பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதே கைதிகள் விடுதலைக்கு ஒரே வழி!-பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்!

Date:

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து இந்த விடயத்தை உங்கள் அரசியல் இலாபங்களுக்கு பாவிக்காதீர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாமல் ராஜபக்ஷ அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தெரிவித்த கருத்துகளை நாம் வரவேற்கும் அதேசமயம், செயற்பாட்டில் ஏதும் இல்லாதவாறு வெறுமனே தத்தமது கருத்துகளை அரச தரப்பினர் எழுந்தமானமாக கூறுவதனை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கின்ற இந்தக் காலப்பகுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற இந்த காலப் பகுதியில் இப்படியாக ஏமாற்றுத்தனமான கூற்றுகளை தவிர்க்க வேண்டும்.

அரசியல் கைதிகள் விடயத்தில் தத்தமது விருப்பிற்கு இணங்க வெறுமனே கருத்துச்சொல்லிவிட்டு அமருகின்ற ஒரு விடயம் அல்ல இது. இங்கு உண்மையில் அடிப்படை பிரச்சினையாக இருப்பது பயங்கரவாதத் தடைச்சட்டமே. பயங்கரவாத தடைச் சட்டமே எவ்வித நீதியான விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கின்றமை உட்பட பல அநீதியான முடிவுகளுக்கு இடம்கொடுத்திருக்கிறது.

அதன் அடிப்படையிலேயே அரசியல் கைதிகள் நீதியற்றவிதமாக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனை முழுமையாக நீக்காமல் அல்லது அதையொத்த இன்னொரு சட்டத்தை கொண்டுவராமல் இருப்பதை உறுதிசெய்யாமல் இருந்தால் இப்படியான நெறிதவறிய முடிவுகளும் அநீதிகளும் கட்டமைக்கப்பட்ட வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் .

எனவே, வெறுமனே பேச்சளவில் மட்டும் அரசியல் கைதிகளின் விடுதலை என கூறிக்கொண்டு காலத்தை கடத்துவதில் பயனில்லை. இதே ராஜபக்ஷ அரசின் முந்திய ஆட்சிக் காலத்திலும் ஜி.எஸ்.பி வரிச்சலுகைக்கால ICCPR ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் நடைமுறையில் அதற்கு எதிர்மாறாக, தமக்கு மாறான கருத்துடையவர்களை ஒடுக்கவே அதை பாவித்திருந்தது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இந்த பாராளுமன்றிலும் இதற்கு முந்திய பாராளுமன்றிலும் தமிழ்த்தரப்பினர் குரல் கொடுத்த போது அதை இங்கு இருப்பவர்கள் பலமாக எதிர்த்திருந்தனர், அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுப்பவர்களை புலிகள் என அழைத்தனர். தமிழர் தரப்பு அரசியல் கைதிகள் தொடர்பில் கூறியவற்றையே இன்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூற முற்படுகிறார்.

உண்மையில் அரசியல்கைதிகள் தொடர்பில் இருக்கும் அடிப்படைப்பிரச்சினையான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுதலும், அதனையொத்த இன்னொரு அநீதியான சட்டமூலத்தை கொண்டுவராமல் தடுப்பதும் தான் அவர்களின் விடுதலைக்கான ஒரே வழி என்பதை அரசாங்கத்துக்கு இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...