இன்று (30) இடம்பெறும் முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின்
நான்காவது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது
இலங்கைப் பாராளுமன்றத்தை 20 வருடங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி, அமைச்சராகப் பணிபுரிந்து, 84 வருடங்கள் வாழ்ந்து, எம்மை விட்டுப் பிரிந்த மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியஸ்தராகப் பதிவாகின்றார். 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் திகதி அவர் எம்மை விட்டுப் பிரிந்தார். இன்று (30) நான்கு வருடங்கள் நிறைவு பெறுகின்ற இச்சந்தர்ப்பத்தில் மர்ஹும் அஸ்வரை நினைவுபடுத்துவது, வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு உயர்இடத்து வந்த ஒருவராகவே.
கொழும்பு சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவரான அஸ்வர், தனது ஆரம்ப வாழ்க்கையை லேக் ஹவுஸின் நுகேகொடை செய்தியாளராகவே ஆரம்பித்திருக்கிறார். 1932.08.02ஆம் திகதி மஹரகமையில் பிறந்த அஸ்வர், நாட்டின் சுதந்திரத்தைப் பெறுவதற்காக பெரும் பங்களிப்புச் செய்த கலாநிதி ரீ.பி. ஜாயா கொழும்பு சாஹிராக் கல்லூரியில் அதிபராக இருக்கும் போது அவருடைய வழிகாட்டலில் கல்வியைப் பெற்றுக் கொண்டார். கொழும்பு சாஹிராக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்ததில் பிரதமராகவும் சபாநாயகராகவும் பதவி வகித்து அரசியல் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டார். அந்தப் பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கான எஸ்கிமேயின் புத்தகத்தை வாய்ப்பாடம் செய்திருந்தார். பின்பு பாராளுமன்றத்தில் அவர் அடிக்கடி எஸ்கிமேயை மேற்கோள்காட்டும் போது எல்லோரும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.
மர்ஹும் அஸ்வருடைய அரசியல் பயணம் லங்கா சமசமாஜக்கட்சியில் இருந்தே ஆரம்பமானது. கலாநிதி என்.எம். பெரேரா, ரொபெட் குணவர்தன, கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா போன்ற இடதுசாரி தலைவர்களுடைய பேச்சுக்களால் கவரப்பட்ட அஸ்வர், லங்கா சமசமாஜக்கட்சியிலே சேர்ந்து அரசியல் பயிற்சியைப் பெற்றார். 1950ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலே இணைந்த அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினராகவும் முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சராகவும் பின்பு பாராளுமன்ற விவகார அமைச்சராகவும் பணிபுரிந்தார். முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரோமதாஸ அரசில் முஸ்லிம் சமய கலாசார விவகார அமைச்சராக சேவையாற்றிய காலத்தில் இலங்கை முஸ்லிம்களுடைய கலாசார, மத மேம்பாட்டுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களைத் முன்னெடுத்தார். மாவட்ட மட்டங்களில் நபிகள் (ஸல்) அவர்களுடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்ற திட்டத்தை அவரே ஆரம்பித்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் முஸ்லிம்களுடைய வரலாற்றை நூலுருப்பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இதன்மூலம் அநேகமான மாவட்டங்களில் 1000 வருடங்களுக்கு மேற்பட்டு வாழ்ந்த முஸ்லிம்களது வரலாறு நூலுருவப்படுத்தப்பட்டுள்ளன. அஸ்வருடைய சேவைகளில் குறிப்பிடத்தக்க மற்றொரு சேவை வாழும்போது கலைஞர்களை வாழ்த்துகின்ற திட்டம். தான் பதவி வகித்த காலத்தில் 135 கலைஞர்களுக்கு அறபுப் பெயர்களைச் சூட்டி, நிதி உதவி வழங்கிக் கௌரவித்தார்.
தேசிய மீலாத் விழாவுக்குச் சமாந்தரமாக அந்த மாவட்டத்திலே முஸ்லிம் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்ற வேலையும் மர்ஹும் அஸ்வரால் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அந்தந்த மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள, அரசாங்க உத்தியோகத்தர்களுடைய அதரவும் மர்ஹும் அஸ்வருக்குக் கிடைத்தன.
பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன் மர்ஹும் அஸ்வர், முன்னாள் சபாநாயகர்களான மர்ஹும் எம்.எச். முஹம்மத், மர்ஹும் பாகீர் மாகார் ஆகியோருடைய அந்தரங்கச் செயலாளராகப் பணிபுரிந்தார். பாராளுமன்ற விவகாரங்கள் பற்றி ஆழ்ந்த அறிவுமிகு அஸ்வர், சில சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தை நெறிப்படுத்தும் பொறுப்பையும் மேற்கொண்டார். அவர், பாராளுமன்றத்தின் பிரதி கொரோடாகவும் சில பணிபுரிந்தார். பாராளுமன்றத்தில் கூடுதலாக குறுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்சிகர எம்.பி.யாக அஸ்வர் பிரபலம் பெற்றிருந்தார்.
ஆன்மீகம், பொதுச்சேவை, அரசியல் இன்னோரன்ன பலதுறைகளில் பிரகாசித்த ஒருவராக மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் திகழ்ந்தார். ஏல்லாவற்றிருக்கும் மேலாக நீதி, நியாயத்தைக் கடைப்பிடித்து முன்மாதிரியான முழுமைபெற்ற ஒரு மனிதராக அவரை நாம் பார்த்தோம்.
பிரபல ஊடகவியலாளராகவும், இலக்கியவாதியாகவும் பிரபல்யம் பெற்ற மர்ஹும் அஸ்வர், ஒரு கவிஞராகவும் பரபல்யம் பெற்றிருந்தார். பாராளுமன்றத்தில் சில விவாதங்களில் சிங்களம், தமிழ் கவிகள் பாடி தமது கருத்தை வெளியிட்டிருந்தார்.
தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளாது, தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு ஐந்து முறை தெரிவானார். முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ, இவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து, அமைச்சர் பதவியையும் வழங்கினார், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவரைப் மீண்டும் பாராளுமன்றத்துக்கு நியமித்தார். அதேபோல முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவும் இவரை பாராளுமன்றத்துக்கு நியமித்தார்.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொமிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த மர்ஹும் அஸ்வர், நாட்டின் தலைவர்களின் உரைகளை மொழிபெயர்ப்புப் செய்வதில் பங்களிப்புச் செய்தார். அமரர் டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன மர்ஹும்களான டீ.பி. ஜாயா, டாக்டர் எம்.ஸி.எம். கலீல் முதல் ஆர்.பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர்களுடைய மொழி பெயர்ப்பாளராக இருந்து அவர்களுடைய உரைகளை தமிழ், சிங்கள மொழிகளில் மொழி பெயர்த்திருக்கிறார். உண்மையிலே அவர் இந்த மொழி பெயர்ப்புப் பணிகளினைச் செய்ததற்காகத்தான் அவரை முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ பாராளுமன்றத்திலே நியமித்தார்.
2008ஆம் ஆண்டு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினுடைய அழைப்பை ஏற்று, இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலே இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தினார். இறக்கும் வரை பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருந்த அஸ்வர், நல்லாட்சி அரசாங்க காலத்திலே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை கௌரமாக நிராகரித்தார். அந்த அழைப்பினை நான் ஏற்றுக் கொண்டால், எனக்குப் பதவிகள் கிடைக்கும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவுடன் முஸ்லிம்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்காகவே நான் கடைசி வரை அவரோடு இருப்பேன் என்று தனது நண்பர்களுக்கு மர்ஹும் அஸ்வர் தெரிவித்திருந்தார்.
2014ஆம் ஆண்டு பொதுஜன பெரமுனவுக்கு கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம் ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்றபோது அஸ்வர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். பாராளுமன்றத்தில் கூடுதலாக அல்-குர்ஆன், ஹதீஸ்களை ஆதாரம் காட்டிப் பேசிய ஓர் உறுப்பினராக மர்ஹும் அஸ்வர் திகழ்கிறார். இந்த சாதனை இதுவரை எவராலும் முறியடிக்கப்படவில்லை. இதற்கு முன்பும் முறியடிக்கப்படவுமில்லை. அந்த அளவுக்கு தனது ஒவ்வொரு விவாதத்திலும் அல்-குர்ஆனையும் ஹதீஸையும் ஆதாரம் காட்டிப் பேசி இருக்கிறார்.
