தொகுப்பு:அப்ரா அன்ஸார்
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடி பள்ளிவாசலில் 31 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இன்று 03.08.2021நினைவு கூறப்படுகிறது.
கடந்த 1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும்மா பள்ளிவாசலில் இரவு இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் முதியவர்கள், சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கருப்பு தினமாகவே கருதப்படுகின்றது.இந் நாளை வருடாந்தம் சுஹதாக்கள் தினமாக நினைவு கூர்ந்து அனுஷ்டிக்கப்படுகின்றது.
தாக்குதலின் பின்னனி!
1990ம் ஆண்டு என்பது இலங்கை முழுவதும் யுத்த மேகங்களாலும் ,மரணபீதியினாலும், இன முரண்பாடுகளினாலும் சூழப்பட்ட காலப்பகுதியாகும்.இக் காலப்பகுதியில் தான் காத்தான்குடி பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் ,படுகொலைகளும் இடம்பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் புனித ஹஜ் கடமையை முடித்து விட்டு தமது சொந்த ஊரான காத்தான்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் புலிகளினால் குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.இவ்வாறு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களில் பெண்கள், சிறுவர்கள் , குழந்தைகள் எனப் பலரும் அடங்குகின்றனர்.இச் சம்பவம் இன நல்லிணக்கத்திற்கு மோசமான ஒரு விளைவை ஏற்படுத்தியிருந்த நிலையில் மற்றொரு மிக கொடூரமான மிலேச்சத்தனமான சம்பவமாக காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் பதியப்பட்டது.
காத்தான்குடிமுதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்மா பள்ளிவாசல் உட்பட அதே பகுதியில் உள்ள மஸ்ஜிதில் ஹுஸைனிய்யா பள்ளிவாசல் ஆகியவற்றில் தோழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர்.பள்ளிவாசலுக்குள்ளே 103 பேரும் பின்னர் 21 பேருமாக மொத்தம் 124 பேர் இச் சம்பவங்களில் படுகொலை செய்யப்பட்டனர்.03.08.1990 அன்று இரவு
இவ்விரண்டு பள்ளிவாசல்களிலும் புனித இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது புலிகள் நடத்திய குண்டுத்தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகளினால் 103முஸ்லிம்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். அன்று வெள்ளிக்கிழமை இரவு புனித இஷாத் தொழுகைக்கான அதான் சொல்லப்பட்டதும், சிறியவர் பெரியவர் என அனைவரும் பள்ளியினுள் சென்று வுழுச் செய்து கொண்டு தொழுகைக்காக இமாமின் பின்னால் வரிசையாக நின்று தொழுது கொண்டிருந்த போது, புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து குண்டுத் தாக்குதலையும் நடத்தினர்.
இதன் போது பலரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது. புலிகள் பள்ளியினுள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை அங்கு கொண்டிருந்த பலரும் தெரிந்து கொண்டார்கள். பலர் படுகாயங்களுடன் மரணமடைந்தார்கள்.இப்பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வந்த சிலரை உள்ளே அவசரமாகச் செல்லுங்கள் என பள்ளிவாசலுக்குள் அனுப்பி விட்டு அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக பலர் இன்றும் தெரிவிக்கின்றனர்.
எங்கும் இரத்த வெள்ளமாகக் காணப்பட்டது.மரண ஓலங்கள் எங்கும் கேட்டன. தந்தை, மகன், ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று சகோதரர்கள் என்றெல்லாம் உறவுமுறையான பலரும் இதில் உயிரிழந்ததுடன் இன்னும் பலர் படு காயமடைந்தனர்.
பள்ளிவாசலில் இந்தத் தாக்குதலை மேற்கொண்ட புலிகள் தப்பித்துச் சென்றதையடுத்து குடும்ப உறவினர்கள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இவ்விரண்டு பள்ளிவாயலையும் நோக்கிச் சென்று உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரையுமே காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து காயமடைந்வர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் அவர்கள் பின்னர் மட்டக்களப்பிலிருந்து இலங்கை விமானப் படையினரின் விமானத்தின் மூலம் அம்பாறை மற்றும் கொழும்பு போன்ற இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்தவர்களின் குரல் பதிவு!
சம்பவ தினம் இரவு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமையினால் ஜெனரேற்றர் வெளிச்சத்தில் தொழுகை நடந்ததாக சம்பவததை நினைவு படுத்திக் கூறும் அப்துல் கரீம் மொகமது லாபீர்.
தாக்குதலுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூட்டுடன் கைக்குண்டு தாக்குதலையும் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் முழங்காலிலும், இரண்டு கைகளிலும் தான் காயமடைந்ததாகவும் கூறுகின்றார்
விடுதலைப் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இக் காலப் பகுதியில் ஏறாவூர், முள்ளிப்பொத்தானை மற்றும் அழிந்தபொத்தானை உட்பட கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையேயான உறவின் ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது.
