முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டமானது எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும் , நீதியையும் உத்தரவாதப்படுத்தக்கூடிய வகையில் திருத்தப்படல் வேண்டும் என்ற வாக்குவாதங்கள் இடம்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.பன்மைத்துவ கலாச்சாரத்தைக் கொண்ட சமூக அமைப்பில் இலங்கை முஸ்லிம்கள் தமக்கான சவால்களை முகங்கொடுக்கக்கூடிய வகையில் முஸ்லிம்களின் குறைகளை முக்கியமாக முஸ்லிம் பெண்களினதும் ,சிறுமிகளினதும் குறைகளைத் தீர்க்கக் கூடிய வகையில் சட்டங்கள் திருத்தப்படல் வேண்டும் என்பதே குறிக்கோளாகும்.
கடந்த காலங்களாக இந்த விடயம் மிக விருவிருப்பாக பேசப்பட்டது எனினும் தற்போது அரசாங்கம் காதி நீதிமன்ற விடயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை நேற்று (26) வெளியிட்டிருந்தது .அதாவது
நாட்டில் அமுலில் இருந்து வரும் காதி நீதிமன்ற முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். அத்தோடு முஸ்லிம் ஆண்களின் பலதார மணத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும். முஸ்லிம் பெண்களும் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும்.
மேலும் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். திருமணத்துக்கு மணமகளின் சம்மதம் பெறப்பட்டு பதிவில் கையொப்பம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக நீதியமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட சீர்திருத்தங்களுக்கான ஆலோசனை குழுவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாக குழுவின் தலைவரும் வக்பு சபையின் தலைவருமான சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்திருந்தார்.
என்றாலும் காதிநீதிமன்ற முறைமையை இல்லாதொழிக்காது அதன் கட்டமைப்பை மேம்படுத்துமாறும் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஆலோசனைக்குழு அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது எனவும் அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் விளக்கமளிக்கையில், ‘காதி நீதிபதிகள் மற்றும் அவரது தகைமைகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதால் இக்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக காதி நீதிபதிகளாக நியமிக்கப்படுவோர் சட்டத்தரணிகளாகவும், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் அறிவுள்ளவராகவும் சட்டத்தரணியாக 5 வருட அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும் என குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அவர்கள் 25 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஏனைய நீதிபதிகளுக்கு வழங்கப்படுவது போன்ற பயிற்சிகள் அவர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். சமரச முயற்சிகள் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு ஏனைய நீதிபதிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் வழங்கப்பட வேண்டும். காதி நீதிமன்ற கட்டமைப்பினை மேம்படுத்துவதன் மூலம் இதன் செயற்பாடுகளை உச்ச நிலைக்கு கொண்டுவர முடியும்.
காதிகள் மேன்முறையீட்டு சபைக்கு நியமனம் பெறும் உறுப்பினர்களின் தகைமைகள் தொடர்பிலும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவர்கள் 10 வருட அனுபவம் கொண்ட சட்டத்தரணிகளாக, முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் அறிவுள்ளவராக 35 – 65 வயதுக்குட்டபட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் முன்மொழிவுகள் வைக்கப்பட்டள்ளன.
காதி நீதிமன்ற முறைமையை மேம்படுத்துவதா என்பது தொடர்பில் அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும். இம்முறைமை இல்லாமலாக்கப்பட்டால் திருமணம் தொடர்பான விடயங்களுக்கு மாற்றுத் தீர்வாக குடும்ப நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும். குடும்ப நீதிமன்றம் நிறுவப்படாத பட்சத்தில் மாவட்ட நீதிமன்றினையே மாற்றுத் தீர்வாக கொள்ள வேண்டும். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் மாவட்ட நீதிமன்றத்தினூடாக நிர்வகிக்கப்பட முடியும் எனவும் ஆலோசனைகள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1951ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கு சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் 2020.12.31ஆம் திகதி 10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்களைத் தவிர முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின் காதி முறைமைக்கு உட்பட்ட ஏனைய விடயங்களை மையப்படுத்தி தனது முன்மொழிவுகளை அறிக்கையாக கடந்த திங்கட்கிழமை நீதியமைச்சர் அலி சப்ரியிடம் சமர்ப்பித்தது.
