தொகுப்பு:அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி)
இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகையில் 90%ஆகவுள்ள முஸ்லிம் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் நடக்கும் வெட்டுக்குத்துகளும் சிறுபிள்ளைத் தனமான சண்டைகளும் நன்கு தெரியும்.எம்மைப் பார்த்து அவர்கள் எள்ளி நகையாடுகிறார்கள். முஸ்லிம் சமூகம் பற்றிய மதிப்புணர்வு அவர்களது உள்ளங்களிலிருந்து படிப்படியாக எடுபட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.
முஸ்லிம் சமூகத்தை உணர்ச்சி வசப்படும், அவசரப்படும், அற்ப இலக்குகளுக்காக சண்டைபோடும், கட்டுக்கடங்காத ஒரு சுயநல சமூகமாகவே பெரும்பான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பார்க்கிறார்கள். சாந்தி, சமாதானத்தை, சமூகக் கட்டுக் கோப்பைத் தராத ஒரு மார்க்கத்தை முஸ்லிம்கள் பின்பற்றிக் கொண்டிருப்பதாகக் கருதி இஸ்லாத்திலிருந்து அவர்கள் தூரமாகிக்கொண்டிருக்கிறார்கள். விமர்சனங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தின் அழகிய கருத்துகளை அவர்கள் நூல்களில் படித்திருந்தாலும் முஸ்லிம்களது வாழ்வில் அவை அமுலில் இல்லாமல் இருப்பது அவர்களுக்கு இந்த மார்க்கத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
உண்மையாகக் கூறப்போனால் மார்க்கத்தின் மீது முட்கம்பிகளை போட்டு பிறர் அதனுள் நுழையாதிருக்க முஸ்லிம்களாகிய நாமே காரணமாக அமைந்திருக்கிறோம். எதிலும் குதர்க்கம், விதண்டாவாதம், புன்முறுவல் இல்லாத முகபாவனை, பிறரை சகிக்காத மனப்பாங்கு இவை தான் இஸ்லாம் தரும் பண்புகள் என்று பிறரை எண்ணச் செய்துவிட்டோம்.
குளிக்கப்போய் சேறு பூசிக் கொள்கிறோம்!
இதன் பொருள்தான் என்ன? சமூக சீர்திருத்தம், தஃவாப் பணி, அரசியல் செயற்பாடுகள் என்பன நாட்டிலும் சமூகத்திலும் நல்ல பல விளைவுகளை ஏற்படுத்த வேண்டும். அதுதான் அவற்றின் இலக்குகள். ஆனால் இந்த செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டுள்ள சிலர்- பலர் அல்ல-, எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கிறார்கள். குளிக்கப் போய் சேறு பூசிக் கொள்கிறார்கள்.
சமூக ஐக்கியம், ஸ்திரப்பாடு, சகோதரத்துவ வாஞ்சை, அபிவிருத்தி, இன சௌஜன்யம்,தேச நிர்மானம் போன்றன இஸ்லாமிய சீர்திருத்த, தஃவா, அரசியல் சமூகப் பணிகளின் இலக்குகளாகும். ஆனால், களத்தில் இருப்பவர்களது முயற்சிகள் ’சாண் ஏற முழம் சறுக்குகின்றன’. இவர்கள் வாய் மூடி இருந்திருந்தால் இஸ்லாம் எவ்வளவோ பயன் பெற்றிருக்கும்.
தலைமைமைத்துவங்களும் நம்பகத் தன்மைமைய இழந்து வருகின்றன. தடி எடுத்தவர்கள் எல்லோரும் வேட்டைக்காரர்கள் என்ற நிலை உருவாகி வருகிறது.
முகநூலில், வட்ஸ்அப்பில் பதிவேற்றப்படும் பல பதிவுகள், போட்டோக்கள் அடிப்படையான இஸ்லாமிய தொடர்பாடல் ஒழுக்க விதிகளை மீறுவதாயின் அது என்ன இஸ்லாம்? இதற்கெப்படி இஸ்லாமிய பிரசாரம் என்று கூற முடியும்?
