இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து டெல்டா கொவிட் திரிபுகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது பொருத்தமானதல்லவென பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், டெல்டா வகையானது எதிர்காலத்தில் நாட்டில் பரவக்கூடிய பிரதான கொவிட் வகையாக மாறும் என அதன் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டுகிறார். தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்திய பல நாடுகளும் டெல்டா கொவிட் திரிபு பரவுவதால் பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக உபுல் ரோஹன கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
“எவ்வாறாயினும் அடுத்த சில நாட்களில், கொவிட் -19 டெல்டா வகை இலங்கையின் முன்னணி தொற்றுநோய்களில் ஒன்றாக மாறும். டெல்டா வகை முதன்மையான இனமாக மாறினால், இலங்கை முன்னெப்போதையும் விட ஆபத்தான ஒரு தொற்று நோயை எதிர்கொள்ளும். இந்தச் சூழ்நிலையை அரசாங்கமும் மக்களும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் நாட்டில் ஒரு பேரழிவு சூழ்நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.” என்றார்.