ஆப்கானிஸ்தானின் நன்கஹார் பகுதியில் உள்ள ஐ.எஸ் இலக்குகளின் மீது, அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.இதன்போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றன.சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன.
இதற்கிடையில், மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரால் நேற்று முன்தினம் (26) தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாக்குதல் நடத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில், அந்நட்டின் நன்கஹார் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து ஆளில்லா ட்ரோன் விமானம் மூலம் அமெரிக்க படை வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் இலக்கை வெற்றிகரமாக அடைந்துவிட்டதாக அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது.
இதேவேளை, காபூல் விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதிகளில் உள்ள அமெரிக்கர்களை, அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.விமான நிலையத்திற்கு வெளியே குண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.