“The ends justify the means” – இலக்குகள் வழிமுறைகளை நியாயப்படுத்தும்- என்ற மக்கியவல்லிய கருத்து இஸ்லாத்திற்கு மிகவுமே முரணானது. ’இலக்கு தூய்மையாயின் வழிமுறைகள் எப்படியும் அமையலாம்’ என்று நினைப்பவர்கள் பாரிய தவறைச் செய்கிறார்கள். ஹராத்தை நோக்கி இட்டுச் செல்லும் அனைத்தும் ஹராமாகும் என்பதே இஸ்லாத்தின் தாரக மந்திரமாகும். இஸ்லாம் கூறும் சமூக அமைப்பை பொய், புறம், கோள், பரிகாசம், அகம்பாவம், அபாண்டம் போன்றவற்றினூடாக அடைய முடியாது. ’படிப்பது தேவாரம், இடிப்பது கோயில்’ என்பது போல மனதில் உள்ள இலட்சியம் இஸ்லாமாக இருக்க அதனை அடையக் கையாளப்படும் அணுகுமுறைகள் இஸ்லாமிய ஒழுங்குகளைப் பேணாத போது அது ஹராமாகிவிடும்.
இஸ்லாம் புறம் பேசுவதை ஹராமாக்கியுள்ளது. வதந்திகளை நம்புவதை தடுத்திருக்கிறது. இஸ்லாமியப் பணியில் ஈடுபடுபவர் தஃவாவின் போது பிறரது மாமிசத்தை புசிப்பதாயின், வதந்திகளை பரப்புவதாயின் அல்லாஹ் எப்படி அதனை அங்கீகரிப்பான்?
பிறரைத் தூசித்து, அபாண்டம் சுமத்தி அதேவேளை தொழுது நோன்பிருந்து ஸகாத்தும் கொடுத்துவந்த ஒருவரது நன்மைகள் அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் கொடுக்கப்படும் என்றும் இவரது நன்மைகள் முடிந்துவிட்டால் இவரால் பாதிக்கப்பட்டவர்களது தீமைகள் இவருக்கு சுமத்தப்பட்டு இறுதியில் இவர் நரகில்நுழைய நேரிடும் என்று கூறும் ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
”மனிதர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வுக்கு மிக வெறுப்புக்குரியவர் அளவு மீறி தர்க்கம் செய்பவராவார்” (ஆதாரம்-புஹாரி 2277), ”தீவிரவாதிகள் அழிந்து விட்டார்கள்” (அழிந்துவிடட்டும்), (ஆதாரம்-முஸ்லிம்-2670) போன்ற ஹதீஸ்கள் வார்த்தைகளில் கனிவும் பேச்சுகளில் இங்கிதமும் நடத்தைகளில் நிதானமும் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அறிவுபூர்வமான ஆய்வுகளையும் துறை சம்பந்தப்பட்டவர்களது வாதப்பிரதிவாதங்களையும் இஸ்லாம் விரும்புவது மட்டுமல்ல அது அவசியம் என்றும் கூறுகிறது. ஆனால் கருத்து பேதங்களின் போதான ஒழுக்கங்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அது மிகக் கடுமையாக இருக்கிறது.
எனது இயக்க கட்சிக்காரர் மட்டுமே வெல்ல வேண்டும் என்றும் பிற இயக்கத்தவர் ஏதாவது ஒரு நற்கருமத்தில் ஈடுபட்டு அவருக்கு நற்பெயர் கிடைத்து விடக்கூடாது என்றும் சிந்திப்பது இயக்கவெறியும் ஜாஹிலிய்யதுமாகும். ”முரண்படு, பிரபலமாவாய்” (خالف تعرف) என்று அறபில் ஒரு பழமொழி உண்டு. தமக்கு அறிவிருக்கிறது என்று பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக செயல்படுவது மகா பெரிய அநியாயமாகும். இவ்வாறு நடந்துகொள்வது ஒரு இஸ்லாமிய பிரசாரகரிடம் –தாஈ-யிடம் எப்படிப் போனாலும் ஒரு சாதாரன முஸ்லிமிடம் கூட இருக்க முடியாத, இருக்கக் கூடாத இழிந்த பண்புகளாகும்.
