துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதானது, மிகமோசமான குற்றச்செயல்களுக்கான பொறுப்புக்கூறலை அரசாங்கம் புறக்கணிப்பதையே வெளிப்படுத்துகிறது.
அதுமாத்திரமன்றி பாரபட்சமான நிலைப்பாடுகளைக் கொண்டிராத சட்டத்தின் ஆட்சி இலங்கையில் நிறுவப்படவேண்டியதன் அவசியத்தையும் இது நன்கு உணர்த்தியிருக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பலவருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டமையானது, இந்தச் சட்டம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படல் மற்றும் ஏனைய தரப்புக்கள் அதற்கான அழுத்தத்தை வழங்கல் ஆகியவற்றின் அவசியத்தை எவ்வகையிலும் இல்லாமல் செய்துவிடாது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 கைதிகள் இலங்கை அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமென்றாலும், மிகவும் மோசமான அந்தச் சட்டம் உடனடியாக மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அது வலியுறுத்தவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.