கொரோனாவும் வக்ஸீனும்!

Date:

தொகுப்பு: ஹாபிஸ் இஸ்ஸதீன் 

 

கொரோனா வைரஸின் தாக்குதலைக் கண்டு நாம் மிரண்டு போயிருக்கிறோம். நவீன காலத்தின் சாபக்கேடாக இதனை விவரிக்கின்றோம். ஆனால் இதனை விடப் பயங்கரமான வைரஸ் நோயொன்று பல நூற்றாண்டுகளாக உலகில் பெரும் அழிவை ஏற்படுத்தி வந்ததை நாம் மறந்திருக்கலாம். அது தான் Variola என்ற வைரஸினால் உண்டாகும் வசூரி என்னும் பெரியம்மை (Smallpox) நோய். கொரோனாவைப் போலன்றி அதனால் பீடிக்கப்பட்டவர்களுள் மூன்றிலொரு பகுதியினர் உயிரிழந்தனர். தப்பியவர்கள் குருடர்களாகவும் மாறா வடுக்களைக் கொண்டவர்களாகவும் மாறினர். 20ம் நூற்றாண்டின் முதற் பாதியில் மாத்திரம் சுமார் 40 கோடி மக்கள் அதனால் மரணமுற்றனர். 1950களில்கூட சுமார் 5 கோடிப் பேர் அக்கொடிய நோயினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

 

இலங்கையிலும் பண்டைக்காலம் முதல் இந்நோய் பல பிரதேசங்களிலும் காலத்துக்குக் காலம் பரவிப் பெரும் அவலத்தையும் அழிவையும் ஏற்படுத்தியிருக்கிறது. தேவநம்பிய திஸ்ஸ அரசனின் காலத்தில் இந்நோய் கடுமையாகப் பரவியிருக்கின்றது. அநுராதபுரத்திலிருந்து தலைநகர் மாற்றப்படுவதற்கு இப்பயங்கரத் தொற்று நோயின் பரம்பலும் ஒரு காரணமாக இருந்ததாகச் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஸிரிஸங்கபோ மன்னரின் ஆட்சிக் காலத்தில் (3ம் நூற்றாண்டில்) நாட்டின் சனத்தொகையில் பாதிப்பேர் பெரியம்மையினால் உயிரிழந்துள்ளனர்.

 

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில்கூட பல தடவைகள் பெரியம்மைப் பரவல் நிகழ்ந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் ஏற்பட்ட பரவலின் போது எனது தாயாரின் குடும்பத்தினர்கூட தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அறிந்தேன். வரியோலா வைரஸுக்கு எதிரான வக்ஸீன் பரவலாக வழங்கப்படும் வரை இடையிடேயே பெரியம்மைப் பரவல் ஏற்பட்டு முழு ஊர்களையே அழித்திருக்கின்றது. கண்டி அரசர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்ஹகூட பெரியம்மையால் பாதிக்கப்பட்டதனால் அவரது முகத்தில் பெரிய அம்மை வடுக்கள் காணப்பட்டன.

 

இலங்கையில் பெரியம்மையைக் கட்டுப்படுத்துவதில் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்த வக்ஸீன் பெரும் பங்களிப்புச் செய்தது. தமது வக்ஸினின் செயற்றிறனைச் சுட்டிக்காட்டுவதற்கு எட்வர்ட் ஜென்னர் இலங்கையை ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆசியாவிலே பெரியம்மையை முதன்முதலாக ஒழித்துக்கட்டிய நாடாக இலங்கை போற்றப்பட்டது. பெரியம்மை வக்ஸீன் வழங்கும் செயற்றிட்டம் மிக ஒழுங்காகவும் கண்டிப்பாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம். அந்த வக்ஸினைப் பயன்படுத்தியதன் காரணமாக பெரியம்மை முழு உலகிலிருந்தும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக 1980 மே மாதத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியது.

 

வக்ஸீன் என்னும் தடுப்பு மருந்துகள் எவ்வாறு தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன என்பதற்கு மேற்சொன்ன பெரியம்மையின் கதையே போதுமானது. கொரோனாவுக்கு எதிராக வக்ஸீன் தேவையா என்ற கேள்வி அர்த்தமற்றது என்றே நான் கருதுகின்றேன். இன்று எத்தனையோ தொற்றுநோய்கள் வராமல் காப்பதற்காகக் குழந்தைப் பருவம் முதலே பலவிதமான தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவருகின்றோம். இவற்றின் காரணமாக தொற்று நோய்களின் பரவல் கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

.

வைரஸொன்றுக்கு எதிராகப் போராடும் பிறபொருளெதிரிகளை நோய் தொற்ற முன்னரே உடலில் உருவாக்கச் செய்வதே வக்ஸீனின் வேலை. எமது உடலின் நிர்ப்பீடனத் தொகுதி அதற்கேற்றவாறு ஒத்துழைத்துப் பிறபொருளெதிரிகளைப் போதியளவில் உருவாக்கினால்தான் ஒரு குறிப்பிட்ட வக்ஸீன் நோயைத் தடுப்பதில் வெற்றிபெற முடியும். சிலரைப் பொறுத்தமட்டில் ஒரு வக்ஸீன் பயனளிக்காமற் போகலாம். இவ்வாறு பயன்தரும் வீதம் 50%க்குக் கூடுதலாக இருந்தால் மட்டுமே ஒரு வக்ஸீனுக்கு அங்கீகாரம் வழங்குவார்கள். அதாவது வக்ஸீனைப் பெற்றுக் கொள்ளும் 100 பேரில் 50க்கு மேற்பட்டோரில் நோய் தடுக்கப்பட வேண்டும். தற்போது பயன்படுத்தப்படும் கோவிட்-19 வக்ஸீன்களில் இந்த வீதம் 80%க்கும் மேற்பட்டதாக இருக்கின்றது.