ஆலோசனைக் குழுவுக்கு ஏற்கனவே அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டது. முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். திருமணப் பதிவில் மணமகளின் கையொப்பம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். பெண்கள் காதி நீதிபதிபளாக நியமிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் காதிநீதிமன்ற முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். முஸ்லிம் ஆண்களின் பலதார மணம் தடை செய்யப்பட வேண்டும் என 2021.03.08 ஆம் திகதிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆலோசனைக்குழுவுக்கு 2021.04.29ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை ஆலோசனைகளை ஊக்குவித்தல் திருமணத்துக்கு முன்னரான ஒப்பந்தங்களை அங்கீகரித்தல் திருமண சமரச செயற்பாடுகளுக்குரிய வசதிகளை ஏற்படுத்தல் போன்ற முன்மொழிவுகளையும் குழு சமர்ப்பித்துள்ளது.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விளங்குதல், இஸ்லாமிய சட்டவியல் அரசியலமைப்பு கோட்பாடுகள், ஏனைய நியாயாதிக்கங்களில் காணப்படுகின்ற சட்டமாதிரிகள் என்பன குழுவின் கலந்துரையாடலில் செல்வாக்கு செலுத்தியதாகவும் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலிலுள்ள சட்டத்தில் ‘வொலி’யின் பிரசன்னம் அவசியமாகும். என்றாலும் இது தொடர்பில் குழு அங்கத்தவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது. ‘வொலி’ அவசியமில்லை என இருவர் முரண்பட்டனர். இந்நிலையில் மணப்பெண்ணின் விருப்பம் இது தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை மக்களுக்கு மிகவும் அவசியமான தீர்வுகளை இச்சீர்திருத்தங்கள் வழங்கும் என குழு ஆத்மார்த்தமாக நம்புகிறது. முன்மொழிவுகளை கவனத்தில் கொண்டு சமத்துவம் மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய ஒரு முடிவை மேற்கொள்ளுமாறு இக்குழு அமைச்சரவையை வேண்டுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ் விடயம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதோடு பல்வேறு தரப்பினரும் இந்த அறிக்கைக்கு எதிராக இருப்பதை காணலாம்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் காதிநீதிமன்றங்களும், பெண் உரிமை , மறுக்கப்படுவதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பற்றியும் , முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் சீர்திருத்தங்கள் அவசியமா? என்ற பல்வேறு கருத்துக்களை முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் முன்வைத்திருந்தனர்.
“பழைய சட்டத்தை வைத்து வாழ்வதென்பது தேசிய மட்டத்திலும் பெரும்பான்மை சமூகத்தில் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது” என்கிறார் பேருவளை ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய கற்கை பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மத் அரபாத் கரீம் அவர்கள்,
முஸ்லிம் தனியார் சட்டத்தில் சீர்திருத்தங்கள் அவசியம் என்ற கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.எந்தவொரு சட்டமாக இருந்தாலும் காலமாற்றத்திற்கு ஏற்ப சீர்திருத்தம் செய்வது இயல்பானது.அந்தவகையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை பொறுத்தவரை 200 வருடகாலமாக பல சீர்திருத்தங்களுக்கு உட்பட்டு வந்திருக்கின்றது.அந்தவகையில் அதனை மற்றொரு முறை சீர்திருத்தம் செய்வது பிழையான விடயமல்ல அது இந்த காலத்தை பொறுத்தவரையில் ஒரே உள்ளடக்கமாக இருக்கலாம்.
முஸ்லிம் தனியார் சட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்தும் பழைய சட்டத்தை வைத்து வாழ்வதென்பது தேசிய மட்டத்திலும் பெரும்பான்மை சமூகத்தில் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது.எனவே இதனை குர்ஆன்,சுன்னாவினுடன் உடன்படும் வகையில் இதில் திருத்தங்களை மேற்கொள்வது பொருத்தமானதாகும்.மார்க்கத்தில் இதற்கு அனுமதியிருந்தும் இதில் பிடிவாதமாகவும்,சர்ச்சையாகவே வைத்துக் கொண்டிருப்பது பொருத்தமானதல்ல.
