இலங்கை அரசியலமைப்புச் சட்டமும் பசில் ராஜபக்ஷவும்!

Date:

விக்டர் ஐவன்

தமிழில் : முஹம்மத் பகீஹுத்தீன்

 

சட்டத்தை மதிக்காத தீய பண்பாடு இலங்கை மக்களின் (சமூகம் மற்றும் ஆட்சியாளர்களின்) வாழையடி வாழையாக வந்த பிரபலமான பழக்க வழக்கமாகவே உள்ளது. இலங்கையில் நிகழும் முக்கியமான பல விடயங்கள் சட்டத்திற்கு புறம்பாகவும் அரசியலமைப்பு வரம்புகளை மீறியதாகவுமே நடைபெறுகின்றன. உண்மையில் இலங்கையானது சட்டத்தின் ஆட்சியை இழந்த, அரசியல் ஒழுக்கப் பண்பாடுகள் குன்றிய ஒரு நாடாகவே கருதப்படுகிறது. இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரிய நெருக்கடிகளுக்கும் தோல்விகளுக்கும் மிகப்பெரிய காரணியாக அமைவது சட்டத்தை மதிக்காத நிலையும் அரசியலமைப்பு கட்டமைப்பை புறக்கணிப்பதுமாகும்.

 

இலங்கையில் சட்டத்தை மதிக்காத பிரச்சினை அவ்வப்போது எழுந்து மறையக்கூடிய பிரச்சினை அல்ல. மாறாக அது இங்கு நிலையாக நீடித்துவரக்கூடிய ஒரு பிரச்சினையாகும். பசில் ராஜபக்ஷ பாராளுமான்றம் வருவதில் உள்ள சட்டப் பிரச்சினையானது அரசியலமைப்பில் உருவாகப்போகும் புதியதொரு பிரச்சினையாகும். அரசியல் செயற்பாட்டாளரான நாகானந்த கொடித்துவக்கு அவர்கள் இது குறித்து ஏலவே தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் நிமல் புஞ்சி ஹேவாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது இலங்கையில் தீவிரமான ஒரு சட்டப் பிரச்சினையாக தலைதூக்குவதற்கு வாய்ப்புள்ளது.

 

பசில் தொடர்பான சட்டப் பிரச்சினை

 

போஹோட்டுவ கட்சியின் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ரஞ்சித் பண்டாரவுக்கு பதிலாக பசில் ராஜபக்ஷவை நியமிப்பதாக வெளிவந்த செய்தி குறித்து ‘தி ஐலண்ட்’ பத்திரிகை ஆசிரியர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பசில் ராஜபக்ஷவுக்கு தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றம் செல்வதற்கான நியமனத்தை வழங்குவதில் எத்தகைய தடையும் இல்லை என தேர்தல் ஆணையத்தின் தலைவர் அதற்கு பதில் தந்துள்ளார்.

 

இந்தப் பதிலை கேள்விப்பட்ட நாகானந்த கொடித்துவாக்கு அரசியலமைப்பின் 99 (அ) பிரிவை மேற்கோள் காட்டி தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு பின்வருமாறு தெரிவித்துள்ளார். மேற்படி இலக்க அரசியலமைப்பு சட்டக் கோவையின்படி 2020 ஆம் ஆண்டின் பாராளுமான்ற தேர்தலுக்கான தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்ட அல்லது போட்டியிட்ட ஒருவரை மட்டுமே தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு நியமிக்க முடியும். பசில் ராஜபக்ஷ இந்த இரண்டு வகையிலும் உள்ளடங்காததால் அவரை தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு நியமிப்பது சட்டத்திற்கு விரேதமானது என அறிவித்துள்ளார்.

