாகக் கூறியிருந்தார். இந் நடவடிக்கைகளுக்காக அவர் முன்வைத்த திட்டம்தான் “இரு தனி நாட்டுத் திட்டம்”. இதன் மூலம் அவர் இஸ்ரேல் என்ற தனி நாட்டுக்கான வாழும் உரிமையையும், பாலஸ்தீன மக்களுக்கான வாழும் உரிமையையும் ஒரே நேரத்தில் உறுதிப்படுத்த முடியும் என உறுதியாக நம்புவதாகக் கூறியிருந்தார்.
அத்துடன் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதையும், இரு நாடுகளையும் ஒரு குடையின் கீழ் இணைப்பதையும் அவர் எதிர்ப்பதாகக் கூறியிருந்தார். மேலும் ஜனாதிபதி, பைடென் “ஐக்கிய அமெரிக்க சட்டத்திற்கு இணங்க பாலஸ்தீன மக்களுக்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அகதிகளுக்கான உதவி உட்பட காசாவில் நடந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பதோடு, கிழக்கு ஜெருசலேமில் அமெரிக்க துணைத் தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், வாஷிங்டனில் [பாலஸ்தீன விடுதலை அமைப்பு] பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுப்பதாகவும், முக்கியமாக டிரம்ப் நிர்வாகம் நிறுத்திய பாலஸ்தீனியர்களுக்கு பல தசாப்தங்களாக வழங்கப்பட்டு வந்த பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவி முயற்சிகளை மீண்டும் தொடங்குவதாக “உறுதியளித்திருந்தார்.
அத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பரில், பைடென் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேற்குக் கரையின் சில பகுதிகளை இணைப்பதற்கான திட்டங்களை காலவரையின்றி ஒத்திவைத்த முடிவை வெகுவாக மெச்சிப் பாராட்டியிருந்தார்.
பாலஸ்தீனியர்களுடனான எங்கள் உரையாடலை மீண்டும் தொடங்குவதும்,இரு தனி நாட்டுத் தீர்வை சாத்தியமற்றதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பது தான் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய அமைதிக்கான முதற் தீர்வாக இருக்க முடியும் என்று பைடன் கூறியிருந்தார்.
இவை அனைத்தையும் விட, 1967 க்கு முன்னர் எல்லைகளால் நிர்ணயிக்கப்பட்ட மேற்குக் கரை நிலத்தை உள்ளடக்கிய ஒரு பாலஸ்தீனிய அரசை ஸ்தாபிப்பதை ஆதரிப்பதாக பைடென் கூறியமை தான் இப்போதைய மோதலுக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பைடன் எவ்வாறு தொடர்புபடுகிறார்?
பைடனுடைய தேர்தல் அறிக்கையில் மேற்கூறப்பட்ட விடயங்கள் இரு தரப்பினருக்கும் சார்பானதாகப் பொதுவான பார்வைக்குத் தோன்றினாலும், இஸ்ரேலியர்களைப் பொறுத்த வரையில் இதுகாறும் அவர்களின் பாலஸ்தீனத்தை முழுமையாக ஆட்டையைப் போட்டு விழுங்கி ஏப்பம் விடும் திட்டத்திற்கு இது ஒரு பாரிய அடியாக இருந்தது. கடந்த ட்ரம்ப் அரசாங்கத்தில், பிறப்புச் சான்றிதழலில் பிறந்த இடமாக ஜெரூசலமைக் குறிப்பிட முடியும் என்பது தொடங்கி ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது வரை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறுக்கு வழியில் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் போது பைடனின் இந்த அறிவிப்புக்கள் அவர்களுக்கு மணிக்கு 150கி. மீ வேகத்தில் வீசப்பட்ட பந்தை பளார் என்று எதிர்த்திசையில் அடித்தது போன்றது தான்.
ஏனெனில், இஸ்ரேல் என்ற நாடு 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதல் இன்று வரை எந்தவொரு நடவடிக்கைக்காகவும் முழுமையாக பேச்சுவார்த்தை மூலம் இணக்கத்திற்கு வருவதற்கு முயற்சி செய்யாமையும், பிரித்தானியாவினதும், அமெரிக்காவினதும் அதிகாரங்களை உச்சபட்ச பயன்பாட்டிற்கு எடுத்து அராஜகமாகவே அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது உலகறிந்த உண்மை. நிலைமை இப்படி இருக்கும்போது தற்போது இஸ்ரேலால் வலிந்து உருவாக்கப்பட்ட இந்த மோதல் பல விடயங்களை சுட்டிக்காட்டுகிறது.
1. பைடனின் அறிக்கைகளின் விளைவால் இஸ்ரேலுக்கு தனது விரிந்த இஸ்ரேல் கனவுக்கு பாதிப்பு வரும் என்று ஏற்பட்டுள்ள பயத்தை சுட்டிக்காட்டுகிறது.
2. இந்த விடயத்தில் பைடன் அரசாங்கம் எவ்வளது தூரம் இறங்குவதற்கு தயாராக உள்ளது என்பதை இஸ்ரேல் சோதித்துப் பார்க்கிறதா என்கிற கேள்வி எழுகிறது.
3. கடந்த வாரம் தனது அதிகாரங்களை இழக்கும் விளிம்பில் நெத்தன்யாகு இருந்தார். அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதும் அவரது எதிரிகள் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்திற்கு மிக நெருக்கமாகப் போய்க்கொண்டிருக்கும் போது, இந்த சண்டை மூண்டதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
4. இது பைடனை சிக்கலில் ஆழ்த்துவதற்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நேதன் யாஹூ கூட்டணியின் முயற்சியாக இருக்கும் என்ற சந்தேகமும் எழுகிறது.
எது எவ்வாறாயினும் அமெரிக்கா தற்போது பாரியதொரு தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது உறுதி. அந்த தர்மசங்கடங்கள் முக்கியமான 4 வழிகளில் ஏற்பட்டுள்ளது.
1. மத்திய கிழக்கு பிரச்சினைகளை முடிந்தளவு சுமூகமாக்கி அதற்குண்டான இராணுவ செலவுகளைக் குறைக்க முயன்ற அமெரிக்காவின் புதிய கொள்கைக்கு இது பெரிய தலையிடியாக மாறியுள்ளது.
2. இந்தப் பிரச்சனையை மிக விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டிய கடப்பாட்டிற்கு பைடன் தள்ளப்பட்டுள்ளார். காரணம் இப்போதே ட்ரம்பும், ட்ரம்ப் ஆதரவாளர்களும் பைடனை முதுகெலும்பற்றவராக சித்தரிக்கத் தொடங்கிவிட்டனர்.
3. மத்திய கிழக்குப் பிரச்சனைகளை விட இந்தோ-பசுபிக், சீன பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முனைந்த பைடன் அரசிற்கு இது ஒரு மேலதிக தலையிடியாக மாறியுள்ளது.
4. இரு தரப்பும் மாறி மாறி சண்டையிடுவது பைடனின் ‘இரு தனி நாட்டுத் தீர்வுத் திட்டத்தை’ ஒருபோதும் சாதிக்க முடியாமல் போய்விடும் என்ற பயத்தையும் பைடன் அரசிற்கு கொடுத்திருக்கக்கூடும்.
இந்நிலையில் பைடன் இந்தப் பிரச்சினைக்கு எப்படி மத்தியஸ்தம் வகிக்கப் போகிறார் என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.