பியாஸ் முஹம்மத்.
இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் இறப்பவர்களில் இன விகிதாசார அடிப்படையில் 16.7 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்படுகின்ற வாராந்த கொரோனா மரண அறிக்கையின் இறுதியாக வெளிவந்த 14/06.2021 முதல் 20.08.2021 வரையான வாரத்துக்கான பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
இந்தத் தகவல்களின் அடிப்படையில் 20 ஆம் திகதி வரை இலங்கையில் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக மரணித்த 6985 பேரில் 67.5 வீதமானவர்கள் (4710) சிங்களவர்களாவர். ஏனையவர்களில் 16.7 வீதமானவர்கள் (1164) முஸ்லிம்களாகவும், 12.2 வீதமானவர்கள் (849) தமிழர்களாகவும், 3.3 வீதமானவர்கள் (231) பறங்கியர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள், இனம் தெரியாதவர்கள் மற்றும் ஏனையோரின் எண்ணிக்கை 18 (0.3 வீதம்) எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் 10 வீதமாக இருக்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய விடயம் என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கொவிட் 19 தடுப்பூசியை முஸ்லிம்கள் அனைவரும் செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 24 ஆம் திகதி உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.