அரசாங்கத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பானது மக்களிடம் பட்டப்பகலில் கொள்ளையடித்தது போன்றதாகும்.நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து மக்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மக்கள் மீது இன்னுமொரு சுமையை ஏற்றியமை மனிதாபிமானமற்றதாகும். வெட்கக்கேடான விடயமாகும். இதற்கு எதிராக எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதுடன் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லைப் பிரேரணையானது இதில் ஒரு அங்கமாகும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் தன்னிச்சையான எரிபொருள் விலை அதிகரிப்பை நாங்கள் எதிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
உலகின் பயங்கர பெருந்தொற்றுக்கு நமது நாடும் முகங்கொடுத்துள்ள இச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியது எரிபொருள் விலையை அதிகரிப்பது அல்ல மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாகும்.
2020 ஆம் ஆண்டு உலகலாவிய ரீதியில் எரிபொருள் விலை மிகவும் குறைந்திருந்த போது அதன் நன்மையை மக்களுக்கு வழங்காத அரசாங்கம் இச் சந்தர்ப்பத்திலாவது அதனை நடைமுறைப்படுத்தி இருத்தல் வேண்டும்.
• தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது எரிபொருள் விலையானது 2015 ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும் போது இருந்த விலைக்கும் குறைவான விலையில் இருந்தது. ஆனாலும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநாள் தொடக்கம் எரிபொருள் விலை நம்ப முடியாத அளவு அதிகரித்தது.
• கடந்த ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்திய விலைச் சூத்திரம் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பின் உலகில் பாரியளவில் விலை குறைந்து காணப்பட்ட 2020 ஆம் ஆண்டு கூட குறித்த நன்மையை மக்களுக்கு பாரிய அளவில் வழங்கக்கூடிய சாத்தியம் இருந்தது.
ஆனாலும் குறித்த விலைச்சூத்திரத்தை இல்லாதொழிப்பதாகக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எரிபொருள் விலையிலும் மக்கள் கழுத்தை நசுக்கி விட்டது.
• இந்த எரிபொருள் விலை அதிகரிப்புடன் துரிதமாகவே நாட்டின் எல்லாத் துறைகளினதும் விலை அதிகரிப்புகள் தவிர்க்க முடியாததாகும். இதனால் பாதிப்படைவது நாட்டின் அப்பாவி மக்களாகும்.
• விலையை நிலையாகப் பேணுவதற்கான நிதியமொன்றை தாபிப்பதாகக் கூறி 2020 ஆம் ஆண்டு உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்த நன்மையை மக்களுக்க வழங்காத அரசாங்கம் உரிய நிதியத்துக்கு நடந்தது என்ன என்பது பற்றி திட்டவட்டமான விளக்கமொன்றை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவில்லை.
2008 ஆம் ஆண்டு எரிபொருள் விலையைக் குறைக்குமாறு உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பொன்று வழங்கப்பட்டிருந்தும் அத் தீர்ப்பைக் கூட அன்று நடைமுறைப்படுத்தாத அரசாங்கம் இந்த பாரிய அனர்த்தத்தில் சிக்கியுள்ள மக்களின் கழுத்தை நசுக்குவதன் மூலம் தெரியவருவதாவது அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற சுயரூபமே அன்றி வேறொன்றுமில்லை
இரண்டு வருடங்களாக கல்வித்துறை சீரழிந்துள்ள நாட்டில், இணையவழி கல்வி வசதிகூட இல்லாது காணப்படுகின்ற அநாதரவான மாணவர் சமூகம் உள்ள நாட்டில், உரம் இல்லையென கமக்காரர்கள் பெருமூச்சு விடும் நாட்டில், கடற்றொழிலாளர்கள் தங்களது மீன்களை விற்பனை செய்ய முடியாதுள்ள நாட்டில், அரசாங்க ஊழியர்கள் மட்டுமன்றி தனியார்துறை ஊழியர்களும் அநாதரவாக உள்ள நாட்டில், தொழில் வாய்ப்பில்லாத இளைஞர் சமூகம் நம்பிக்கை இழந்து காணப்படும் நாட்டில் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் செயற்படுவது இவ்வாறாயின் அதற்கு எதிராக போராடுவதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் பின்நிற்க மாட்டோம் என உத்தரவாதமளிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.