நாட்டில் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதால் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து அல்லலுறும் மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பயணக் கட்டுப்பாட்டினால் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு 5000 ரூபாய் அரச நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்த போதும் இந்த நிவாரணம் உரியவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
சமூர்த்தி பெறுநர்களுக்கு மாத்திரமே பெரும்பாலும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள போதும் இந்தத் தொகை சமுர்த்தி பெறுநர்களுக்கு முறையாக கிடைக்கவில்லை என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.