காதி நீதிமன்றங்களை பொறுத்தவரையில் பெண்களுக்கு அநீதி இடம்பெற்றிருப்பதை போன்று ஆண்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.காதிநீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்பில் பெண் தரப்பிற்கு சார்பாக வழங்கப்பட்ட தீர்ப்பினாலும்,ஆண் தரப்பிற்கு சார்பாக வழங்கப்பட்ட தீர்ப்பினாலும் இரண்டு தரப்புமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.என்னிடம் கூட காதி நீதிமன்ற தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் அவருடைய கதையை மிக வருத்தத்துடன் தெரிவித்தார்.எனவே பெண்கள் மாத்திரம் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூற முடியாது.இதற்கு காதிமார்களுடைய பலவீனமாகவும்,பக்கச்சார்பு நிலையமாகவும் இருக்கலாம்.
காதி நீதிமன்றங்களில் தகுதியானவர்கள் பணிக்கு அமர்த்தப்படல் வேண்டும்.தகுதி எனும் போது ஷரியா துறையை மாத்திரம் படித்தவர்கள் மாத்திரம் இருக்க வேண்டும் என்பதை தாண்டி காதிநீதிமன்ற விடயமென்பது பெண்களோடு ,ஆண்களோடு,உளவியலோடு, பிரச்சினைகளோடு, முரண்பாடுகளோடு, ஒழுக்கத்தோடு, பணத்தோடு, இரகசியம்,குடும்பத்தோடு,மார்க்கத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் என பல்வேறு வகைப்படுகின்றது.எனவே வெறுமனே குர்ஆன்,சுன்னாவை மாத்திரம் படித்தவர்கள் தான் இருக்க வேண்டும் என்பது பொருத்தமானதல்ல.எனவே பல தகைமைகள் பூர்த்தி செய்தவர்களாகவும் , முக்கியமாக இஸ்லாமிய பிக்ஹில் நிகாப்,தலாக்,இத்தா போன்ற விடயத்தில் இஸ்லாமிய சட்டங்களை மிகத் தெளிவாக தெரிந்திருக்கக் கூடியவராகவும் அதன் இலக்குகளை படித்திருக்கக் கூடியவராகவும் ஒரு காழி இருக்கும் போது தலாக் நிகழாம இருக்க எப்படி வழி செய்ய முடியும் என தீர்மானிக்க முடியும்.காழியாருக்கு இந்த நாட்டினுடைய பொது சட்டங்களில் அவதானமும் ஏனைய நீதிமன்றங்கள் எவ்வாறு இயங்குகின்றது என்ற பொது அறிவு , வார்த்தை பிரயோகங்கள் , தெளிவு இருக்க வேண்டும்.அத்தோடு உளவியலோடு சம்பந்தப்பட்ட , முரண்பாடுகளோடு சம்பந்தப்பட்ட விடயங்களை எவ்வாறு தீர்க்க முடியும் என்றும், எவ்வாறு கவனமாக வார்த்தைகளை கையாள்வது என்ற பல அறிவுகளை கொண்டவராக இருக்க வேண்டும்.
