பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மட் சாத் கத்தாக் அவர்கள் நேற்று (2021.07.01) பொத்துவிலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயத்தையொட்டி அம்பாறை பிராந்திய புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சந்தித்துக் கொள்ளும் உயர்ஸ்தானிகருடனான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்வை ஆரம்பித்து வைத்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் இலங்கை-பாகிஸ்தான் நல்லுறவு, பிராந்திய அரசியலில் பாகிஸ்தானின் செல்வாக்கு மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்றான் கான் அவர்களின் உத்வேகம், தலைமைத்துவம் குறித்தும் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வுக்கு வருகை தந்திருந்த கல்வியலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல் ஆர்வளர்கள் தமது உரைகளில் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் கல்வி, சமூக, சமய, அரசியல், இருப்பு, பொருளாதார, கலாச்சார, வாழ்வியல் நெருக்கடிகள் குறித்து விரிவாக உரையாற்றினார்கள்.
நிகழ்வில் உரையாற்றிய தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பிரதானி Dr. எம்.எம். பாஸில் அவர்கள் கல்வித்துறையில் அறிஞர் அல்லாமா இக்பால் அவர்களின் வழிகாட்டல் குறித்தும் இஸ்லாமிய கற்கைகள் தொடர்பாக இலங்கை முஸ்லிம்கள் கல்விப் புலத்தில் எதிர்நோக்க இருக்கும் எதிர்கால சவால்கள், அதனை ஈடுசெய்யும் வகையிலான இஸ்லாமிய நாடுகளின் வகிபாகம் குறித்தும் எடுத்துரைத்தார்.
சமகால இலங்கையின் அரசியல் போக்கு, கல்வி, பொருளாதார, சமூக, கலாச்சார நிலைகள் குறித்து கிழக்கு தேசம் ஸ்தாபகர் வஃபா பாறுக் அவர்கள் தனது உரையில் சுருக்கமாகச் சுட்டிக் காட்டினார்.
நிகழ்வில் HEO தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கே. நிஹால் அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள் அடங்கிய ஆவணத் தொகுப்பை உயர்ஸ்தானிகரிடம் கையளித்து உரையாற்றினார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் அவர்கள் தனது உரையில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, பெரும்பான்மை சமூமொன்றினுள் சிறுபான்மையின் சுயநிர்ணயம், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மை, இஸ்லாமிய கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களின் இருப்பு, இலங்கையில் இஸ்லாமிய தொல்லியல்துறை கற்கையின் விரிவாக்கம் தொடர்பாக பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வகிபாக அவசியம் குறித்தும் விளக்கினார்.
நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அவர்கள் பெரும்பான்மை சமூகமொன்றினுள் சுயநிர்ணய உரிமையுடன் தமது வாழ்வியல் இருப்பை உறுதிசெய்வதற்கு சிறுபான்மை சமூகமொன்று எவ்வாறான அடிப்படைகளுக்கு தம்மை குடும்ப அலகிலிருந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஆன்மீக சுகந்தம் கலந்து எடுத்துரைத்தார்.
இலங்கை முஸ்லிம்கள் என்னென்ன சவால்களுக்கு முகங்கொடுக்கிறார்கள், எதிர்வர இருக்கின்ற சவால்கள் என்ன, அவற்றை முகங்கொண்டு வெற்றிகொள்ள எவ்வகையான அடிப்படைகளை கட்டமைக்க வேண்டும் ஆகிய விடயங்களை துறைசார் நிபுணர்களின் பார்வையில் விரிவாக அலசப்பட்ட ஒரு திருப்திகரமான நிகழ்வாக நேற்றைய நிகழ்வு அமைந்திருந்தது.