திருணம நிகழ்வுகளை நடத்தும் போது மக்கள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுவதனால் திருமண கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.
குறிப்பாக மேல் மாகாணத்தை மையப்படுத்தி இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் அனுமதிக்கப்பட்ட வரையறையை தாண்டி மக்கள் பங்கேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக திருமண நிகழ்வுகளை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி 150 பேருடன் நடத்துமாறு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் நடந்த திருமண நிகழ்வுகளில் 250 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருப்பதாக பாதுகாப்புத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டல் நெறிமுறைகளைப் பின்பற்றாமல் திருமண நிகழ்வுகள் நடத்தப்படுவது துரதிஷ்டவசமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் திருமணத்தையொட்டிய வரவேற்பு நிகழ்வுகளும் பல மண்டபங்களில் நடந்துள்ளதால் ‘திருமண கொத்தணி’பரவும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகளை தவறாக பயன்படுத்தினால் நிலைமை ஆபத்தானதாக மாறும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார். இதனால் திருமண நிகழ்வுகள் நடத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து ஆராயப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் நாளை முதல் ஆரம்பமாகும் நீண்டவார இறுதி விடுமுறை நாட்களில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் நாளாந்த தொற்று ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.