முதன்முறையாக தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக் தெரிவான போது, முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ இவரை புத்தளம் மாவட்டத்துக்கு எம்.பி.யாக நியமித்தார். அதன்மூலம் 5 வருடங்கள் புத்தளம் மாவட்டத்தில் பாரிய அபவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலி முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் போன்ற அமைப்புகளில் முக்கிய பங்கு வகித்த மர்ஹும் அஸ்வர், எப்போதுமே சமூகத்துக்காக குரல் கொடுப்பதற்குத் தயங்கவில்லை.
அஸ்வருடைய பத்திரிகை வாழ்வு தினகரனின் நுகேகொடை நிருபர் என்ற தரத்தில் ஆரம்பமானது. அன்றிலிருந்து பத்திரிகைக்கு எழுதுவது அவரது அலாதியான விருப்பமாக இருந்தது. பல்வேறு பயன்தரு கட்டுரைகளைத் தொடராக எழுதி இருக்கிறார்.
மர்ஹும் அஸ்வர் தனது அரசியலின் இறுதிக்கால கட்டத்தை முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிச் செயற்பட்டார். மஹிந்த ராஜபக்ஷ அணி உருவாக்கி இருந்த முஸ்லிம் பிரிவின் முஸ்லிம் முற்போக்கு முன்னிணியின் செயலதிபராக இருந்து அக்கட்சியை கட்சி எழுப்புவதற்கு பங்களிப்புச் செய்தார். பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் தான் எடுத்த நிலைப்பாட்டிலே உறுதியாக இருந்து செயற்பட்டார். அவரது ஏற்பாட்டில் இறுதியாக மஹிந்த ராஜபக்ஷவினது இல்லத்தில் மாபெரும் இப்தார் நிகழ்வொன்று இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்களின் ஒம்புட்ஸ்மனாக செயற்பட்டு, ஊடகவியலாளர்களுடன் மிக நெருங்கிச் செயற்பட்ட அவர், இன, மத பேதமின்றி ஊடகவியலாளர்களுக்கு உதவுவதிலும் அக்கறை காட்டினார். ஊடகவியலாளர்களின் குடும்பங்களுடன் நெருங்கிப் பழகுவதிலும் மர்ஹும் அஸ்வருக்குப் பெரும் விருப்பம். நோயாளிகளைப் பார்ப்பதற்கும் ஜனாஸாக்களை, மரணவீடுகளை தரிசிப்பதற்கும் அவர்களுக்காக அனுதாபங்களை வெளியிடுவதிலும் தனது வாழ்நாளில் அதிக நேரங்களைச் செலவழித்தார். அஸ்வரிடமிருக்கும் சிறப்பம்சந்தான் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் அதில் உறுதியாக இருப்பதாகும். தான் ஏற்றுக் கொண்ட கொள்கையை உறுதியாக முன்னெடுக்கின்றவராக இருந்தார். இதனால் பாராளுமன்றத்திலே அவர் அடிக்கடி தனது எதிர்த்தரப்பினருடன் மோதிக் கொண்டதுமுண்டு.
மர்ஹும் அஸ்வர் இலங்கை முஸ்லிம்களுடைய முழுத் தகவல்களையும் தன்னத்தேபதிந்து வைத்திருந்த ஓர் ஆவணப்பெட்டகமாகவே திகழ்ந்தார். எந்தவொரு விடயத்தைப் பற்றிக் கேட்டாலும் ஆரம்பகால முஸ்லிம்களுடைய வரலாறுத்தகவல்களை மனப்பாடமாகச் சொல்லுவார். அப்படிப்பட்ட பெருமகனார்தான் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர். அன்னாருடைய பாவங்களை மன்னித்து, மேலான ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்கப் பிராத்திப்போம்.
அதே நேரம் மர்ஹும் அல்ஹாஜ் அஸ்வர் நினைவாக நினைவு முத்திரை வெளியிடப்பட வேண்டும் என்று இற்றைக்கு 2 வருடங்களுக்கு முன் இலங்கை மன்றக் கல்லூரியில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிய முன்னணியின் எற்பாட்டில் நடைபெற்ற நினைவுக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த வேண்டுகோள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோளை அரசாங்கம் நிறைவேற்றி, அஸ்வரின் பணிகளுக்கு கௌரவம் அளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.
என்.எம். அமீன்