 

இதற்கு முன்பு இதே பிரச்சினை ஒன்றிக்கு உச்ச நீதிமன்றத்தினால் தெளிவான விளக்கமும் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. (தயானந்த திசனாயக மற்றும் சமரவீர வீரவன்னிக்கு எதிராக பாக்கியஜோதி சரவணமுத்து மற்றும் ரோஹான் எதிரிசிங்ஹ SC 26.27.2002 வழக்கு) இந்த வழக்கின் முடிவில் வந்த தீர்ப்பின் பிரகாரம் தேசிய பட்டியலில் பெயர் உள்வாங்கப்படாத அல்லது தேர்தலில் போட்டியிடாத ஒருவரை தேசிய பட்டியலில் இருந்து தெரிவு செய்ய முடியாது. மார்க் பர்னண்டோ, டி.பி. குணசேகர மற்றும் சி.வி. விக்னேஸ்வரன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவே இந்த வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

 

இது மாகாண சபைகளின் கட்டளைச் சட்டத்தின் 65 வது பிரிவு குறித்து தெளிவான வரைவிலக்கணம் தருமாறு கோரி தொடுக்கப்பட்ட வழக்காகும். அந்த வழக்கில் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் பாரளுமன்றத்திற்கும் பொருத்தமானது. இச்சட்டத்தின் 65 வது பிரிவின்படி ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்கு கட்சியின் செயலாளருக்கு வரையரையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் இத்தகைய சந்தர்ப்பங்களில் கட்சியின் செயலாளர் தனக்கு விருப்பமான நபர்களை பதவிக்கு நியமிப்பதாகவும் அது ஜனநாயகத்தின் நற்பெயருக்கு இழுக்கை ஏற்படுத்துவதால் இந்த சட்டப்பிரிவு குறித்து தெளிவான வரைவிலக்கணம் தருமாறு கேட்டு மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர். மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றமானது தேசிய பட்டியலில் ஒரு வெற்றிடம் வரும்போது கட்சியின் செயலாளர் பட்டியலில் ஏற்கனவே பெயர் உள்வாங்கப்பட்ட அல்லது போட்டியிட்ட ஒருவரை மட்டுமே அந்த வெற்றிடத்திற்கு நியமிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

 

அரசாங்கத்திற்கு பசில் ராஜபக்ஷவை தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவேண்டிய தேவை இருந்தால் அதற்கான வழி அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொள்வதாகும். அவ்வாறு செய்யாவிட்டால் அது சட்டத்தை மதிக்காமல் செயல்படும் நிலைப்பாட்டுக்கே வழிவகுக்கும். அத்தகைய ஒரு சூழ்நிலை ஏற்படுமாயின் அது தேர்தல் ஆணையத்திற்கும் நீதித்துறைக்கும் மற்றுமொரு விஷப்பரீட்சைக்குரிய ஆபத்தான சோதனைக் களமாகவே அமையும்.

 

அரசாங்கமும் சட்டத்திற்கு வகைகூறும் பொறுப்பும்

 

ஒரு நாகரிகமடைந்த அரசாங்கம் உள்நாட்டு அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் இருந்து இயங்க வேண்டும். அதே நேரத்தில் சர்வதேச உடன்படிக்கைகளைப் பேணிக் கொள்வதும் அதன் பொறுப்பாகும். ஒரு நாடு என்ற ரீதியில் உள்நாட்டு அரசியலமைப்புக்கு ஏற்ப செயற்படுவது முதன்மைக் கடமையாகும். அவ்வாறே உடன்பட்ட சர்வதேச உடன்படிக்கைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் அவசியமாகும். ஒரு நாடு அதன் அரசியலமைப்புக்கு ஏற்ப செயற்படுகின்றதுவா என்பதும் அவ்வாறே சர்வதேச அளவில் செய்து கொண்ட உடன்படிக்கைகளையும் முறையாக பேணுகின்றதா என்பதும் சர்வதேச அளவில் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றது. சட்டத்தையும் உடன்படிக்கைகளையும் பேணி நல்லமுறையில் பயணிக்கும் நாடுகளுக்கு சிறப்பு சலுகைகளும் எதிர்பார்க்கப்படும் அமுலாக்கம் குன்றிய நாடுகளுக்கு தண்டனையும் வழங்கப்படுகிறது.

 

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் GSP+ சலுகையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்யக் கோரி நடப்பு வருடத்தின் ஜூன் 10ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணை அதிகப்படியான பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 628 வாக்குகளும் எதிராக 15 வாக்குகள் மட்டுமே பதிவாகின. வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை 40 ஆகும்.

