மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரான ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளிற்கமைய நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று (10.07.2021) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்தார். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டார். மேலும் அங்கு முதற்கட்டமாக கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளத்தின் அனுசரணையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொரோனாவினால் மரணமடையும் உடல்களை அடக்கம் செய்யும் மையவாடிக்கு வழங்கப்பட்ட ஜே.சி.பி.இயந்திரத்தை கையளித்ததுடன் கிராமிய வீதி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நாற்பது மில்லியன் ரூபாவில் அமையப்பெறவுள்ள காகிதநகர் கொட்டடி வீதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” என்ற தொனிப்பொருளில் காகிதநகர் மற்றும் மீறாவோடை கிராமங்களில் அதிகார சபையின் ஆறு லட்சம் ரூபா நிதியில் பயனாளியின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இரு வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 1990ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்கு மீள்குடியேற்ற அதிகார சபையினால் வீடுகள் அமைக்கும் திட்டத்தில் ஒன்பது குடும்பங்களுக்கு ஆரம்பக்கட்டமாக தலா இரண்டு லட்சம் ரூபா வீதம் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் சிற்றூழியர்களின் பதினைந்து நாட்களுக்குரிய கொடுப்பனவாகவும் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் மீஸான் கட்டைகள் ஐநூறுக்காகவும் கண்டி மற்றும் கொழும்பு பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளத்தினால் மூன்று இலட்சம் ரூபா நிதியானது ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நீதியமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நஸீர் அஹமட் , இஸ்ஹாக் ரஹ்மான், மர்ஜான் பளீல்,பைசால் கசீம், எம்.எஸ் தௌபீக் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் , உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், டாக்டர் அம்ஹர் ஹம்தானி, நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.