மாற்று இயக்கத்தவர்களது உறவை முறித்துக் கொள்வது, அவர்களது தவறுகளை ஊதிப் பெருப்பிப்பது, தமது இயக்கத்தவர்களது தவறுகளை நியாயப்படுத்துவது, இயன்றவரை அவற்றை மறைப்பது எல்லாம் தெட்டத் தெளிவான நயவஞ்சகத்தனமும் அராஜகமுமாகும். இஸ்லாத்தின் லேபல் தரித்து வேஷம் போட்டு ஜாஹிலிய்யத்தை அமுலாக்கும் பிரயத்தனமாகும்.
வெளி நாட்டுப் பணத்துக்கான் உள்நாட்டு நிகழ்ச்சிகள்!
இன்னும் சிலரோ வெளிநாட்டிலிருந்து தமக்குப் பணம் அனுப்புவோரின் கொள்கைகளுக்கு இணங்கவும் அவர்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும் இலங்கையில் நிகழ்ச்சிகளை ’டிசைன்’ பண்ணுகிறார்கள். அடிப்படையில் வெளிநாட்டுப் பணத்தை எடுப்பதில் தவறு கிடையாது. ஆனால் நாம் வாழுவது ஒரு சிறுபான்மை நாட்டில் என்பதையும் எமக்கென்றே பிரத்தியேகமான விவகாரங்கள், பிரச்சினைகள் உள்ளன என்பதையும் நாம் ஒரு போதும் மறந்துவிடலாகாது. வெளியிலிருந்து பணம் அனுப்புவோரைத் திருப்திப்படுத்துவதற்காக நாம் நிகழ்ச்சி நிரல் தயாரிப்பதா? அல்லது எமது நாட்டுக்கு மிகவுமே உசிதமான நிகழ்ச்சி நிரல்களுக்காக வெளிநாட்டு உதவியைக் கோருவதும் பயன்படுத்துவதுமா? அல்லாஹ்வை முன்னிறுத்தி பதில் தேடிக்கொள்ள வேண்டும். இல்லாத போது எகிப்திய, சவூதி அரேபிய, பாகிஸ்தானிய, துருக்கிய, இந்திய மூளைகளால் இலங்கை மண்ணுக்காக திட்டமிட்ட தவறைச் செய்தவர்களாவோம்.ரஷ்யாவில் மழை பெய்யும் போது இலங்கையில் குடை பிடிக்கும் குழுவினர் என்ற விமர்சனம் இலங்கை கம்யூனிஷ்டுகளுக்கு இருந்தது.நுவரெலியாவில் மட்டுமே வளரும் ஒரு மரத்தை உலைவலயமான மன்னாரில் கொண்டு போய் நாட்ட முடியாது.இஸ்லாம் எல்லாக் காலத்துக்கும் எல்லா இடங்களுக்கும் பொதுவானது என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.ஆனால் அதனை நடைமுறைப் படுத்துவதற்கான அணுகுமுறைகள் இடத்துக்கு இடம் வித்தியாசப்படும்.
வெளிநாடுகளில் உள்ள பல இயக்கங்களும் தனி மனிதர்களும் இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார்கள் என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. அதனால் அவர்கள் கருத்துகள் வாயிலாகவும் பண ரீதியாகவும் எமக்கு உதவக் காத்திருக்கிறார்கள், உதவுகிறார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக. ஆனால், எமது சூழலில் முக்கியத்துவப்படுத்த வேண்டிய விடயங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். எமது சூழலின் தேவைகளை அவர்களுக்கு நாம் புரியவைக்க வேண்டும். மாற்றமாக அவர்களை திருப்திப்படுத்த நிகழ்ச்சி செய்வதும் அவர்களுக்கு அபிப்பிராயம் கூறினால் பணஉதவி நின்று விடுமோ என்று பயப்படுவதும் நியாயமல்ல. அது அல்லாஹ்வின் திருப்தியை அன்றி மனிதர்களின் திருப்தியையும் உலக லாபத்தையும் எதிர்பார்த்ததாகவே கருதப்பட முடியும்.மேலும் பெரும்பான்மை சமூகங்களது சந்தேகப் பார்வையையும் ஏற்படுத்தும்
இலங்கையின் முதன்மைப்படுத்தல்கள்!
