கொரோனா 3 வது அலை காரணமாக முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள கொடுப்பனவின் போது உண்மையில் 5 ஆயிரம் ரூபா மக்களின் கைகளுக்கு கிடைக்குமா? என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமனற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கொரோனா 3 வது அலையினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குதல் என்ற தலைப்பில் பிரதமர் அலுவலகத்தினால் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடுப்பனவு பெறத்தகுதியுள்ள மக்கள் ஏற்கனவே சமுர்த்தி போன்ற ஏதாவது கொடுப்பனவு பெற்று வருவார்களாயின் அந்தக் கொடுப்பனவுக்கும் 5ஆயிரம் ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகையே மக்களின் கைகளுக்கு வந்து சேரும் வகையிலேயே இந்தச் சுற்றறிக்கையின் ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா பாதிப்புக்காக எனச் சொல்லப்படும் 5 ஆயிரம் ரூபா அரசினால் வழங்கப்படப் போவதில்லை என்பது தெளிவாகின்றது. 5 ஆயிரம் ரூபா வழங்குவதாக பிரச்சாரம் செய்து அவர்கள் ஏற்கனவே பெறும் உதவித் தொகைகளை அதிலிருந்து வரும் மிகுதித் தொகையே அரசு வழங்கவுள்ளது.
இந்த அரசு மக்களை எப்படி ஏமாற்றுகின்றது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.