ACMCயும், நடுநிலையாக சிந்திக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளும் – ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக இனியும் மௌனம் கலைக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல் தவம் கோரிக்கை.
ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான விசாரணை வேண்டி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், ஊடக மாநாடுகள், நேர்முக வர்ணனைகள் என எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம்.இனி, ACMCயினதும், நடுநிலையாக சிந்திக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளினதும் Turn. அதே கவனயீர்ப்பு போராட்டங்கள், ஊடக மாநாடுகள், நேர்முக வர்ணனைகளை ACMCயினரும் புத்திஜீவிகளும் செய்ய வேண்டும். அவை றிசாட் பதியூதீனை வைத்து அரசியல் செய்வதற்கு எதிரானவையாக அமைய வேண்டும்.
அதிகார வர்க்கத்தின் தலையீடற்ற சுதந்திர விசாரணையை அவை கோர வேண்டும்.
- அவை ஹிஷாலினியின் மரண வாக்குமூலத்தை வெளியிடக்கோருவதாக அமைய வேண்டும்.
- அவை ஹிஷாலினி பாலியல் பலாத்காரமாக செய்யப்பட்டிருந்தால் – 12 வயது முதல் அவர் வேலை செய்ய அனைத்து வீட்டுக்காரர்களும் கைது செய்யப்பட வேண்டியதை வலியுறுத்த வேண்டும்.
- அவை 12 வயதிலிருந்து ஹிஷாலினியை வேலைக்கனுப்பிய தாய் தந்தையர் கைதுசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுவதற்கான அழுத்தமாக அமைய வேண்டும்.
- அவை அதிகார வர்க்கத்தின் ஊதுகுழலாக செயற்பட்டு – வெறும் ஊகங்களை மாத்திரம் செய்தியாக வெளியிடும் ஊடகங்களுக்கு எதிரானவையாக அமைய வேண்டும்.
- அவை இனவாதத்தை கட்டவிழ்த்துவிடும் கைக்கூலிகளின் கருத்துக்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை வேண்டியதாக அமைய வேண்டும்.
இப்படிச் செய்வதினூடாகவே றிசாட் பதியூதீனுக்கு எதிராக – அரசியல் நோக்கில் பயன்படுத்தப்படும் ஹிஷானியின் மரணத்தின் மீதான உண்மையை வெளிக்கொணரலாம். கொலைக்குற்றவாளியாக அல்லது உடந்தையானவராக காட்டப்படுவதிலிருந்து றிசாட் பதியூதீனை ஓரளவிற்காயினும் காப்பாற்றலாம்.
15 வயதான சிறுமியை – இணையத்தளத்தில் தனியான பக்கம் திறந்து – விபச்சாரத்திற்கு விற்றதன் சம்பவத்தில் – ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் ஈடுபாடும் பின்னணியும் இருந்த காரணத்தினால் – அவை மூடிமறைக்கப்பட்டு – அதன் விசாரணைகள் தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் தொலைந்துபோயுள்ளன.
ஆனால், மரண வாக்குமூலத்தில் தானே தீயிட்டுக்கொண்டதாக கூறியுள்ள ஹிஷாலினியின் மரணம் – ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத பிரச்சாரமாக முன்னெடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
ஹிஷாலினிக்கு நீதி கிடைக்கட்டும்!
றிசாட் மதியூதீனுக்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்கள் நிறுத்தப்படட்டும்!
இனவாதத்தின் சிறகுகளும் உடைக்கப்படட்டும்! என அரசியல் செயட்பட்டளர் எ.எல் தவம் முகநூலில் பதிவிட்டுள்ளார்.