இலங்கை சமூக நிலவரத்தை குறுக்கு வெட்டுமுகமாக நோக்கும் போது அதாவது பகுப்பாய்வு செய்யும் போது இலங்கை தஃவா மற்றும் சமூகக் களங்களில் பணிபுரிவோர் முதன்மைப்படுத்தி நோக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன.
1.முஸ்லிம் சமூகத்துக்குள் நாஸ்திகம், சடவாதம், நவீன நூற்றாண்டுக்கு இஸ்லாம் பொருத்தமா என்ற சந்தேகம் போன்றன வலுப்பெற்று வருகின்றன.
2. காதியானிஸம்,பெண்ணிலைவாதம், பின் நவீனத்துவம் என்பன தீவிரமாக ஊடுருவி வருகின்றன.
3. தனித் தனியாகவும் குடும்பங்களாகவும் சிலர் மதம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். ‘முன்னைநாள் முஸ்லிம்கள்’ என தம்மை பெருமையாக அழைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். இஸ்லாத்தைப் பற்றி விமர்சன ரீதியாக எழுதப்படும் சிங்கள மொழியிலான நூல்களும் வெப்தளங்களும் சிங்கள மொழி மூலம் கற்பதும் இதற்கான பிரதான காரணங்களாக இருக்கலாம்.
4.சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் செயற்படும் உளவுஸ்தாபனங்களும் நிறுவனங்களும் முஸ்லிம்களைப் பின் தொடர்ந்த வண்ணம் உள்ளன. முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயங்களை உருவாக்குவதிலும் அவர்களுக்கு மத்தியில் பிளவுகளை தோற்றுவிப்பதிலும் அவற்றின் பங்கு அதிகம்.
5. முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு மிகவுமே பலவீனமான கட்டத்தை அடைந்து விட்டது.அதற்கு அவர்களை விட எம்மையே நாம் அதிகம் குறை கூறிக்கொள்ள வேண்டும்.
6.ஒப்பீட்டு ரீதியில் இலங்கை முஸ்லிம்கள் கல்வித் துறையில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். (புள்ளி விபரங்கள் உள்ளன)
7. இலங்கை முஸ்லிம்களில் 22% ஆனவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழுகிறார்கள்.50,000 குடும்பங்கள் அடிப்படை உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத ‘பகிர்கள்’ எனும் நாமத்துடன் வாழுகிறார்கள். கொரோனாவின் பின்னர் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.
8.இலங்கையில் பரவாத நோய்கள் (Noncommunicable Disease)களால் பாதிக்கப்படுவர்களில் முஸ்லிம்களின் தொகை மும்மடங்காகும்.
9.போதைவஸ்துப் பாவனை, சமுக வலைத் தளங்களுக்கு அடிமையாதல், குடும்ப அமைப்பின் சிதைவு, பிற சமூகங்களுடனான உறவு விரிசல் என ஏகப்பட்ட பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
10. இது தவிர சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகம் சந்திக்குக்கும் துன்பங்களை வார்த்தைகளால் வடித்து முடிக்க முடியாது.