காதிமார்களை பயிற்றுவிப்பதற்கான முறையான நடைமுறை இந் நாட்டில் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை.இந்த நாட்டின் உயர் பீடம் என்று சொல்கின்றவர்களும் இதனை முறையாக திட்டமிட்டு தொடராக செய்து வருவதாக தெரியவில்லை.ஆனாலும் அவ்வப்போது சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.காதிமார்களை உருவாக்கும் பணிகளை செய்கின்ற நிறுவனங்களோ அவற்றை செயற்படுத்தும் நடைமுறைகளும் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய முதலாவது பணி வீட்டைப் பராமரிப்பது தான்.வீடு என்ற அந்த அடிப்படை நிறுவனத்தை கட்டியெழுப்புவதில் ஆண்களை விட பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கின்றது.அந்த நிறுவனம் ஒழுங்காக அமையுமானால் காதிநீதிமன்றத்திற்கு போகின்ற அளவுக்கு பிள்ளைகளுக்கு சூழ்நிலை வராது.குர்ஆன், ஹதீஸில் எங்குமே பெண்கள் காதியாக வர முடியாது என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.பொதுவான ஹதீஸ்களை வைத்துக் கொண்டு தான் சார்பாகவும் ,எதிராகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.எனவே , இமாம்களுக்கு மத்தியில் பெண்கள் காதியாக வர முடியாது என்ற ஏகோபித்த கருத்து இருக்கவில்லை.ஆரம்பகால இமாம்களான ஹனபி,மாலிகி,ஷாபி,ஹன்பலி மத்ஹப்கள் பெண்கள் காதியாக வரமுடியாது என கூறியிருக்கிறார்கள்.மறுபக்கத்தில் இமாம் தபரி,இப்னு காஸிம் ஆகியோர் பெண்கள் காதியாக வரமுடியும் என கூறியிருக்கிறார்.நாட்டினுடைய நிலைகளை ,சமூகத்தினுடைய தேவைப்பாடு களை அறிந்து தீர்மானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
அல்குர்ஆனில் சூரதுன் நிஸாவில் “அர்ரிஜ்ஜாலு கவ்வாமூன அலல் நிஸா” பெண்களை நிர்வகிப்பவர்கள் ஆண்கள் என்று பொருள்படுகின்றது.இதனை பல தப்ஸீர் ஆசிரியர்கள் விளக்கும் போது ,குடும்பத் தலைமைத்துவத்தை பற்றித் தான் இந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா கூறியிருக்கிறான்.அதைவிட்டு சமூகத்தின் விடயத்தில் இந்த வசனத்தை பிரயோகிக்க முடியாது என்பது தெளிவானதாகும்.
இலங்கையை தவிர மலேசியா போன்ற நாடுகளிலும் பெண்கள் காதியாக இருக்கின்றார்கள்.சர்வதேச பெண்களை விட எமது நாட்டு பெண்களினுடைய மனநிலை ,சமூக ஈடுபாடு என்பவற்றை பொருத்து தான் பெண்கள் காதியாக வர முடியும் என்பதை தீர்மானிக்க முடியும்.
“காதி நீதிபதிகளாக பெண்கள் வருவதற்கு சமத்துவ உரிமை மறுக்கப்படுவதை நான் அற்பத்தனமாக நினைக்கிறேன்.”என்கிறார் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள்.
முஸ்லிம் விவாக சட்டம் 1950 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது.காதிநீதின்றத் தொகுதிகள் 64 தற்பொழுது இயங்கி வருகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த நீதிமன்றங்களுக்கான நியாயதிக்க எல்லைகள் வகுக்கப்பட்டு இந்த நாட்டு சிவில் சட்டத்தின் ஒரு அங்கமாக முஸ்லிம்களுக்கு மாத்திரம் அவர்களுடைய விவாக , விவாகரத்து சட்டத்தில் எழுகின்ற சர்ச்சைகளுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்கவும் இந் நீதிமன்றங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றது.இது படிப்படியாக பல சீர்திருத்தங்களுக்கு உள்ளாகி வந்த போதிலும் தற்போதுள்ள காலத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியமாக உள்ளது.நீண்டகாலமாக இச் சட்டத்தை திருத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்த குழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தும் இதில் இதுவரை திருத்தங்கள் உள்வாங்கப்படாமல் இருப்பதற்கு எமது சமூகத்திற்குள்ளேயிருந்த கருத்து வேறுபாடுகளும் ஒரு காரணமாக இருந்தது எனலாம்.