“நஞ்சற்ற உணவை பயிரிடுவோம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் சேதனப் பசளை உற்பத்தி தொடர்பான செய்முறைப் பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டம் அம்பாறை மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள கமநல சேவை நிலையம், விவசாய அமைப்புக்கள் ஊடாக சேதனப்பசளையை உற்பத்தி செய்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக கமநல சேவைகள் உதவி ஆணையாளர் சம்பா தென்னக்கோன் தெரிவித்தார்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், நாமல்ஓய, பரகஹகெல்ல, மாயாதுன்ன ஆகிய கமநல சேவை நிலையங்களில் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு சேதனப்பசளை தயாரித்தல் தொடர்பான செய்முறைப் பயிற்சி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கால்வாய்கள், நீர்பாசன குடியேற்றங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, மகாவலி வலயத்திலுள்ள சுமார் 50 விவசாய நீர்பாசனக் குளங்களை ‘வாரி சௌபாக்யா’ என்ற ‘நீர்பாசன சௌபாக்கிய’ திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய 120 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
அதன் முதற்கட்டமாக எச் வலயத்தில் 47 நீர்பாசன குளங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் (நேற்று 8ம் திகதி) ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.