தாக்குதலில் தப்பிய அப்துல் கரீம் மொகமது லாபீர்
அன்று ஏற்பட்ட பாதிப்பு 31 வருடம் கடந்தும் இன்னமும் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்கின்றார் மட்டக்களப்பு பல்சமய சமாதான ஒன்றியத்தின் துணைச் செயலாளரான ஐ.எம்.இலியாஸ் மெளலவி
முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவங்கள் கவலைக்குரியது எனக் கூறும் மனித உரிமைகள் சட்டத்தரணியும், சமூக ஆய்வாளருமான பேரின்பம் பிரேம்நாத் அந்த வடு அவர்கள் மத்தியில் இன்னும் மாறவில்லை என்கின்றார்
தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான இன உறவை பழைய நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பு சமய மற்றும் அரசியல் தலைவர்களின் செயல்பாட்டிலேயே தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்
இந்த சம்பவங்கள் நடந்து 31 ஆண்டுகளாகியும், இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த பல்தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அப்படியான நெருக்கமான உறவுகளும் பரஸ்பர நம்பிக்கையும் இன்னும் ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.(தகவல் பீபிஸி தமிழ்)
இச்சம்பவத்தில் ஊனமுற்று வாழும் ஒருவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
1990ம் ஆண்டு ஓகஸ்ட் 3ம் திகதி எனது தாயைப் பார்ப்பதற்காக நான் தாயின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன் அப்போது எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது. 58நாட்கள் நிரம்பிய குழந்தையும் எனக்கிருந்தது. அப்போது பள்ளிவாசவில் அதான் சொல்லப்பட்டு தொழுகை ஆரம்பமாகியது எனது தாயார். ‘தொழுகை ஆரம்பமாகி விட்டது. அவசரமாக பள்ளிக்கு சென்று தொழுது விட்டு வாருங்கள்’ என அனுப்பினார்.
அப்போது நான் மீரா ஜும்,ஆப்பள்ளிவாசலுக்கு வந்தேன். பள்ளிவாசலின் முன்வளவில் எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் நின்று கொண்டிருந்தார். நானும் அவரும் அவ்விடத்தில் பேசிக்கொண்டு நின்றபோது அந்த வீதியினால் ஆயுதம் தரித்த சிலர் வரிசையாக வருவதைக் கண்டேன். அச்சம் அடைந்த நாங்கள் அவசரமாக வுழுச் செய்து கொண்டு பள்ளிக்குச் சென்று தொழுகையில் இணைந்து சுஜுது செய்யும் போது பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
தொழுகையில் இருந்த பலர் சரிந்து விழுவதைக் கண்டேன். நானும் காயங்களுடன் விழுந்து விட்டேன். சிறுவன் ஒருவனும் விழுந்து கிடந்ததைக் கண்டேன்.
சில நிமிடங்களின் பின்னர் நான் உப்பட காயப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு.செல்லப்பட்டு அங்கிருந்து அம்பாறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டோம்.பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டு பல மாதங்கள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று இன்று ஊனமுற்றவனாக வாழ்ந்து வருகின்றேன்.
தாக்குதலின் பின்னரான சூழ்நிலை!
இன்றைக்கு 31 வருடங்கள் (1990-2021) கடந்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளை வெவ்வேறு கோணங்களில் எதிர்நோக்கி வருவது நாம் அறிந்தது.எல்லாப் பிரச்சினைகளுக்கும் பின்னணியில் இருப்பது அரசியலாகத் தான் இருக்கின்றது.உண்மையிலேயே சமூகத்திற்காக உழைக்கின்றவர்கள் குறைந்து ,சமூகத்தை காட்டிக் கொடுக்கின்றவர்கள் அதிகரித்து விட்டனர்.இவ்வாறான பிரச்சினைகளுக்கு இனவாதம் மாத்திரம் தான் காரணம் என கூறப்பட்டாலும் முஸ்லிம் சமூகத்தில் உள்ள சில பச்சோந்திகளும் ,காசுக்கு விலை போகின்றவர்களும் இதற்கு பிரதான காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.
ஒவ்வொரு பிரச்சினைக்குப் பின்னாலும் அதில் உள்ள உண்மைத் தன்மையை அறியாதும்,புரியாதுமாக பல கருத்துக்களை ஆவேசப்பட்டு முன்வைக்கின்ற விமர்சன சமூகமாக இன்று நாம் மாறியுள்ளோம்.
பல்லின மக்கள் வாழும் இந் நாட்டில் அனைத்தையும் இழந்து ,எதை பார்த்தாலும் போராடி வெல்லக் கூடிய இக் கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.ஒரு பிரச்சினை மேலே வர பழைய பிரச்சினையை மறக்கின்ற மறதி சமூகமாக நாங்கள் மாறியிருக்கிறோம்.இதை நாம் எப்போது சிந்திப்பது என்ற கவலையில் பல சமூக நோக்கமுடைய எழுத்தாளர்களும்,பேச்சாளர்களும் பேசிக் கொண்டிருக்கையில் சமூகத்தில் குழப்பத்தையும்,வீணான விடயங்களையும் பகிர்ந்து குதூகலமாக இருக்கக் கூடியவர்களாக நம்மில் பலர் மாறியுள்ளார்கள்.
எனவே நம்மில் மாற்றம் வரும் வரையில் அடுத்த சமூகத்தால் நாம் தொடர்ந்து அடிபட்டுக்கொண்டு தான் இருப்போம் என்று கூறுவதில் ஐயமில்லை.