15 வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய மற்றும் அதற்கு உதவிப் புரிந்த குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய மற்றும் அதற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் இதுவரை 21 பேர் கைதாகியுள்ளனர்.
நேற்று (30) கைதானவர்களில் மிகிந்தலை பிரதேச சபை உப தலைவர் மற்றும் வியாபாரி ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
குறித்த சிறுமியை இணையத்தின் ஊடாக விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மூவரும் இன்று (01) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, நேற்று வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நேற்று (30) 17 பேரும் அதற்கு முன்னர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் பிள்ளையின் தாய் மற்றும் சிறுமியை விற்பனை செய்த நபரின் இரண்டாம் மனைவி, சிறுமியை விற்பனைக்காக ஒவ்வொரு இடங்களுக்கும் கொண்டுச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிகள் இருவர் அத்துடன் சிறுமியை விற்க விளம்பரம் தயாரித்தவரும் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையத்தளம் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக குறித்த சிறுமி ஏற்கனவே 3 மாதங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், அதாவது 10 ஆயிரம் 15 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணத்துக்காக குறித்த சிறுமி விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.