ஒரு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் போது மையவாடியின் நம்பிக்கையாளர் சபைக்கு உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஊரில் ஒரு ஜனாஸா நிகழ்ந்தவுடன் மையவாடிக்குரிய பள்ளியின் நிர்வாகத்துக்கு அறிவிப்பு செய்யப்பட்டு கப்று வெட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதும், பள்ளிவாசலில் இருந்து கபன் துணி, சந்தக் போன்றவை ஜனாஸா வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவதும் வழமையான நிகழ்வு.
அவ்வாறு ஜனாஸா நல்லடக்க ஏற்பாடுகள் செய்வதற்கு அவசரப்படும் ஜனாஸாவின் உரிமையாளர்கள் மையவாடி எந்தப் பள்ளி நிர்வாகத்துக்கு பொறுப்பாக உள்ளதோ அந்த நிர்வாகத்துக்கு அறிவிப்புச் செய்வதற்கும்,சந்தக் எடுத்துச் செல்வதற்கும் வேகமாக செயற்படுவார்கள்,
ஆனால் உரிய பள்ளி நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய கிராம அலுவலரதும்,மரண பதிவாளரதும் அடக்க அனுமதிக்கான பத்திரத்தை சமர்ப்பிப்பதில் கூடிய கவனமெடுப்பது இல்லை.
சிலவேளைகளில் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட பின்னர் பள்ளி நிர்வாகம் உரிய ஆவணங்களை கேட்டு உரியவர்களோடு பிரச்சினைகளும் ஏற்பட்டு விடுகின்றன.
மையவாடி நிர்வாகம் நல்லடக்கம் செய்யப்படும் ஜனாஸாக்களின் பதிவேட்டை பேனுவதும்,உரிய அனுமதி ஆவணங்களை கோவைப் படுத்தி பராமரிப்பில் வைத்திருப்பதும் கட்டாயமாகும்.
ஏதாவது சட்டத்தேவை ஏற்படுமாயின் மையவாடி நிர்வாகத்திடம் இவற்றை சமர்ப்பிக்குமாறு சட்டரீதியாக கோரிக்கை விடுக்கப்பட்டால் எந்நேரத்திலும் அவற்றை சமர்ப்பிக்க நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும்.
கப்று வெட்டுவதற்கு முன்பும்,சந்தக் எடுத்துச் செல்லுவதற்கு முன்பும் ஆகக் குறைந்தது கிராம அலுவலரது சான்றாவணத்தினதும்,மருத்துவரது வைத்திய உறுதி சான்றையும் நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க நமது சமூகம் ஒத்துழைக்க வேண்டும்.
அல்லது ஜனாஸா நல்லடக்கத்துக்கு முன்னராவது ஆவணங்களை நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.பின்னர் பிறப்பு,இறப்பு பதிவாளரால் வழங்கப்படும் அடக்க அனுமதி பத்திரத்தையும் நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறான ஆவணங்களை சமர்ப்பிப்பதில் உரியவர்கள் கூடிய கவனமும்,அக்கறையும் எடுக்க வேண்டும்.
அதேநேரம் மையவாடியை பராமரிக்கும் நிர்வாகமும் ஆவணங்களை உரிய முறையில் சமர்ப்பித்தால்தான் கப்று வெட்டப்படும், சந்தக் எடுத்துச் செல்லலாம்,அடக்க செய்ய அனுமதிக்கப்படும் என்று இறுக்கமான நிலைப்பாட்டில் செயட்பட வேண்டும்.
சமூகமும்,நிர்வாகமும் இவ்விடயத்தில் முரண்படாமல் ஒழுங்கு முறைகளை பேனுவதில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
ஏனைய சமூகங்களில் மரணம் நிகழ்ந்தால் பிரேதத்தை இறுதிச் சடங்கிற்கான மலர்ச்சாலைக்கு (Funeral House) அனுப்பி விடுவார்கள்.
மலர்ச்சாலை ஊழியர்கள் எம்பார்ம் செய்வற்காக பிரேதத்தின் சில உட்பாகங்களை அகற்ற வேண்டி இருப்பதாலும், பிரேதத்துக்கு உரிய கலாசார ஆடையை அணிவிப்பதாலும் உரிய பிரேதத்தின் வைத்திய அறிக்கை,கிராம சேவையாளரது பத்திரம், பதிவாளரது மரண பதிவு சான்றிதழ் என்பவை சமர்ப்பிக்கப்பட்டால் தான் மலர்ச்சாலைகள் பிரேதங்களை பொறுப்பேற்பார்கள்.
இத்தகைய கட்டாயம் இருப்பதால் ஏனைய சமூகங்கள் மலர்ச்சாலைக்கு பிரேதத்தை ஓப்படைக்கும் போதே, தேவையான ஆவணங்களை, மரண பதிவு சான்றிதழ் உட்பட சமர்ப்பித்து விடுவார்கள்
ஆனால் நமது சமூகத்தில் ஜனாஸாவை எவ்வளவு விரைவாக அடக்கம் செய்ய முடியுமோ அவ்வளவு வேகமாக அடக்கம் செய்ய வேண்டும் (இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் என்றல்ல)என்ற மார்க்க வழிகாட்டல் இருப்பதால் உடனடியாக ஆகக் குறைந்தது மருத்துவ உறுதிக் கடிதத்தையும்,கிராம அலுவலரது சான்றுப் பத்திரத்தையுமாவது அடக்கம் செய்வதற்கு முன்னராவது உரிய நிர்வாகத்துக்கு ஒப்படைக்குமாறு மையவாடி நிர்வாகம் இறுக்கமான கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும், சமூகமும் கூடிய கவனமெடுத்து ஒத்துழைக்க வேண்டும்.பின்னர் மரண பதிவு சான்றிதழையும் பெற்றுக் கொள்வதில் கட்டாய நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.
“அஜ்மல் மொஹிடீன்”