தற்போதைய இலங்கைச் சூழலில் உழ்ஹியா!

Date:

தொகுப்பு: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி), சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளீமிய்யா.

இலங்கையிலுள்ள பெரும்பான்மை பௌத்தர்கள் ஜீவகாருண்யம் பற்றி அண்மைக் காலங்களில் அதிகமதிகம் பேசிவருவதுடன் அவர்களுக்கு மத்தியில் ‘பசுவதை’பற்றிய கருத்துகளும் பரப்பப்படுகின்றன.

எனவே கடந்த வருடங்களைப் போலவே இம்முறையும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதில் கூடிய கவனத்துடன் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அந்தவகையில் இந்த இபாதத்தை நிறைவேற்ற தயாராகுவோர் கவனிக்க வேண்டிய சில அம்சங்களை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

முஸ்லிம் அல்லாதவர்களது ஆவேஷம் தூண்டப்படுவதற்கு முஸ்லிம் சமூகத்தின் சிலரது பிழையான நடவடிக்கைகளும் காரணமாக அமைந்து விட்டமையை மறுப்பதற்கில்லை தான்.

*ஊன்றிக் கவனிக்க வேண்டியவை*

🔲 உழ்ஹிய்யாவைப் பொறுத்தவரை அதற்காக நாம் மிருகங்களை ஓர் இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லும்போது அதற்கான அனுமதியை உரிய அரச அதிகாரிகளிடமிருந்து முறையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது விடயமாக அநீதிக்குள்ளாக்கப்பட்டால் உரியவர்களினூடாக அவற்றைத் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கலாம். அப்படியும்கூட அனுமதி மறுக்கப்படும்போது அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடுவதே தவிர, வேறு வழிகளில் தீர்க்க முயற்சிக்கலாகாது.

🔲 அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மிருகங்களை வாகனங்களில் எடுத்துச் செல்ல ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது. இதன்மூலம் நாம் நாட்டின் சட்டத்தை மீறுபவர்களாவோம் என்பதற்கும் அப்பால் ஜீவகாருண்யம் பற்றிய இஸ்லாமிய ஒழுங்கு விதிகளை மீறியவர்களாகக் கருதப்பட்டு அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

🔲 மிருகங்களை வாகனத்தில் கொண்டு செல்லும்போது மட்டுமன்றி, பாதையில் ஓட்டிச் செல்லும்போதும் -குறிப்பாக பிற சமயத்தவர்கள் வாழும் பிரதேசங்களுக்குள்ளால் ஓட்டிச் செல்லும்போது அதிகமாக எச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியமாகும். அவர்கள் அவதானித்தாலும் இல்லாவிட்டாலும் அல்லாஹ் எம்மை அவதானிப்பதால், அவனது படைப்பினங்களை துன்புறுத்தியவர்களாக நாம் மாறிவிடலாகாது.

🔲 குர்பானுக்கு முன்னர் மிருகங்களை ஆறுதலாக இருக்க விட வேண்டும். தொழுவங்களில், கட்டி வைக்கும் இடத்தில் அவற்றை நெருக்கமாக வைத்திருக்கலாகாது. அவற்றிற்குத் தேவையான நீர், ஆகாரம் என்பன உரிய முறையில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். கத்தியை நன்றாகக் கூர்மையாக்குவது, அல்லாஹ்வின் பெயரைக் கூறுவது, ஏனைய மிருகங்கள் பார்த்திருக்கும் போது அறுக்காதிருப்பது, மிருகத்தை கிப்லா திசைக்கு திருப்பிக் கொண்டு ஒரு புறம் சாய்த்து அறுப்பது என்பனவும் கவனிக்கப்பட வேண்டும்.