எந்த சட்டமாக இருந்தாலும் அதன் செயற்பாட்டு வடிவத்தில் பல குறைபாடுகளை கண்டறிந்து காலத்தின் தேவையறிந்து மாற்றங்கள் கொண்டுவரப்படல் வேண்டும்.இவ்வாறான சட்டங்களில் புதிய சீர்திருத்தங்கள் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக மற்றும் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாட்டிலும் பரவலாக உள்வாங்கப்பட்டிருக்கின்றது.அதேபோல் நம் நாட்டிலும் உள்வாங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.அது நியாயமானது என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.காதி நீதிமன்றங்களில் மாத்திரமல்ல , பெரும்பாலும் ஏனைய நீதிமன்றங்களிலும் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகம்.ஆணாதிக்க சமூக கட்டமைப்பு என்பது மேலைத்தேய நாடுகளை விட இன்று துரதிஷ்டவசமாக கிழக்காசிய நாடுகளான அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளிலும் கூடுதலாக காணப்படுகிறது.பெண்களின் சமூகப் படிமுறை மாற்றத்தில் அவர்கள் கல்விரீதியாகவும் ஏனைய துறைகளிலும் முன்னேறி இருக்கின்ற சூழலில் ஆண்களை முன்னுறுத்தி அவர்களுடைய பார்வையில் செயற்படுதல் இதனை ஆங்கிலத்தில் பற்றியாக்கள் ஸொசய்ட்டி என்று கூறுவார்கள்.இந்த செயல்பாடு முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை பொருத்தமட்டிலும் முஸ்லிம் பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் என்று போராட்டக் குழுவொன்றையே உருவாக்கியிருக்கிறார்கள்.இது சமூகக் கட்டமைப்பில் ஒரு பரிமாண மாற்றமாக அவற்றை அடையாளம் காண முடியும்.நான் நான்கு வருடங்கள் நீதியமைச்சராக பதவியில் இருந்தேன்.எனக்கு முதலில் நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.இதில் குறிப்பாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களில் உள்வாங்கப்பட வேண்டிய சீர்திருத்தங்களை முன்மொழியக்கூடியவாறு முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப்f தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த இந்த குழுவில் ஜம்மியத்துல் உலாம பிரதிநிதிகள், மூத்த சட்ட அறிஞர்கள் , பெண் செயற்பாட்டாளர்கள் என்று பலரையும் உள்வாங்கிய குழுவின் சிபாரிசுகளை அவசரப்படுத்தி பெற்றுக்கொள்வதற்காக பல முயற்சிகளை நான் மேற்கொண்டேன்.சில போது ஸலீம் மர்ஸுப்பை நேரடியாக சந்தித்து இதை என்னுடைய பதவிக்காலத்திலே நிறைவேற்றித் தந்தால் திருத்தச்சட்டங்களை பாராளுமன்றத்தில் முன்மொழிந்து நிறைவேற்ற முடியும் என்றும் கூறியிருந்தேன்.ஒன்பது வருடங்கள் இந்தக் குழு இவ் அறிக்கையை தயாரிப்பதற்கு செலவழித்துள்ளது.அந்த தாமதிற்கு காரணம் அக்குழுவிற்குள்ளேயிருந்த கருத்து மோதல்கள் .இந்த அறிக்கைக்கு சார்பாக 9 பேரும் எதிராக 9 பேரும் இருந்ததால் இறுதியில் இந்த அறிக்கையே சர்ச்சைக்குரிய விடயமாக மாறிவிட்டது.கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டப் பொறுப்பில் நான் இல்லாவிட்டாலும் அப்போது இருந்த அமைச்சர் ஹலிமோடு கலந்துரையாடி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டிணைத்து இந்த இரு தரப்பினர்களிடையேயும் சமரசத்தை செய்தேன் .இதில் 90% வற்றில் இணக்கப்பாடு இருந்தது 10% தான் சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது . எனினும் அந்த 10%த்தை நீக்கி விட்டு அறிக்கையை தயாரித்திருந்தால் அதில் பூரணத்துவம் இருந்திருக்காது .
