இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்திற்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களுக்காக 420 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால இழப்பீட்டில் மீனவர்களுக்காக 200 மில்லியன் ரூபா பணத்தை கப்பல் நிறுவனம் வழங்கியுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த நிதிக்கு மேலதிகமாக மேலும் 220 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்த 200-க்கும் அதிகமான கடலாமைகளின் உடல்கள் இதுவரை கரையொதுங்கியுள்ளதாகவும் 20 க்கும் அதிகமான டொல்பின்களும் 6 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கப்பலின் உள்நாட்டு நிறுவன நிர்வாகத்தினர் 7 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் சட்டத்தின் கீழ், தண்டனை சட்டக்கோவையிலுள்ள சரத்துக்களின் கீழ் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.