أن النبي صلى الله عليه وسلم رأى رجلا أضجع شاة ، وهو يحد شفرته ، فقال : *لقد أردت أن تميتها موتات ، هلا حددتها قبل أن تضجعها*
أخرجه الحاكم في ” المستدرك في الضحايا ”

ஒருவர் ஆடொன்றை அறுப்பதற்காக பூமியில் கிடத்தி விட்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், *”அதனை நீ இரண்டு தடவை கொல்ல விரும்புகிறாயா?அதனைக் கிடத்துவதற்கு முன்னர் அதனை(கத்தியை) நீர் கூர்மையாக்கியிருக்கவில்லையா’’* என்று வினவினார்கள். (ஆதாரம்: ஹாகிம், தபரானி)

– أنَّ رجلًا قالَ يا رسولَ اللَّهِ : إنِّي لأذبحُ الشَّاةَ وأنا أرحَمُها أو قالَ : إنِّي لأرحَمُ الشَّاةَ أن أذبحَها فقالَ : *والشَّاةُ إن رحِمتَها رحِمَكَ اللَّهُ*
المصدر : الصحيح المسند

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ’நான் ஓர் ஆட்டை அறுக்கும்போது அதன் மீது இரக்கம் காட்டுகிறேன்’ என்றார், அப்போது நபியவர்கள் *”ஆட்டுக்கு நீ இரக்கம் காட்டினால் அல்லாஹ் உன் மீது இரக்கம் காட்டுவான்’’* என்றார்கள். (ஆதாரம்: அஹ்மத்)

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் *”அல்லாஹ் ஒவ்வொரு காரியத்தையும் திறம்படச் செய்வதைக் கடமையாக்கியிருக்கிறான். நீங்கள் (மிருகங்களை) கொல்லும் போது அதனை முறையாகச் செய்யுங்கள். நீங்கள் அறுத்தால் முறையாக அறுங்கள். உங்களில் ஒருவர் தனது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளட்டும். தனது அறுப்புக்கான மிருகத்துக்கு ஓய்வு கொடுக்கட்டும்”* என்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இறைச்சியை சாப்பிட மார்க்கம் பொதுவாக அனுமதிக்காத (நாய், பூனை போன்ற) மிருகங்கள் மீது கூட அன்பு காட்டும்படியும், அன்பு காட்டாத போது கடும் தண்டனைக்கு உள்ளாக வேண்டி வரும் என்றும் ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன. இது இஸ்லாத்தின் ஜீவகாருண்யத்திற்கு சிறந்த சான்றாகும்.

🔲 அகீகா, நேர்ச்சை, உழ்ஹிய்யா போன்ற நோக்கங்களுக்காக இருந்தாலும்,-ஏன் சாதாரணமாக இறைச்சிக்காகவேனும் நாம் மிருகங்களை அறுக்க நேரிட்டால்-அறுக்கும் நேரம், அறுக்கும் இடம் என் பவற்றையும் முன்கூட்டியே நன்றாக சிந்தித்துத் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், பக்கத்து வீட்டில் இருப்பவர் வேற்று மதத்தவராக இருக்கலாம். மிருகங்கள் அறுக்கப்படும் காட்சியையோ அல்லது அறுக்கப்பட்ட பின்னர் அவை தோலுரிக்கப்படும் அல்லது இறைச்சியாக்கப்படும் காட்சியையோ, பாதைகளில் பகிரங்கமாக இரத்தம் சொட்டச் சொட்ட வாகனங்களில் ஏற்றப்படும் அல்லது கொண்டு செல்லப்படும் காட்சியையோ அவர்கள் காண விரும்பமாட்டார்கள். எனவே, முடிந்தவரை மறைவாகவும் கண்ணியமாகவும் இவற்றைச் செய்வதற்கு அதிக கவனமெடுக்க வேண்டும்.