குர்ஆன், ஹதீஸ் வசனங்களை வியாக்கியானம் செய்வதில் மிகப் பிற்போக்குத்தனமான ஒரு நடைமுறையை பின்பற்றாமல் முன்னேற்றகரமாக அதற்கான இஜ்திகாதை பயன்படுத்தி அதனை மறுசீரமைப்பதும் ,சமூகக் கட்டமைப்பிலும்,நவீன உலகில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற சவால்களுக்கும் அதேநேரம் பெண்களை சமூகத்தின் ஒரு முக்கிய வகிபாகமாக அவர்களை உருவாக்குவதற்கு அவசியமான நெகிழ்வுத் தன்மையினை சட்டம் கொண்டிருக்க வேண்டும்.இதிலே விதண்டாவாதமாக இதில் திருத்தம் மேற்கொள்ள முடியாது என வாதிட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டம் , ஈற்றிலே முஸ்லிம் தனியார் சட்டம் பெண்களுக்கு அநியாயம் விளைவிக்கிறது என்று கூறிக் கொண்டு இந்த சட்டத்தையே இல்லாமல் செய்வதற்கு முயற்சிக்கின்ற பெருந்தேசிய சில சக்திகளுடன் தங்களை அறியாமலேயே ஆதரவு கொடுக்கின்ற நிலையாக மாறிவிடுவதாக இருந்தது.எனவே தான் இவற்றையொல்லாம் கருத்தில் கொண்டுதான் இவ்விடயங்கள் முன்னேற்றகரமாக வியாக்கியானம் செய்யப்படுதல் வேண்டும் என்ற விவகாரத்தில் நான் உறுதியாக இருந்தேன்.இருந்தாலும் பலவந்தமாக செய்யாது சமரசத்தை ஏற்படுத்தி செய்ய வேண்டும் என்பதில் தீவிர முயற்சியை மேற்கொண்டோம்.எங்களுடைய ஆட்சிக்காலத்தில் சாத்தியமாகவிட்டாலும் அதற்கு பின் வந்த மிக ஆபத்தான , கடும்போக்கு வாதிகள் இந்த விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒரே நாடு,ஒரே சட்டம் என்ற கோஷத்தோடு முழுமையாக முஸ்லிம் சட்டத்தை இல்லாமல் செய்து விடுகின்ற எண்ணத்தோடும் முஸ்லிம்களுக்கொன்று ஏன் தனிச் சட்டம் இருக்க வேண்டும் என்ற தோஷங்களையும் எழுப்பி வருவதை அவதானிக்க முடிகின்றது.இது தனிப்பட்ட குடும்ப விவகாரங்களுக்கு மாத்திரம் ஒவ்வொரு சமூகத்திலும் அந்தந்த சமய,சமூக வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்ட சட்டமூலங்கள் பல முஸ்லிம் நாடுகளிலே இருக்கிறது . இந்த சட்டமூலத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு சீர்திருத்தங்கள் அவசரமாக கொண்டுவரப்பட வேண்டும் என்பது அவசியமாகின்றது.
இந்த விடயத்தில் பெண்களுக்கு சமத்துவ உரிமை மறுக்கப்படுவதை நான் அற்பத்தனமாக நினைக்கிறேன்.”அர் ரிஜ்ஜாலு கவ்வாமூன அலல் நிஸா” என்று வருகின்ற சூரத்துல் நிஸாவினுடைய ஆயத்து ஆண்களே பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள் என்ற பொருள்பட இருப்பதால் ஆண்கள் தான் இந்த விவகாரங்களிலும் நிர்வாகிகளாக இருப்பார்கள் என்ற அடிப்படையில் பொருள்கோடல் செய்வதற்கு சில மார்க்க அறிஞர்கள் முயலுகிறார்கள்.வெறும் தனிக்குடும்பத்தை மாத்திரம் சுட்டிக் காட்டி இறக்கப்பட்ட இறை வசனத்தை இப்படி காதி நீதிபதியாக முஸ்லிம் பெண்கள் வர முடியாது என்ற அபத்தமான அளவில் விளக்குவது குர்ஆன் வசனங்களுக்கான தவறான விளக்கங்களை கொடுப்பதாகவே பார்க்கப்படுகின்றது.மத்ஹபை சிந்தனா வட்டமாக பார்க்க வேண்டுமே ஒழிய அதுதான் மார்க்கம் என்று பிடிவாதமாக இருப்பது அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற முரட்டு சக்திகள் நிறைந்த சூழலில் எங்களுக்குள்ளே இந்த விடயத்தில் வியாக்கியானம் செய்வது குறித்து இன்னும் நெகிழ்வுத் தன்மையோடும், பரந்தமனதோடும் பார்க்க வேண்டியுள்ளது.இச் சட்டமூலம் கொண்டு வந்த காலத்தை (1950களில்) விட தற்போது பல படித்தரங்களில் பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.தற்பொழுது நீதித்துறையில் எத்தனையோ பெண்கள் மேல் நீதிமன்ற நீதியரசராக இருக்கிறார்கள்.எனவே மேல் நீதிமன்ற நீதிபதியாக ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு வர முடியுமாக இருந்தால் காதி நீதிமன்றம் என்பது சாதாரண விடயம் இதிலும் நிச்சயமாக பெண்களுக்கு வர முடியும்.என்னை பொறுத்தவரையில் மேல் நீதிமன்றத்திற்கோ , உச்ச நீதிமன்றத்திற்கோ முஸ்லிம் பெண்கள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை .இந்த விடயத்தில் சில மார்க்க அறிஞர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.இது விடயத்தில் நான் ஒரு சில உலமா தரப்பினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் இருக்கிறேன்.எனினும் அதை நான் பொருட்படுத்தாது திறந்த மனதோடு இந்த விடயம் பார்க்கப்பட வேண்டும் என்றும் தற்போது இருக்கின்ற பிரச்சினைகளை விட எதிர்காலத்தில் பாரிய அளவில் பிரச்சினைகள் வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த விடயத்தில் அவசரமாக சீர்திருத்தம் தேவை என்று கருதுகிறேன்.
