இறைத்தூதர் நபிகள் (ஸல்) தொடர்பாக கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) வரைந்து முழு உலகத்திற்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய டென்மார்க் ஓவியர் கேர்ட் வெஸ்டர்கார்ட் தனது 86 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை (18) காலமானார்.
நீண்ட காலமாக சுகவீனமடைந்திருந்த அவர், தனது படுக்கையில் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கேர்ட் வெஸ்டர்கார்ட் (Kurt Westergaard) வரைந்த 12 ஓவியங்கள், 2005 ஆம் ஆண்டு ஜெய்லண்ட்ஸ் போஸ்டன் (Jyllands-Posten) எனும் டென்மார்க் பத்திரிகையில் வெளியாகின.
அக்கார்ட்டூன்கள் ஆரம்பத்தில் அதிகம் கவனிக்கப்படவில்லை எனினும், 2 வாரங்களின் பின் டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனில் மேற்படி கார்ட்டூன்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அதையடுத்து, இக்கார்ட்டூன்கள் தொட்ரபாக டென்மார்க் அரசிடம் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
2006 பெப்ரவரியில் உலகின் பல நாடுகளிலும் டென்மார்க்குக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
2010ஆம் ஆண்டில் வெஸ்டர்கார்ட்டை கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் 28 வயது சோமாலிய இளைஞனை கத்தியொன்றுடன், வெஸ்டர்கார்ட்டின் வீட்டுக்கு அருகில் பொலிஸார் கைது செய்தனர்.
கேர்ட் வெஸ்டர்கார்ட், தனது கடைசி காலத்தில் இரகசிய இடமொன்றில் பொலிஸ் பாதுகாப்புடன் வசித்தமை குறிப்பிடத்தக்கது.