🔲 உழ்ஹிய்யாவைப் பொறுத்தவரை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டிய வேறு ஒரு விடயமும் இருக்கின்றது. அது தான் அறுக்கப்பட்ட மிருகங்களது எச்ச சொச்சங்கள் அல்லது கழிவுகளாகும். அறுக்கப்பட்ட மிருகங்களது தலைகள், தோல், முள், கால்கள் என்பன ஆங்காங்கே எறியப்படுவதுண்டு. இதனால், சூழல் மாசடைகிறது. ஓரிரு நாட்களில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது. நாய்களும், பூனைகளும், காகங்களும் அவ்விடங்களுக்குப் படையெடுக்கின்றன. பின்னர் அங்கு வரும் அதிகாரிகளும் பிற சமயத்தவர்களும் முஸ்லிம் சமூகம் சுத்தமற்ற,அடுத்தவர்கள் பற்றிய எவ்வித அக்கறையுமற்ற சுயநல சமூகம் என்று முடிவெடுக்கலாம்.

பிறர் எம்மைக் குறை கூறுவர் என்பதற்காக நாம் எமது வாழ்வை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதல்ல. எமது மார்க்கத்தில் எக்காரியத்தையும் திறம்பட செய்யும்படியும், சுத்தமாக இருக்கும் படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. “சுத்தம் ஈமானின் பாதி”, “ஒவ்வொரு காரியத்தையும் திறம்படச் செய்யும்படி அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்” போன்ற பல ஹதீஸ்கள் எம்மை நெறிப்படுத்த வேண்டும்.

அதுமட்டுமன்றி, அயலாருக்குத் தொந்தரவு செய்யலாகாது என்ற கருத்தைக் கூறும் ஹதீஸ்கள் எமக்கு வழிகாட்டுகின்றன. “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கிறாரோ அவர் அயலாருக்கு (பக்கத்து வீட்டாருக்கு) நோவினை செய்யாதிருக்கட்டும் என்றார்கள்.”(ஆதாரம்: புஹாரி)

மேலும், *அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒருவன் ஈமான் கொண்டவனாகமாட்டான்’’* என மூன்று தடவை மீட்டி மீட்டிக் கூறினார்கள். அதைக் கேட்ட நபித்தோழர்கள், ’அவர் யார்’ என வினவ, *‘எவரது தொந்தரவுகளிலிருந்து அயலவர்கள் பாதுகாப்புப் பெறவில்லையோ அவர் தான்’* என்றார்கள்.” (புஹாரி)

எனவே, அயலாருக்கு எந்த வகையிலேனும் தொந்தரவாக இருப்பவன் விசுவாசம் கொண்டவனாக இருக்க முடியாது என்று இதுபோன்ற நபிமொழிகள் தெரிவிக்கின்றன. சொல்லால், செயலால் பிறரது மனதை நோவினை செய்வது விசுவாசியின் பண்பாக இருக்க முடியாது.

ஒரு விசுவாசியை அவனது அழகான நற்குணங்களால் இனம் காண முடியும். அவன் எங்கு சென்றாலும் பிறரது கஷ்டத்தில் பங்கெடுப்பவனாக, பிறருக்கு உதவி செய்பவனாக இருப்பானே தவிர, அவனால் பிறருக்கு உபத்திரவங்கள் இருக்கலாகாது. அவன் செய்யும் எல்லா இபாதத்களினூடாக இதனை அவன் சாதிக்க வேண்டுமென்றே அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்புவர். இபாதத்கள் அனைத்தும் மறுமைப் பலன்களைத் தருவது போலவே உலகிலும் அவற்றின் பலாபலன்களைக் காணமுடியும்.

🔲 மேலும், உழ்ஹிய்யா என்பது பெரும்பாலான இமாம்களது கருத்துப்படி வசதிபடைத்தவர்கள் மீது வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னாவாகும். இந்த ஸுன்னாவை நிறைவேற்றுவதில் காட்டப்படும் ஆர்வத்தின் அளவை விட அடிப்படையான பர்ளுகளான ஐங்காலத் தொழுகை, ஸகாத், வாரிசுச் சொத்துக்களை இஸ்லாமிய ஒழுங்கின்படி பங்கீடு செய்வது, கல்வி கற்பதும் கற்பிப்பதும், ஹலாலான உழைப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டி நிறைவேற்றுபவர்கள் தான் ஸுன்னத்துகள் பற்றி அதிக அக்கறையெடுக்க அருகதை பெறுவார்கள்.