சர்வதேச அளவில் முஸ்லிம் நாடுகள் பலவற்றிலே , மலேசியா, இந்தோனேசியா (240மில்லியன் முஸ்லிம்கள்) மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் பல வருடங்களுக்கு முன்பே இந்த சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்து விட்டார்கள்.பெண்கள் விடயத்தில் கடுமையான சட்டங்களை கடைபிடித்து வந்த சவூதி அரேபியா கூட இந்த விடயத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது .எனவே இலங்கையிலும் பெண்கள் காதியாக வருவதற்கான தடை நீக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.
இந்த நாட்டின் எல்லா நீதிமன்றங்களுக்கும் நியமனங்களை செய்கின்ற அதே நீதிச்சேவை ஆணைக்குழு தான் காதி நீதிமன்றங்களுக்கான நியமனங்களையும் மேற்கொள்கின்றது. 90களின் பிற்பகுதியில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவினுடைய காலத்திலே செய்யப்பட்ட ஒரு நிர்வாக ரீதியான சீர்திருத்தமாகும்.இதற்கு முன்பாக காதிநீதிமன்ற நீதிபதிகளை நிர்வகிக்கின்ற உரிமை பொது நிர்வாக அமைச்சிற்கு தான் இருந்தது.பொது நிர்வாக அமைச்சு இந்த நீதிபதிகளை நியமிக்கின்ற விவகாரத்தில் அவர்களிற்கு அந்தஸ்து குறைபாடு இருந்தது மாத்திரமின்றி அவர்களுடைய ஒழுக்காற்று நடவடிக்கைகள் , அவர்களுடைய நீதிமன்ற செயற்பாடு குறித்து பயிற்சி விவகாரம் இவற்றிலே பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி இருந்தது.கொடுப்பனவுகளில் பெரியளவு புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படவில்லை இருந்தாலும் அவர்களுடைய அந்தஸ்தில் மாற்றங்கள் ஏற்பட்டது.நீதிச்சேவை ஆணைக்குழு நியமிக்கின்ற காரணத்தினால் மட்டுமல்ல அவர்களுக்கான ஒழுக்காற்று செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதிலும் அவர்களுக்கு இருக்கிற காதி நீதிமன்றம் கொடுத்த சமூக அந்தஸ்து மாத்திரமல்ல சட்டரீதியான செயல்பாடுகளில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.அதனால் தான் இந்த சட்டம் திருத்தப்படாவிட்டாலும் , நீதிச் சேவை ஆணைக்குழுவின் நியமனங்களாக இது மாற்றப்பட்டது என்பது சிறந்த பரிமாண மாற்றத்தை இந்த நீதிமன்ற தொகுதிக்கு ஏற்படுத்தியது.
