எரிபொருள் விலை தற்பேது மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல கஷடங்களுக்கு முகங்கொடுக்கவுள்ளனர். இதனைக் கண்டித்து பிரதமர் தலைமையில் அமைச்சர்கள், எம்.பிக்கள் அடுத்த பாராளுமன்ற அமர்வுக்கு சைக்கிளில் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கடந்த எமது அரசு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்துக்கமைய நியாயமான எரிபொருள் விலையேற்றம் இடம்பெற்ற போது அதற்கெதிராக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
தலைமையிலான குழுவினர் பாராளுமன்ற அமர்வுக்கு சைக்கிளில் வருகை தந்தனர்.
எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் கஷடங்களை அனுபவிப்பதாகவும், அந்த விலையேற்றத்தை எதிர்த்தே சைக்கிளில் பாராளுமன்றம் வந்ததாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருவதால் அதனை அனைவரும் விளங்கிக் கொண்டுள்ளோம்.
அன்று மக்களுக்காக சைக்கிளில் மற்றும் மாட்டு வண்டிகளில் பாராளுமன்றம் வந்தவர்கள் அடுத்த பாராளுமன்ற அமர்வில் அதனைச் செய்வார்களா என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.
இவர்களது ஏமாற்று அரசியல் குறித்து அடுத்த பாராளுமன்ற அமர்வு வரை மக்கள் பொறுத்திருந்து பார்க்க முடியும்.
இப்போது நியாயமான காரணங்களுக்கு அப்பால் அதிக எரிபொருள் விலையேற்றம் இடம்பெற்றுள்ளது. நாட்டு மக்களைச் சுரண்டி சுகபோகம் காணும் அரசின் நோக்கமே இந்தளவு எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணமாகும்
இந்த எரிபொருள் விலையேற்றத்தால் போக்குவரத்துச் செலவு உட்பட சகல பொருட்களினதும் விலைகள் அடுத்தடுத்து அதிகரிக்கப்படவுள்ளன. இதனால் தாங்க முடியாத சுமையை மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தூர நோக்கற்ற செயற்பாடு காரணமாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சகல பொருட்களுக்கும் ஏற்கனவே விலை அதிகரித்துள்ளது. மக்கள் இந்த சுமையை சுமக்க முடியாமல் சுமந்து வருகின்றனர். இந்த அரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடுகளே இந்த விலையேற்றங்களுக்கு காரணம்.
இந்த சூழ்நிலையிலேயே மீண்டுமொரு பாரிய விலையேற்ற சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மக்கள் நலனைப் பற்றிய எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்பதை இது நன்கு தெளிவு படுத்துகின்றது.