மொத்தத்தில்- மிகைப்படக் கூறுவதாக எவரும் நினைத்து விடலாகாது. ஒரு பின்தங்கிய, பலவீனமான, நொந்துபோன சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது. இஸ்லாமிய பிரசாரத்தில் சம்பந்தப்படுவோரும் பொறுப்பான பதவிகளில் அமர்ந்திருப்போரும் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுவோரும் இவற்றை கருத்தில் எடுக்க வேண்டும். சில்லறைத் தனமான கருத்து வேறுபாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுவது சமூகத்தை இன்னும் பலவீனப்படுத்தும் என்பதை மறக்கலாகாது.பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றாத நிலையில் மறுமையை நோக்கிச் செல்வோர் தமது நிலைப்பாடுகளை எப்படி நியாயப்படுத்தலாம்? அல்லாஹ் எல்லாவற்றையும் மிக நுணுக்கமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
யாரோ கூறியது போல் அத்தஹிய்யாத்தில் விரலை அசைப்பதா இல்லையா என்ற பாரம்பரியமான கருத்து வேறுபாட்டைப் பற்றி நாம் விவாத்தித்து சரி பிழை கண்டு கொண்டிருக்கையில் உலகிலுள்ள பல கோடிப் பேர் ஷஹாதத்துக் கலிமாவையே அறியாத நிலையில் இருக்கிறார்கள்.
இவை எமது பணிவான அவதனங்களும் கருத்துக்களாகும். குர்ஆன் கூறுவது போல் ”வதவாஸவ் பில்ஹக்” وتواصوا بالحق சத்தியத்தைக் கொண்டு பரஸ்பரம் உபதேசிப்பதற்கான ஒரு முயற்சி மட்டுமே. இவற்றில் தவறுகள் இருக்கலாம். மனதைப் பிழிந்து கொண்டிருக்கும் கவலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனேயே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது. எவரது மனதையாவது பாதித்திருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னிப்பது நல்லதாகும். எழுதும் நாம் எமது கடமைகளை எந்த அளவு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற அச்சமும் உள்ளது. அல்லாஹ்வே எம்மை மன்னிக்க வேண்டும்.
சுருக்கமாக பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கமுடியும்:
1. அதி முக்கியமான பிரச்சினைகளையும் சவால்களையும் மிகத் துல்லியமாக இனம் காண்போம். இதில் இயக்க, கட்சி முரண்பாடுகளை ஒரு பக்கத்தில் தூக்கி எறிவோம். அல்லாஹ் பார்க்கிறான் என்ற அச்சமும் பரந்த வாசிப்பும் தேடலும் பரந்த மனப்பாங்கும் இதற்குத் தேவை.
2. முஸ்லிம் சமூகத்திலுள்ள துறைசார்ந்த நிபுணர்கள் சமூகப் பணிகளுக்கான காத்திரமான மூலோபாயத் திட்டங்களை (Strategic Plans) வகுக்க வேண்டும். இப்படிச் செய்தால் எமது வளங்கள் திறமைகள், நேரம், காலம் என்பன வீணடிக்கப்படமாட்டாது. இலக்கு தெளிவாகும். வேலைப்பகுப்பு நடக்கும் துறைசார்ந்தவர்கள் மாத்திரம் ஈடுபடுவார்கள்.
3. உள்ளங்களில் உள்ள பதவி மோகம், அகம்பாவம், அறிவீனம், பணஆசை, புகழ்ஆசை, போன்ற உள நோய்களிலிருந்து தூரமாக வேண்டும் என்ற ஆழமான விருப்பம் என்பன உருவாக்கப்பட வேண்டும். சமூக நலன்களுக்காக எமது தனிப்பட்ட நலன்களை குர்பான் கொடுப்போம்.இந்த நாட்டிலுள்ள சகல சமூகங்களுடனும் ஐக்கியமாகவும் அவர்களது நல்லெண்ணத்தை வென்று வாழும் அதேவேளை இஸ்லாத்தின் அடிப்படையான போதனைகளில் இருந்து விலகாத நிலையிலும் இருப்போமாக!
அல்லாஹ் எம் அனைவரையும் பரந்த மனப்பாங்குடன், அறிவுத் தெளிவுடன், அவனுக்காக என்று மட்டும் செயட்படுபவர்களது கூட்டத்தில் சேர்ப்பானாக!