மலேசிய பிரதமர் பதவியில் இருந்து மொஹிதின் யாசின் இன்று விலகி உள்ளார்.
அவரது ராஜினாமாவை மலேசிய மாமன்னர் ஏற்றுக்கொண்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
மலேசியாவில் மொஹிதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேசனல் அமைச்சரவை இன்று பதவி விலகிய தகவலை அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற கைரி ஜமாலுதின் சற்று முன்னர் தெரிவித்தார்.
கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் மொஹிதின் யாசின் இன்று பதவி விலகுவார் என கடந்த இரு தினங்களாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
இன்று திங்கட்கிழமை மலேசிய மாமன்னரைச் சந்தித்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைப்பார் என பிரதமர் துறையின் சிறப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மொஹிதின் யாசின் தலைமையில் ஆளும் பெரிக்கத்தான் அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக தோட்டத்தொழில் அமைச்சர் பதவி வகித்த கைருடின் அமான் ரசாலி தெரிவித்தார்.
அமைச்சரைக் கூட்டம் முடிந்த பின்னர் மாமன்னரைச் சந்தித்துள்ளார் பிரதமர் மொஹிதின் யாசின். அப்போது அவர் பதவி விலகுவது குறித்து மாமன்னரிடம் தெரிவித்துள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்த இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவில் தற்போது கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்திருப்பதால் பொதுத்தேர்தலை நடத்த இயலாத சூழல் நிலவுகிறது. எனவே இடைக்கால பிரதமராக மூத்த நாடாளுமன்ற எம்பிக்களில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இல்லையெனில் ஒற்றுமை அரசாங்கம் அமைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் அவர் ஆட்சி அமைக்க மாமன்னர் ஒப்புதல் அளிக்கக்கூடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்