பாராளுமன்ற பணிப்பாளர் வெளியிட்ட ஊடக அறிக்கை

Date:

பாராளுமன்றத்தில் செயற்படும் அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அரசாங்க கணக்குகள் பற்றிய குழு போன்ற விசேட குழுக்களுக்கு நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் பாராளுமன்ற இணைப்புக் குழுவில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்களின் தலைவர்கள் பலரும் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது அவசியம் என வலியுறுத்தியிருந்தனர்.

அரசாங்க நிதி பற்றிய குழு போன்ற குழுக்கள் வரவு செலவுத் திட்ட காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் கூட வேண்டியிருப்பதாகவும், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நிதி சட்டமூலங்கள் கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றை அனுமதிக்க வேண்டியிருப்பதால் நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை அதிகமாக இருப்பதாக அநுர பிரியதர்ஷன யாப்பா சுட்டிக்காட்டினார்.

இதனை ஏற்றுக் கொண்ட சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, விசேட குழுக்களுக்கு நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வது அவசியமானது எனக் குறிப்பிட்டார். அத்துடன் நிலையியற் கட்டளைகளைத் திருத்தி, அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டங்களை அமைச்சுக்களில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும், இதன் ஊடாக கூடுதலான அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைவிடவும், பொது மனுக்கள் பற்றிய குழு போன்ற பொது மக்களுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தும் குழுக்களை பாராளுமன்றத்துக்கு வெளியே உள்ள இடமொன்றில் கூட்டுவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டார். இதற்காக பாராளுமன்றத்துக்கு வெளியே அரசாங்கத்தின் கட்டடமொன்றை ஒதுக்குவது தொடர்பில் ஆராயுமாறு இங்கு கலந்துகொண்ட உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியதாகச் சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம், இதன் ஊடாக குழுக்களில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என்றும் கூறினார்.

பாராளுமன்ற விவாதங்கள் நடத்தப்படும் சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைப்பதற்குத் தேவையான விடயங்களில் அவர்களுக்கு மேலதிக விளக்கங்களை வழங்க ஆய்வாளர்களின் தேவை குறித்து அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் சுட்டிக்காட்டினர்.

சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்ற இணைப்புக் குழு இரு மாதங்களுக்கு ஒருமுறை கூடும். பாராளுமன்ற குழுக்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றில் காணப்படும் தேவைப்பாடுகள் குறித்து இங்கு ஆராயப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார். பல குழுக்களில் அரசாங்க அதிகாரிகள் ஒன்லைன் முறையின் கீழ் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும், இணையத்தளத்தைப் புதுப்பித்து, குழுக்களின் தகவல்களை பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியவை ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதாகவும், ஏனைய குழுக்கள் பற்றிய தகவல்கள் அக்குழுக்களின் தலைவர்களின் அனுமதியுடன் தொடர்பாடல் திணைக்களத்தின் ஊடாக ஊடகங்களுக்கு வெளியிடப்படுவதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...