நான் நீதியமைச்சராக இருந்த காலத்தில் காதிநீதிபதிகளுடைய வீடுகளில் இயங்கிக் கொண்டிருந்த நிறைய நீதிமன்றங்களுக்கு பதிலாக தனியார் காதி நீதிமன்ற கட்டிடங்கள் கிட்டத்தட்ட 12 இடங்களில் அமைத்துக் கொடுத்துள்ளேன்.அதற்கு பிற்பாடு வந்த அரசாங்காத்திலும் காதி நீதிமன்றங்களுக்கென தனியான கட்டிடங்கள் வழங்கப்படுன்கிறது.ஆனால் அவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்னும் சீர்ப்படுத்தப்பட வேண்டும் அதில் சம்பளம் மாத்திரம் அல்ல அவர்களுக்கு தேவைப்படுகின்ற உதவியாளர்கள் ,பணிக்குழு போன்ற விடயங்கள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.என்னைப் பொறுத்தவரையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷம் தேர்தலுக்காக முஸ்லிம்களுக்கெதிராக வெறுப்புப் பேச்சுக்களை தூண்டி அப்பாவி நாட்டுப்புற சிங்கள மக்களை இலக்கு வைத்து நடந்த விடயமாகும். நடைமுறையில் நாட்டின் உள்ளக பல்வகைத்தன்மை செயற்பாட்டிற்கு ர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தற்போதுள்ள அரசில் இருக்கின்ற முக்கியஸ்தர்கள் இந்த விவகாரத்தை சரிவரப் புரிந்து கொள்ளாமல் அங்கும் இங்குமாக பேசிக் கொண்டிருக்கிருக்கிறார்கள்.இருந்தாலும் நீதியமைச்சர் அலிசப்ரி இது விடயத்தில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து இவ் விவகாரத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்படுவதற்கான முன்மொழிவுகளை செய்திருக்கிறார். அதனை சட்டவரைஞர் திணைக்களம் புதிய வரைபை தயாரித்து அமைச்சரவை அனுமதி கிடைத்த பிற்பாடு சட்டமூலமாக பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு எடுக்கப்பட்டால் இச் சீர்திருத்தங்களை செய்துவிடலாம்.சமூகத்திற்குள்ளேயிருந்த தேவையற்ற முரண்பாடுகள் இனி தலைதூக்க மாட்டாது என நினைக்கிறேன்.அதாவது இந்த வயதெல்லை தொடர்பான விடயத்திலும் பூரண உடன்பாடு காணப்படுகின்றது.அதிலும் விதண்டாவாதம் செய்தார்கள் எனினும் அதற்கும் எந்த அடிப்படையும் இல்லை.பெண்களுக்கான திருமண வயதெல்லை என்பது குர்ஆனில் ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.அவை பொதுவாக அந்தந்த கூட்டமைப்பிற்கு ஏற்ப கையாளப்பட வேண்டிய விடயம் எனவே இது தொடர்பான விடயத்தில் தெளிவாக குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஸுரதுன் நிஸாவில் “பலஉன் நிஸா” என்ற வசனத்தின் பொருளானது, அவர்கள் திருமண வயதை அடைந்து (பருவவயது) பொருள்களை பராமரிக்கின்ற பொறுப்பு வந்துவிட்டால் “ருஷ்து” என்பது முதிர்ச்சி அதாவது திருமணம் முடிப்பதற்கான பக்குவம் வருகின்ற வயது என்ற பொருள் தருகின்றதே ஒழிய 12,16,18என்று குர்ஆனில் எங்குமே திருமண வயதை குறிப்பிடவில்லை.எங்களுடைய சமூகத்தில் உள்ளவர்கள் அதனை தவறாக புரிந்து கொண்டு பெண்கள் பருவமடைந்த உடனே பெண்களை திருமணம் முடித்துக் கொடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.இது விடயத்தில் ரஸுல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம், ஆயிஷா நாயகியை ஒன்பது வயதில் திருமணம் முடித்ததை உதாரணமாக கொள்கிறார்கள்.எனவே இந்த விடயங்கள் முன்னேற்றகரமாக விளக்கப்படவில்லையென்றால் இஸ்லாம் இளவயது சிறுவர் திருமணத்தை (பால்ய திருமணம்) என்ற இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்கள் உருவாக வாய்ப்புள்ளது.அத்தோடு 18வயது என்பது இரண்டாம் தர கல்வியை நிறைவு செய்வதற்கான தகைமை மற்றும் பெண்களின் சுகாதார ரீதியான பாதிப்புகளிலும் , குழந்தைப்பேறு விடயங்களில் 18வயதை தாண்டும் போது தான் ஆரோக்கியமானதாக இருக்கும் எனவே இவற்றையெல்லாம் உள்வாங்கித் தான் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொகுப்பு:அப்ரா அன்ஸார்.