👉 ஒரு தடவை நவீனகால இஸ்லாமிய அறிஞர் பஹ்மீ ஹுவைதி அவர்கள் பொஸ்னியாவிலிருந்து முதல்தடவையாக கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வதற்கு தயாராக இருந்தவர்களைப் பார்த்து இம்முறை நீங்கள் ஹஜ்ஜுக்காக ஒதுக்கியிருக்கும் பணத்தை பொஸ்னியாவில் அகதிகளாக பசியோடு வாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்குங்கள். அடுத்த வருடம் ஹஜ் பற்றி யோசிக்கலாம் என்ற மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டார்கள். அது காலத்தின் தேவையாக இருந்தது.

அதாவது அடிப்படையான இரண்டு கடமைகள் முரண்படுகின்ற பொழுது எந்தக்கடமையை முற்படுத்த வேண்டும் என்ற விடயத்திற்கு இந்த ஃபத்வா நல்ல ஆதாரமாகும்.

உள்ஹிய்யா கொடுப்பது சுன்னத்தாகும் ஆனால் அதனை விடவும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய பல காரியங்கள் தற்கால கொரோனா சூழலில் இருக்கின்றன. பலர் தமது தொழில்களை இழந்திருக்கிறார்கள். அன்றாட உணவுக்குக் கூட வசதிகள் எதுவும் அற்றவர்களாக வாழுகிறார்கள்.

எனவே குர்பானிக்காக ஒதுக்கப்படும் பணத்தை இவர்களது அடிப்படையான நாளாந்த உணவு தேவைகளுக்காக கூட ஒதுக்க முடியும் என்பது எமது பணிவான கருத்தாகும்.

அப்படியானால் வறுமை ஒழிக்கப்பட்ட பிறகுதான் உழ்ஹியா போன்றவற்றைக் கொடுக்க வேண்டுமா என்று சிலர் கேட்கலாம். ஆனால் தற்போது ஏற்பட்டிருப்பது போன்ற அசாதாரண சூழ்நிலையிலான வறுமை பற்றியும் அதற்கான உடனடித் தீர்வு பற்றியுமே நாம் குறிப்பிட்டோம். உழ்ஹிய்யாவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவது இதன் நோக்கமல்ல. சுன்னத்தான உழ்ஹிய்யா பற்றி கவனமெடுப்பதை விட அதிகமாக ஸகாத் போன்ற அடிப்படைக் கடமைகள் பற்றி நாம் அதிகமாக சிந்தித்து செயல்படுவதன் அவசியத்தை உணர்த்த விரும்புகிறோம்.

🇱🇰 அடுத்ததாக நாம் வாழ்வது ஒரு இஸ்லாமிய நாட்டில் அல்ல என்பதை மனதிற் கொண்டு எமது உழ்ஹிய்யாவை நிறைவேற்ற வேண்டும்.

🗝️ உழ்ஹிய்யாவின் நோக்கங்கள் வருமாறு:

➡️அல்லாஹ்வின் கட்டளையை நிறைவுசெய்து அதனூடாக அவனது கூலியைப் பெறுவது.

➡️ உள்ளத்திலுள்ள கஞ்சத்தனத்தை அகற்றுவது.

➡️ மாமிசத்தை ஏழை, எளியவர்களுக்கு வழங்கி அவர்களது பசியைப் போக்கி, போஷாக்குள்ளவர்களாக மாற்றுவது.

➡️ இப்றாஹீம் (அலை) அவர்களது தியாக வாழ்வை நினைவுகூர்வது.

எனவே, உழ்ஹிய்யா எனும் ஸுன்னாவை சிறுபான்மை நாட்டில் உரிய விதத்தில் நிறைவு செய்து ஈருகல நன்மைகளைப் பெறுவோமாக.

அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக!

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...