பாகிஸ்தானுக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரிலிருந்து 7 நியூசிலாந்து வீரர்கள் விலகி ஐபிஎல் 2021-ல் பங்கேற்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததையடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாமுல் ஹக் கடும் கோபமடைந்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட், லாக்கி பெர்கூசன், கைல் ஜேமி ஆகியோர் உட்பட 7 முக்கிய வீரர்கள் பாகிஸ்தானுடனான தொடர் வேண்டாம் ஐபிஎல் தான் வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.இந் நிலையில் ஒரு நாட்டுக்கு சிறிய பலமற்ற அணியை அனுப்பி விட்டு மற்ற வீரர்களை ஐபிஎல்க்கு அனுப்புவது என்ன நியாயம் ஐசிசி என்ன தூங்குகிறதா என்று இன்சமாம் காட்டமாக கேட்டுள்ளார்.
செப். 1 முதல் ஒக்டோபர் 3 வரை பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளுடன் நியூசிலாந்து அணி ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடுகிறது, இதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது .ஆனால் பாகிஸ்தான் தொடரை புறக்கணித்து ஐபிஎல் போட்டிகளை 7 வீரர்கள் தேர்ந்தெடுத்தனர். இந்த 7 பேரும் உலகக்கோப்பை, டி20 நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்சமாம் கூறியதாவது:
எங்கு சென்று பாகிஸ்தான் ஆடினாலும் அல்லது பாகிஸ்தானுக்கு எதிரான எந்தத் தொடராக இருந்தாலும் எதிரணி முழு அணியாக இருப்பதில்லை. தென் ஆப்பிரிக்காவுகுச் சென்ற போது அப்படித்தான் அந்த அணியின் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு சென்று விட்டனர்.
இப்போது நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல்-க்காக சர்வதேச பாகிஸ்தான் தொடரை புறக்கணித்துள்ளனர். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக கொவிட் காரணமாக முழு இங்கிலாந்து அணியையும் மாற்றி வேறு அணி விளையாடியது.இதனால் பாகிஸ்தான் அணிக்கு போதிய பயிற்சி கிடைக்கவில்லை, காரணம் முக்கிய வீரர்கள் இல்லாததால் பாகிஸ்தான் அணிக்குத்தான் சிக்கல் ஏற்படுகிறது.
ஐசிசி என்ன தூங்குகிறதா, இதன் மூலம் ஐசிசி என்ன விடயத்தை சொல்ல விரும்புகிறது? வீரர்கள் தனியார் லீக்குகளில் விளையாட வாரியமே ஒப்புதல் அளிக்கிறது. அதாவது சர்வதேச தொடரை புறக்கணிக்க வாரியமே பச்சைக் கொடி காட்டுகிறது. இது சர்வதேச கிரிக்கெட்டை தரமற்றதாக்குவதாகும். தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு மட்டும்தான் இப்படி நடைபெறுகிறது என்றார் இன்சமாம் உல் ஹக்.
போல்ட், கேன் வில்லியம்சன், லாக்கி பெர்கூசன், ஜிம்மி நீஷம், சாண்ட்னர், டிம் செய்ஃபர்ட், கைல் ஜேமிசன், ஆகிய வீரர்கள் பாகிஸ்தான் தொடரைப் புறக்கணித்து ஐபிஎல் தொடரில் ஆடுகின்றனர். ஏற்கனவே பிசிசிஐ சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஐசிசி அது சர்வதேச கிரிக்கெட் சங்கம் அல்ல இந்தியாவின் கிரிக்கெட் சங்கம் என்ற கெட்டபெயரை சம்பாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.