‘சைடஸ் கெடிலா’ நிறுவனம் தயாரித்துள்ள, ‘சைகோவ் – டி’ தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று(20) அங்கீகாரம் அளித்துள்ளது.
12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ்-டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் அஹமதாபாத்தை சேர்ந்த சைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. மூன்று, ‘டோஸ்’களாக செலுத்தப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம், சைடஸ் கெடிலா நிறுவனம் சமர்ப்பித்தது.அதை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், அதன் கோரிக்கையை ஏற்று, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, சைகோவ்-டி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு நேற்று ஒப்புதல் அளித்தது. உலகிலேயே, கொரோனா வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்டு உள்ள முதல் மரபணு தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.