 

இலங்கையில் தற்போதைய சூழலில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) தவறாக பயன்படுத்துதல், ஜனநாயக சூழலின் சீரழிவு, சட்ட விரோதமாக தடுத்து வைத்தல் போன்ற நீதிக்கு வேட்டு வைக்கும் பல நிகழ்வுகள் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் கடுமையான எதிப்பை தூண்டியுள்ளது. நாட்டின் புகழ்பூத்த முன்னணி குற்றவியல் புலனாய்வாளரான ஷானி அபேசேகர, முஸ்லிம் வாலிபக் கவிஞன் அஹ்னப் ஜஸீம் மற்றும் பிரபலமான மனித உரிமை வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோர் நீதிக்கு புறம்பாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது ஈண்டு குறிப்பிடத்ததக்கது. உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பு நியாயமானது மற்றும் நீதியானது. இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகள் இலங்கை மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையாகவே கருத முடியும்.

 

GSP+ மூலம் இலங்கை அடைந்துள்ள நன்மைகளின் அளவு மகத்தானவை. இந்த ஒழுங்கு முறையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் 66 சதவீதம் தீர்வை விலக்கு கிடைக்கிறது. இது இலங்கைக்கு கிடைத்துள்ள பெரியதொரு நிவாரணமாகும். இந்த அருமையான சலுகையை இழந்து விடக் கூடாது. ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் GSP+ சலுகையை பாதுகாப்பதற்கான ஒரே வழி சிறுபான்மையினர் உட்பட அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் நாட்டை நகர்த்துவதாகும்.

 

சர்வதேச உறவுகளும் பொறுப்புக்களும்.

 

அனைத்து நாகரிகமடைந்த நாடுகளும் மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளன. மனித உரிமைகள் என்பது மனிதர்களின் உயிர்வாழ்வையும் கௌரவத்தையும் பாதுகாபபதற்கு அவசியமான அடிப்படை உரிமைகளாகும். 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட சர்வதேச உறவுகளுக்கான நிர்வாகத்தின் முக்கிய அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளது. உலக நாடுகளில் பார்வையாளர்கள் அந்தஸ்தைப் பெற்றுள்ள வத்திக்கான் மற்றும் பாலஸ்தீனம் மட்டுமே இதில் உறுப்புரிமை பெறவில்லை. ஐ.நாவின் உறுப்பு நாடுகளில்; 172 நாடுகள் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான உடன்படிக்கைகளுக்கும் அதன் நெறிமுறைகளை பேணுவதற்கான ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளன. 1980 ல் இலங்கை அந்த ஒப்பந்தத்தில் கைசாத்திட்டதுடன் அது தொடர்பான நெறிமுறைகளுக்கு அக்டோபர் 3, 1997 இல் கைச்சாத்திட்டது.

 

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஐ.நாவின் மனித உரிமைகள் அலுவலகத்திற்கு இலங்கையில் நிலவும் மனித உரிமைகளின் நிலைமை குறித்து விசாரிக்கும் அதிகாரம் உள்ளது. மேலும் மனித உரிமை மீறல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றும் நீதி கிடைக்காவிட்டால் அந்த தீர்ப்பை எதிர்த்து ஜெனீவாவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு இலங்கை குடிமக்களுக்கு உரிமை உண்டு. அந்த உரிமையை திறம்பட பயன்படுத்திய இலங்கையின் முதல் குடிமகன் நான் ஆவேன்.

 

நான் ஆரம்பித்து வைத்த இந்த பாரம்பரியத்தை இலங்கையின் முன்னாள் பிரதம நீதிபதி சரத் நந்த சில்வா அவர்கள் தனக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்ததால் அரசாங்கத்திற்கு எதிரான ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்ப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை என்று நல்லரத்ன சிங்ஹராசாவின் வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத தீர்ப்பொன்றை வழங்கினார். நீதிக்கு புறம்பான இந்த தீர்ப்பு காரணமாக சர்வதேச அளவில் இலங்கை தேசமானது அரசியல் செயற்பாட்டில் ஒழுக்கப்பண்பாடற்ற ஒரு நாடு என்று கருதப்படும் நிலை உருவானது.

 

இந்த தீர்ப்பின் சட்ட விரோத தன்மை குறித்து சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அதனால் நாட்டின் நற்பெயருக்கு பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது. அவமானத்தின் அடையாளமாக காணப்படும் அந்த தீர்ப்பை ரத்து செய்து தொடரும் களங்கத்தை அகற்றுவதற்கு அடுத்தடுத்து வந்த எந்த அரசாங்கமும் செயற்படவில்லை.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...