 

கோவிட்-19 வக்ஸீன்களில் மூன்று பிரதான வகைகள் இருக்கின்றன. நோயை உருவாக்கும் கொரோனா வகை வைரஸிலிருந்து RNA மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்து ஊசி மூலம் மனிதர்களுக்குச் செலுத்துவது ஒரு வகை. இவ்வாறு செலுத்தப்படும் RNA மூலக்கூறுகள் மனித உடலில் mRNA ஆக மாறி கோவிட்-19க்குரிய Antigen புரதத்தை உருவாக்கும். இதன் விளைவாக எமது நிர்ப்பீடனத் தொகுதி கோவிட்-19க்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை எமது உடலில் தோற்றுவிக்கும். இதன் காரணமாக, உண்மையாகவே கோவிட்-19 வைரஸ் எமக்குத் தொற்றினால் அதற்கு எதிராகப் போராடி எம்மைக் காப்பதற்கு எமது உடல் ஆயத்தமாக இருக்கும். Pfizer-BioNTech, Moderna ஆகிய வக்ஸீன்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

 

வெப்பத்தை அல்லது போர்மலின் போன்ற இரசாயனப் பதார்த்தமொன்றைப் பயன்படுத்தி வைரஸை செயலிழக்கச் செய்தபின் அதனை ஊசி மூலம் செலுத்தி உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் வக்ஸீன்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. இப்போது எமது நாட்டில் வழங்கப்படும் சீனாவில் தயாரிக்கப்பட்ட Sinopharm, இந்தியாவில் Bharat Biotech நிறுவனத்தால் தயாரிக்கப்படும் Covaxin என்பன இந்த வகைக்குரியவை.

 

ஆபத்து விளைவிக்காத வேறு வகை வைரஸ் ஒன்றின் ஓட்டுக்குள் கோவிட்-19 ஐ உருவாக்கும் கொரோனா வைரஸின் புரதத்தைப் புகுத்தி அதனை உடலினுள் செலுத்துவதன் மூலம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் வக்ஸீன்கள் மூன்றாம் வகையைச் சேர்ந்தவை. மனித உடலினுள் சென்ற பின் இந்த வைரஸ் காவிகள் (Viral vectors) பல்கிப் பெருக மாட்டா. எனவே அவற்றினால் தீங்கு எதுவும் ஏற்படாது.

 

AstraZeneca என்னும் நிறுவனமும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும் இணைந்து தயாரித்த வக்ஸீன் இந்த வகையைச் சேர்ந்தது. இதனைத்தான் இந்தியாவின் Serum Institute உற்பத்தி செய்து Covishield என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. நம் நாட்டில் முதலில் வழங்கப்பட்டது இதுவே. ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் Sputnik Light, Sputnik V என்பனவும் Johnson & Johnson நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதும் இந்த வகையைச் சேர்ந்தவை.

இப்போது 16 வகையான வக்ஸீன்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 300க்கு மேற்பட்டவை ஆய்வு நிலையில் இருக்கின்றன.

 

இவற்றுள் எந்த வக்ஸீன் சிறந்தது என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு எது முதலில் கிடைக்கிறதோ அதுதான் சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். இவையனைத்தும் பாதுகாப்பானவை; செயற்றிறன் மிக்கவை; நோயின் கடுமையான தாக்கத்திலிருந்து பாதுகாப்புத் தரக்கூடியவை. இவற்றினால் ஏற்படக்கூடிய பொதுவான பக்க விளைவுகள் ஆபத்து அற்றவை. பாரதூரமான பக்க விளைவுகள் ஏற்படுவதற்குரிய ஆபத்து மிக மிக அரிது. நாம் உட்கொள்ளும் பொதுவான மருந்துகள்கூட இப்படியான ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஏன், நாம் அன்றாடம் உட்கொள்ளும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற உணவுகளும் இப்படி ஆபத்தான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியம் இருக்கத்தான் செய்கிறது. அதனைத் தவிர்க்க முடியாது.

 

இலங்கையில் பயன்படுத்தப்படும் Covishield, Sinopharm ஆகிய இரண்டும் இரு தடவைகளில் வழங்கப்பட வேண்டியவை. இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் Covishieldக்கு 6-8 வாரங்களாகும். (12-16 வாரங்கள் வரை இக்காலம் நீடிக்கப்படலாம் என இந்திய அரசு அறிவித்திருந்தது.) Sinopharmஐப் பொறுத்தமட்டில் இவ்விடைவெளி 3 முதல் 4 வாரங்களாகும்.

எனினும் இரண்டு ஊசிகளுக்கும் இடையிலான இடைவெளி நீடிக்கப்படும் போது வக்ஸீனின் செயற்றிறன் வீழ்ச்சியடைகிறது. அதைத் தவிர வேறு தீய விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. முதற் தடவையாக Covishield எடுத்தவர்கள் இரண்டாவது தடவையில் Sinopharmஐ எடுக்க முடியாது.

 

பொதுவாக இரண்டாவது ஊசி எடுத்து இரண்டு வாரங்களின் பின்னர்தான் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி முழுமையாக உருவாகின்றது. இது 6 மாதங்கள் வரை நீடித்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களின் பின்னர் நோயெதிர்ப்புச் சக்தி அறவே இல்லாமற் போய்விடும் என்பது இதன் கருத்தல்ல. இது பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்கின்றன.

 

“நாம் வக்ஸீன் எடுப்பதுமில்லை. எமக்கு நோய் வருவதுமில்லை” என்று கூறுபவர்கள் அவர்களைச் சூழ உள்ளவர்கள் வக்ஸீன் எடுப்பதனால்தான் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...