நாட்டில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற அரசியல் சிவில்சமூக செயற்பாட்டாளர்களை தனிமைப்படுத்தலிற்கு அனுப்புவது உடன்படமறுப்பதற்கான சுதந்திரத்தின மீது அச்சமூட்டும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது. சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் துயரங்களை முன்வைத்து பலதரப்பட்ட அரசியல் கட்சிகள் சிவில் சமூகத்தினர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களை பொலிஸார் ஒடுக்கியுள்ளனர் என தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.
இறுதியாக இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான சிவில் சமூககுழுவினர் முன்னெடுத்த அமைதிவழியிலான ஆர்ப்பாட்டங்களை பொலிஸார் ஒடுக்கியுள்ளனர், சிவில் ஒழுங்குவழிகாட்டுதல்களை மீறுகின்றனர் என தெரிவித்து முதியபெண்கள மத குருமார் உட்பட பலரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது. நீதிபதி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அவர்களை அனுப்ப மறுத்தவேளை பொலிஸார் அவர்களை பலவந்தமாக பேருந்தில் ஏற்றி வடபகுதியில் உள்ள இராணுவமுகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.
சிறிய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அழிக்ககூடிய ஆபத்தாக மாறியுள்ள இரசாயன உரங்களிற்கு எதிரான தடைக்கு எதிராகவும்,சம்பளம் வழங்கப்படாதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டகூட்டுத்தாபன ஊழியர்களிற்கு எதிராகவும், சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்தில் புதிய மின்நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சூழல்ஆர்வலர்களிற்கு எதிராகவும் அவர்களது ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் விதத்தில் இந்த ஜனநாயக விரோத முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்காக கொவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களை பயன்படுத்துவது முற்றும்முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.உடன்பட மறுப்பது ஜனநாயகத்தின் அடிப்படை என்றளவில் மக்களின் அடிப்படை உரிமை என்பதால் அதனை பாதுகாக்கவேண்டும் எனவும் தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.