நாளாந்தம் கொவிட்-19 தொற்றுறுதியாகின்றவர்களினதும் மரணிப்போரினதும் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் என்பவற்றின் கொள்ளளவு அதிகரித்துள்ளது.
தனியார் வைத்தியசாலைகளிலும் தொற்றுறுதியாகின்றவர்களை அனுமதிக்கும் செயற்பாடு தாமதமடைந்துள்ளது.அத்துடன் நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் கொரோனா பிரிவு நிரம்பியுள்ளது.
பிரதான வைத்தியசாலைகள், அதன் அருகிலுள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் உதவி பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 11 அறைகளில் கொவிட்-19 தொற்றுறுதியான 600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் அவர்களில் நாளாந்தம் 15 பேர் வரை மரணிப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, ராகமை போதனா வைத்தியசாலையில் 10 அறைகளில் 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் 10 கட்டில்கள் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுறுதியான 100 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள 6 கட்டில்களில் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.